Translate

Wednesday, November 21, 2018

நெருக்கமான பத்து திரைப்படங்கள்

        மிக நெருக்கமான பத்து திரைப்படங்கள் இருப்பின் பதிவிடுக எனும் சவாலை நண்பர் விட்டிருந்தார், இதை சவாலென வகைமைப் படுத்தாமல் நான் தனிப்பட்ட முறையில் பாதித்த ரசித்த படங்களை குறிப்பிடுகிறேன். இதில் அனைத்து படங்களும் ஒரே வரிசையே ..
*சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயாகந்தனின் எழுத்தில் பீம் சிங் இயக்கிய திரைப்படம் (1977). மாற்று சினிமாவுக்கான பெரும் முயற்சி.
*கில்லா (killa) 2015ஆம் ஆண்டு வெளியான மராட்டிய திரைப்படம், பதின் வயதின் தனிமையை வலியை கண்ணீரற்று சொல்லும் படம், படத்தின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவினாஷ் அருண், மாசான்(Masan) படத்திற்கும் இவரே ஒளிப்பதிவு.
*போஸ்ட் மாஸ்டர், சம்பந்தி(sampanti), மோனிஹரா (monihara)..1960 களில் வங்காள மொழியில் வெளிவந்தது, மூன்றுமே தாகூரின் சிறுகதைகள், இதை சத்தியஜீத் ரே இதயத்திலிருந்து படமாகியிருப்பார்.
*திதி (thithi)- 2016 ஆம் ஆண்டு வெளியான கன்னட மொழி திரைப்படம். ராம் ரெட்டி இயக்கித்தில் ஒரு வாழ்வியல் அனுபவம். அந்த கதை மாந்தர்களை அருகே பார்த்த உணர்வு வரும்.
*நச்சோம்-ஐய-கும்பஸார் (Nachom-ia Kumpasar) 2015ஆம் ஆண்டு வெளியான கொங்கனி திரைப்படம், உலகதரத்தில் எடுக்கப்பட்ட மியூசிக்கல் டிராமா.. பரோட்டி இயக்கியது. அவசியம் பார்க்க கற்க வேண்டிய திரைப்படம்.
*அன்னையும் ரசூலும் (annaiyum rasoolum ) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளப் படம், ராஜிவ் இயக்கியது, நடிப்பதற்கு கை தட்டலாம் நடிக்காமல் இயல்பாய் இருத்தமைக்கு கொண்டாடலாம், பாஹத் பாசில் நடிப்பின் நாடியை தொட்டு பார்க்காமலே புரியும் மகா கலைஞன். ஆண்ட்ரியாவும் இணையாக வாழ்ந்திருப்பார். (பாசிலின் ஐயோபின்டே புஸ்தகம், தொண்டிமுதல் த்ரிஷ்யம் இன்னும் பல படகளில் அசாத்திய நடிப்பை காணலாம்)
*அங்காமலே டையரீஸ் (angamalay diaries) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம், லிஜோ எனும் மாபெரும் திரைமொழியில் காட்சியினூடே நம்மை வியக்க வைக்கும் ஒரு படைப்பு.
*வீடு - 1988 ஆம் ஆண்டு வெளியான ஒரு மென்மையான பூ ... பாலு சார் இயக்கத்தில் ஒவ்வொரு வீட்டின் கதைவை தட்டி உணர்வை தூண்டும் ஓர் உன்னதமான திரை கவிதை.. எம்.ஏ. சொக்கலிங்க பாகவதரின் சின்ன பார்வை போதும் நம்மை அழ வைக்க..
*உதிரிப்பூக்கள் - மகேந்திரன் சார் இயக்கத்தில் "சிற்றனை " சிறுகதையை திரைப்படமாக தீட்டும் தூரிகை மகேந்திரன் சாரிடம் மட்டுமே இருக்கிறது. புதுமைப்பித்தன் இருந்திருந்தால் இந்த படைப்பை சிலாகித்திருப்பார். தமிழ் சினிமாவின் முக்கிய விலாசம் இந்த படம். 'நண்டு' படத்தை விட்டு நம்மால் நகர இயலாது. மகேந்திரன் சாரின் மற்றொரு பூ...
* சபாபதி (1941) - ஏ.வி.எம்மால் இயக்கப்பட்ட முதல் முழு நீள நகைச்சுவை திரைப்படம். இன்றளவும் திகட்டாத படம், டி.ஆர்.ராமச்சந்திரன் தமிழின் பஸ்டர் கீடன்.. மறுமுனையில் ரத்தனம் போற்ற படாத கலைஞன்.. அவசியம் பார்க்க வேண்டிய படம்...
கேட்டமைக்கு மிக்க நன்றி ராகவ்..

100 லைக்குகள்..

            திடீர் ஓர் அழைப்பு "வாசக சாலைல இருந்து பேசுறோம், நீங்க யூ ட்யூப் சானல்ல புக் பத்தி பேசுவீங்க ன்னு சொன்னாங்க, எதாவது நாவல் பத்தி பேசுறீங்களா ??", நானும் சரி என்று சில நாவல்களை குறிப்பிட்டேன்.அதிலிருந்து, சிறு குழப்பத்துடன் அவர்கள்  சுஜாதா எழுதிய "வண்ணத்துப் பூச்சி வேட்டை " தேர்வு செய்தார்கள். நவ் 4 ஆம் தேதி பெரியார் நகர் கிளை நூலகத்தில் பேச வேண்டும், அதற்கான அழைப்பிதழ் வடிவமைப்பு செய்து என்னிடமும் முக நூலிலும் பகிர்ந்தார்கள், சிறு மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் நான் யாரிடமும் பகிரவில்லை ஒரு நாள் முன்னர் பகிரலாமென்ற எண்ணத்தில் இருந்தேன். சுஜாதாவின் நாவல் "வண்ணத்துப் பூச்சி வேட்டை" வாசித்து பல வருடங்கள் ஆனது, மறு வாசிப்பு கொடுத்தால் தான் சீராக பேசமுடியும். நவ 3 ஆம் தேதி இரவு 11 மணி வரை பேசுவதற்கான எந்த தயாரிப்பும்  மேற்கொள்ளவில்லை.
                      முதலில் "வ.பூ.வே" ஆரம்பித்தேன் அதனூடே மற்ற முக்கிய சுஜாதாவின் சிறுகதைகளையும் வாசித்தேன். ஒரு நாவலைப் பற்றியே பேசினால் பெரும் சலிப்பேற்படும் எனவே நாவலைகளின் வரலாற்றை பற்றிய குறிப்பு, பெரியார் நகர் பற்றிய வரலாறு, நிலம் சார்ந்த வரலாறு என குறிப்புகள் அடிக்கிக்கொண்டே போனேன். எல்லா தரவுகளையும் அதி காலை 4 மணிக்கு முடித்தேன், ஒரு மன நிறைவு ! அட .. உங்களிடம் நான் முக நூலில் பகிர்ந்தது சொல்லவில்லை, நவ 3 அன்றே காலையில் முகநூலிலும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாகவும் பகிர்ந்தேன், பெரும்பாலானோர் வாழ்த்தினார்கள். முகநூலில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட லைக்குகள் 10 க்கும் மேற்பட்ட பகிர்வுகள். இலக்கிய கூட்டத்திற்கு இவ்வளவு வரவேற்பென்பது அசாத்யமானதல்ல,  குறைந்தது 20 இலக்கிய ஆர்வலர்கள் வருவார்கள் என்ற நினைப்பு இருந்தது. எப்போதுமே இறுதி நேரங்களில் இது மாதிரியான நிகழ்வுக்கு தயார் செய்தால் தான் என் மனம் முழுமையடையும் ,அப்படியொரு மெண்டல் தனம்.
                        அங்க கட் பன்னேன்ல இப்ப திரும்பவும் தொடறேன்; 4 மணிக்கு தூங்கி 8 . 30 எழுந்தேன், பொறுப்புணர்ச்சியுடன் மறுமுறை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டேன். முதன் முதலில் எங்கள் பகுதி நூலகத்தில் பேச போகிறேன் என்கிற மகிழ்ச்சி மிக அதிகாமாக இருந்தது, எனக்கு எப்போதும் நெருக்கமானது மிதிவண்டி பயணம், எனது மிதிவண்டியை எடுத்து நூலகத்திற்கு சென்றேன், 10 . 30 திற்கு ஆரம்பிப்பதாக அழைப்பிதழில் கோடிட்டிருந்தார்கள் அதற்கு முன்னரே சென்றேன் ஒரு டீ அருந்திவிட்டு சரியான நேரத்திற்கு சென்றேன். அங்கு இலக்கிய சந்திப்பு மாதிரியான எந்த வித அறிகுறியும் தெரியவில்லை, 10 . 45 மணிக்கு பிரவீன் வாசிகசாலை பெரியார் நகர் நூலகத்தின் ஒருங்கிணைப்பாளர் வந்திருந்தார், அறிமுகம் செய்துக் கொண்டார். நானும் அவரும் மட்டும் இருந்தோம். 15 இருக்கைகளை கொண்டுவந்து சீரமைத்து வைத்தார். " என்ன கம்மியா ச்சார் போட்றாப்ல " என்ற மைண்ட் வாய்ஸ் கரகரத்த குரலில் ஒலித்தது.
                    11 மணி ஆனது நானும் பிரவீன் மட்டும் இருந்தோம், "சகோ .. உங்க பிராண்ட் சர்கில்ல கூப்டீங்களா ?? தீபாவளி வாரம் வேற .." என இழுத்தார். என் நண்பன் அருள் ஜோதி வந்தான் அப்பாடா என்றானது, இனிமே எல்லாரும் வர ஆரம்பிச்சிருவாங்க வடுக்கப்பட்டி ராமசாமி மொமென்ட் வர .15 நிமிடங்கள் கழிந்தது; நான் பிரவீன் அருள் ஜோதி மற்றும் 12 இருக்கைகள். "நீங்க ஆரம்பிங்க" என்றார் பிரவீன். நானும் பேச தொடங்கினேன், நான்கு நபர்கள் கூடினார்கள் அப்படியே கொஞ்சம் நேரத்தில் 2 நபர்கள், ஆகா மொத்தம் 8 பேர். அருள் ஜோதிக்கு அவ்வளவாக புத்தகத்தில் நாட்டமில்லை இருப்பினும் எனக்காக வந்தமர்ந்தான், ஒரு மணிநேரம் ஐந்து நிமிடங்கள் பேசினேன் அதில் முப்பதாகும் மேற்பட்ட கொட்டாவியை விட்டான்.
                    ஆக, சுஜாதாவின் படைப்புலகம் , நாவலின் பெரும் வரலாறும், புனைவெழுத்தின் ஆதியும் அந்தமும், நம் இடத்தின் வரலாறு, குயவர்களைப் பற்றி என அனைத்து பொருட்கள் வாங்கும் கடையாகக் கூவி முடித்தேன். அன்று வந்த சிலர் மிகவும் ஆழமாக சிந்திக்கும் பாங்குடையவர்கள், மிக நுட்பமாக கவனித்தார்கள்,ஆங்காங்கே கொட்டாவிகள் ஏற்புடையது தானே ! நான் பெரிய பேச்சாளன் அல்ல , சாதாரண டுபாக்கூர். அலாதியான மன நிறைவுடன் அங்கு வந்த ஒருவர் எனக்கு அருள் ஜோதி, பிரவீன் மற்றும் இன்னொரு அன்பருக்கு டீ வாங்கிக் கொடுத்தார், இனிதே சில நிகழ்வுகளை நேரிலே பார்த்ததுப் போல பேசி அன்றைய தினத்தின் சிறப்பான நொடி பொழுதிற்கு என்டு கார்டு போட்டேன், அருள் ஜோதியும் கிளம்பினான், வீட்டிற்கு சைக்கிள் பயணம் தொடங்கியது.
               அடடே ... மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன், நண்பன் விமல் நான் பேச ஆரம்பித்த 10 நிமிடங்களில் வந்தான், யாரையுமே நான் அழைக்கவில்லை அவன் வந்து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தான். ரெயின்போ FM இல் அவன் RJ வாக பணிபுரியம் போது எனக்கு பழக்கம், தமிழை அவ்வளவு இனிதாக பேசுபவன், அருமையான உச்சரிப்பு கொண்டவன். அவனின் தேடல் பெரியது , எங்கு இத்தகைய இலக்கிய சந்திப்பு நிகழ்ந்தாலும் சென்று அட்டெண்டென்ட்ஸை போட்டு எதாவது கற்று கொண்டு வரலாமா என்று எண்ணுபவன். விமல் வசிப்பது திருவள்ளூர் எனக்காகவே பெரம்பூர் வரை வந்தான், என் வீட்டின் அருகாமையிலுள்ள நெருங்கிய நண்பர்கள் கூட வரவில்லை. நெகிழ்ந்து போனேன், வரும் சொற்களால் நன்றி மட்டும் சொன்னேன். அவனிடம் எந்த வித எதிர்பார்ப்பும் அற்ற அன்பு இருக்கிறது அது அவனை வேறு தளத்திற்கு இட்டுச் செல்லும்.
                சரி முடிவிற்கு வருவோம், முகநூலில் 100 க்கும் மேற்பட்ட லைக்குகள், 10 கும் மேற்பட்ட பகிர்வுகள், வாட்ஸ் ஆப்பில் 100 கும் அதிகமானோர் எனது ஸ்டேட்டஸை பார்வையிட்டனர். இதில் 1 % மக்கள் வந்திருந்தாள் அந்த 15 இருக்கைகள் நிறைந்திருக்கும். எல்லாருக்கும் எல்லா வேலைகள் இருக்கும் அதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் அருகிலிருக்கும் நண்பர்கள் கூட எட்டி பார்க்கவில்லை அதிலும் சமூக ஊடகம் என்றுமே நம்பத்தக்கதல்ல அது மாயையின் மற்றோரு பரிணாமம். அந்த கரடி கதை போலவே , சில நேரங்களில் உண்மையை அந்த கரடியாக வந்து சொல்லும் அவர்களை நம்பாதே என. தனிப்பட்ட முறையில் 4 பேர் அல்லது  400 முன்னிலையில் பேசினாலும் தயாரிப்பில் ஒரே உழைப்பு , அதே புத்துணர்ச்சி இருக்கும்; மொத்தத்தில் சுஜாதாவின் படைப்புக்களை விட அருள் ஜோதி மற்றும் விமல் யார் என்று இன்னும் அதிகமாக புரிந்தது.

8.30 PM
04-11-18

Sunday, May 13, 2018

பயம்

நேரம் 22:50 - பூங்கா நகர் இரயில் நிலையம்,
பெருமோட்டம்.
சென்ட்ரல் இரயில் நிலையம்
23:00 மணி பட்டாபிராம் சைடிங்
மின் தொடர் பிடிக்க ,
அவ்வளவு நெரிசலில்லை
சென்ட்ரல் வாசலில் வேகமாய் சேர்ந்தனன்,
பதட்டம்
பயயுணர்வு
மெட்டல் டிடெக்டரை நெருங்க
வியர்வை வழிய
சலனத்துடன் கடக்க யோசித்தேன்,
என் ஜோல்னா பையில்
"அப்பாவின் துப்பாக்கி" புத்தகம்..

Monday, April 30, 2018

மின்னுவதெல்லாம் நம்பிக்கைதான் !!

மின்னுவதெல்லாம் நம்பிக்கைதான் !!

       கடந்த/இந்த மாதம் 21 வது காமன் வெல்த் போட்டிகள் கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று இனிதே முடிவுற்றது . 71 நாடுகள்,  4426 வீரர்/வீராங்கனைகள்,19 விளையாட்டில் 275 நிகழ்வுகள்  என  விளையாட்டு  திருவிழாவாக கோலாகலமாக  ஏப்ரல் 4 முதல் 15 வரை  சிறப்பாக நடந்தேறியது, ஒலிம்பிக்ஸ் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதே பாணியிலே காமன் வெல்த் போட்டிகளும் நடைபெறுகின்றன.ஒலிம்பிக்ஸ் அளவிற்கு நாடுகள் பங்கேற்பதில்லையென்றாலும்  இது வருகிற ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது. நிறைவுபெற்ற போட்டிகளில் பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்,இங்கிலாந்து இரண்டாவது , இந்தியா மூன்றாவதாக இடத்தைப் பிடித்தது.சரி ! ஒரு சின்னதா முன்னோட்டம் கொடுத்தாச்சு..

           கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம், ஒரு யானைப்போல மற்ற விளையாட்டுகளை விழுங்கிவிட்டது என்றே துணிச்சலாக சொல்லலாம், நம்மில் பலருக்கு இந்த காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா எத்துனை விளையாட்டில் பங்குபெற்றது , அதில் எவ்வளவு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வென்றன என்பது தெரியாது , இது ஒரு குறைகூறல் அல்ல. நிதர்சனம். கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனேரியோவில் நடந்த ஒலிம்பிக்சில் இந்திய வெறும்  இரண்டே பதக்கங்களைக் கைப்பற்றியது, சாய்னா நேவால் (இறகு பந்து ) வெள்ளி  , சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்) வெண்கலமும் வென்றார்கள். 100 கோடி ஜனத்தொகை கொண்ட நாட்டில் 2 பதக்கங்கள் என விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் கிழித்து தொங்கவிடப்பது. நம் ஊடங்கங்கள் வணிக தளத்தில் சிக்கி கிரிக்கட்டையே பிரதானப்படுத்தும் நிலை முழுமையாக மாறினால் மட்டுமே மற்ற விளையாட்டின் மீது வரும் தலைமுறையினருக்கு ஈர்ப்பு ஏற்படும். இங்கு கிரிக்கெட்டைப் பகையாக குறிப்பிடவில்லை பெரும் பாரா முகம் நிலவுகிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்காக குறிப்பிடுகிறோம்.

           26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்களோடு பட்டியயலில் மூன்றாம் இடத்தைப் பிடித்து செம்மையாக நமது போட்டியாளர்கள் செயல்பட்டனர், 216 வீரர்/வீராங்கனைகள் 15 விளையாட்டுகளில் களம் கண்டனர், அனைவரும் முழு உத்வேகத்துடன்  போட்டியிட்டனர்.  குறிப்பிடும் விதமாக தடகளத்தில் ஒரே ஒரு தங்கம் , ஈட்டி எரிதலில் நீரஜ் சோப்ரா முதல் முறையாக தங்கம் வென்று சாதனைப் புரிந்தார். இவரின் பங்களிப்பு மிகவும் அளப்பறியாதது. ஏனெனில், நாம்  தடகளத்தில் பெரியதாக இதுவரை சோபித்ததேயில்லை, இந்திய தடகளத்திற்கு இது ஏறுமுகமே !  இந்த ஆண்டு அதிக பட்சமாக துப்பாக்கி சுடுதலில் 7 தங்கம் , 4 வெள்ளி , 5 வெண்கலம் என மொத்தமாக 16 பதக்கங்கள் கொண்டு அசத்தியது, இதில் சிறப்பு 16 வயதுடைய இளம் வீராங்கனை மனு பேக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் தங்கம் வென்றார் இதே போன்று 15 வயதாகும்  அனிஷ் பன்வாலா ஆடவருக்கான 25 மீட்டர் ராபிட் பயர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார், பதக்கம் வென்ற இளம் வயது இந்தியர் எனும் பெருமை இவரையே சார்ந்தது.குத்துச்சண்டை , டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் என எல்லா போட்டிகளிலும் கடந்த ஆண்டுகளை விட நல்ல முன்னேற்றம் தென்பட்டது.
             மகளிர் இம்முறை ஆடவருக்கு இணையாக பதக்கங்களைக் குவித்துள்ளனர், மொத்தத்தில் ஆண்கள் 13 தங்கம் , பெண்கள் 12 தங்கமும் பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. வளர் இளம் தலைமுறை பெண்களுக்கு மேரி கோம், சாய்னா நேவால், சிந்து, மாணிக் பத்ரா, பூனம் யாதவ், மனு பேக்கர் போன்ற இன்னும் பல பெண்கள் முன்மாதிரியாக விளங்கியிருக்கின்றனர்.

தமிழகத்தின் பங்கு :

        சதிஷ் சிவலிங்கம் வேலுரைச் சேர்ந்தவர், பளு தூக்குதலில் தங்கம் வென்றார்.மிகவும் எளிய குடும்ப பின்னணியிலிருந்து இந்தியளவில் சிறந்து விளங்குவது மெச்சத்தக்கது, இவர் 2014 யில் நடைபெற்ற கமான் வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்குவாஷில்  தீபிகா பள்ளிக்கல், ஜோஷ்னா சின்னப்பா மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்கள், இவ்விருவரும் தொடர்ந்து தமிழகத்திற்கு இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த வண்ணம் உள்ளனர், இவர்களைப் பார்த்து இளம் சிறார்கள் ஸ்குவாஷ் மீது அதிகம் ஈர்ப்பு கொண்டு பயிற்சி மேற்கொள்வது மிக மகிழ்ச்சியூட்டுகிறது. சரத் கமல் , சத்யன் மற்றும்  அமல்ராஜ் டேபிள் டென்னிஸில் வெள்ளியும் வெண்கலமும் என இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவுகளில் வென்று அசத்தினர், நம் தமிழக வீரர்கள் இந்தியளவில் மட்டுமல்லாது உலகளவில் சிறந்து விளங்குவது நமக்கு தானே பெருமை.

         ஒட்டுமொத்தத்தில் நடந்து முடிந்த போட்டிகளில் இந்தியா மல்யுத்தம், பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல் , குத்துச்சண்டை , இறகு பந்து என சிறப்பாக விளங்கினாலும் சைக்ளிங், ஜிம்னாஸ்டிக்ஸ் , லான் பௌல்ஸ், நீச்சல் மற்றும் பாஸ்கெட்பால் போட்டிகளில் இரண்டு சுற்றுகள் கூட முன்னேற வில்லை என்பது வருத்தமளிக்கிறது. IOA - இந்தியன் ஒலிம்பிக் சங்கம் சோபிக்காத விளையாட்டுகளின் முடிவுகளை வைத்து ஒரு பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும், இன்னும் அதிக முயற்சிக்கொண்டு சிறந்த திறமைகளைக் கண்டறிவது அவர்களின் கடமை, நூறுகோடிக்கும் மேலுள்ள மக்கள்தொகையில் திறமைசாலிகளே இல்லையா என்பது கேள்வியெழுப்புகிறது. சில உட்கட்ட அரசியல் அங்கும் உலவுகிறது, இதை முறியடிக்க அனைத்து விளையாட்டுகளிலும் ஊடக வெளிச்சம் தேவைப்படுகிறது. ஊக்குவித்தால் மட்டுமே நாம் வருகிற 2020 டோக்கியோ ஒலிம்பிக்சில் முழு வீச்சுடன் செயல்பட முடியும் எனபது உண்மை.

"ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன் கூட
தேக்கு விற்பான் "  என்ற வாலியின் வரிகள் கொண்டு வெளிச்சம் படராத விளையாட்டுகளை ஊக்குவிப்போம், வரும் தலைமுறையினருக்கு வழிவகுப்போம் !! இந்த கமான் வெல்த் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் 2020 யின் நம்பிக்கையில் மின்னுகிறார்கள்...

Saturday, April 7, 2018

வெடிப்புறப் பேசு - நெய்தலின் பிணி

வெடிப்புறப் பேசு - நெய்தலின் பிணி
 
70 % சதவீதமான ஏற்றுமதி இறக்குமதி கடல் சார் வழியில் நடைபடுகிறது;வர்த்தக பொருளாதாரம் மேம்படும்,பலருக்கு பெரும் வேலைவாய்ப்பு,இன்னும் அதிகப்படியான முதலீடுகளும் கார்போரேட் ஞாயங்களும் என பல வஞ்சரம் மீன்களை நெய்யில் தோய்த்து மசாலாவுடன் பொரித்து வாயில் வைப்பது "சாகர் மாலா" திட்டம்,{கடல் மாலை திட்டம்}. இந்த திட்டை 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார், உலகம் சுற்றும் முதியவர் அதீத முனைப்போடு முதல் கட்ட வேலையை கவனித்து வருகிறார்.
சாகர் மாலா திட்டம் என்றால் என்ன ??
இது துறைமுக மேம்பாட்டு திட்டம் , 6 + துறைமுகங்கள் பெரியளவில் கட்டுவதற்கும் மற்ற துறைமுகங்களை இணைப்பதற்காக இரயில், சாலை, வான்வழி என பல உட்கட்டமைப்புகளை கட்டமைத்து வருகின்றனர், இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை உபயோகித்துக்கொள்ளாம், முக்கியமாக பெட்ரோலிய மற்றும் குளிர்பதனக் கிடங்குகளும், பொருட்கள் சேமிக்கும் கிடங்குகளும் அதிக பரப்பளவில் அமைப்படுகிறது . இதில் இராணுவ தளவாடங்களும் அடங்கும். குஜராத்திலிருந்து ஒரிசா வரை இந்த திட்டம் செயல்படும்.
இதெல்லாம் யாருக்கு நன்மை பயக்கும் ??
கார்பொரேட் முதலிகளுக்கும் அதை சார்ந்து நக்கி பிழைக்கும் ப்ரோக்கர்களும் தான், இதெல்லாம் கட்டமைக்க கடலோர கிராமங்களே இவர்களது தேர்வு,மீனவர்கள் பெரும் அளவில் பாதகத்துக்கு உள்ளாவார்கள். மீன் வளம் குன்றும்,எப்படி கூடங்குளத்தில் கடல் சுற்று சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அவ்வண்ணமே இவர்கள் கோரும் இடங்களில் ஆகும். எப்படி விவசாய இடங்களை அபகரித்து விவசாயிகளை அலைக்கழித்தார்களோ அதே நிலை தான் மீனவ தோழர்களுக்கும். இந்த திட்டத்தின் மதிப்பீடு "8 லட்சம் கோடி" நம் ஒவ்வொரு பிரஜை பாகட்டிலிருந்து 5000 ரூபாய் உங்களுக்கு தெரியாமையே எடுக்கப்படுகிறது. அதிகளாவிய இன்னல்களை தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் வருக 49 மீனவ கிராமங்கள் அவதிக்குளாகப் போகிறது.

தமிழகத்தில் …
பூம்புகார் CEZ
Linked to Cuddalore port.
Stretched from Cuddalore, Perambalur, Ariyalur, Tiruchirappalli, Thanjavur and Thiruvarur to Nagapattinam districts
South CEZ
Linked to Chennai Port, Kamarajar Port and Kattupalli Shipyard.
Stretched from Thiruvallur and Chennai to Kancheepuram districts

Friday, April 6, 2018

காக்க முட்டை - நுண் பார்வை




                      தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் சராசரியாக 300 க்கும் மேற்பட்ட படங்கள் தயாராகிறது அதில் 150 முதல் 170 படங்களே திரை அரங்குகளில் கதவுகளை தட்டுகிறது அதிலும் 20 படங்கள் மட்டுமே ஜெயிக்கிறது அப்படியே ஜெயித்த படங்களெல்லாம் மனதில் நிற்கிறதா என்பது சந்தேகமே! அப்படி பட்ட படம் "காக்கா முட்டை". 2 மணி நேரம் நாம் அடி தட்டு மக்களின் சூழலை வாழ்வியலை திரை முன்னே காட்டும் படம். எவ்வாறு குழந்தைகள் திணிக்கப்படும் விளம்பரங்களால் பாதிக்கப்படுகிறார்கள் அதிலும் குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் அது எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது, ஒரு தந்தை செரியில்லையெனில் அந்த குடும்பத்திலுள்ள குழந்தைகளின் பரிதவிப்பு, ஏக்கம் எத்தகைய வினையை உருவாக்கும் ;குப்பம் மக்களின் மேல் பெரும்பாலானோர் பார்க்கும் பார்வை, அவர்களிடம் அதீத மனிதமும் அறமும் இருக்கிறது என பல இயல்புகளை இந்த படம் நம்மிடையே உறக்கச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
Irony
# காசு கரி ஆகுதுன்னு சொல்லுவாங்க ஆனா இந்த படத்துல கரி காசாகும்.
# அரிசி ஸ்டாக் இல்ல ஆனா இரண்டு டிவி கொடுப்பாங்க.
அறம்
# ஒன்னு உனக்கு இன்னொன்னு எனக்கு இன்னொண்ணு காக்காவுக்கு ..
# அக்கா இந்த watch ஆஹ் எடுத்துக்கவா ?? -எதுவாக இருந்தாலும் கேட்டு எடுப்பது
# காசுக்காக ட்ரெயின் foot board ல் அமரும் ஆட்களின் செல் போன் அடித்து திருடுவதர்காக பெரிய காக்கா முட்டை கட்டையுடன் காத்துக் கொண்டிருக்க சட்டென மனம் மாறி கட்டையை கீழே போடுவது.
# பானி பூரியையும் வாங்கி கொடுத்து மேலும் அவர்களிடம் இருந்த பணத்தையும் கொடுத்து அந்த பணக்கார சிறுவர்களிடம் இருந்து புது ஆடைகளை வாங்கி வருவார்கள்.
# லோகேஷ் மாடி வீட்டு பையன் எப்போதுமே ஒரு வேலியில் உள்ளே இருப்பான், இந்த இரண்டு சிறுவர்களை காட்டிலும் ஒவ்வொரு காட்சியிலும் உயரத்திலே இருப்பான்.
#விளம்பரத்தால் திணிக்கப்படும் கூற்றுகளால் குழந்தைகள் மற்றும் மக்கள் எவ்வாறு ஆட்கொள்கிறாரகள். ஒரு காட்சியில் FM இல் டீ தூளில் மணம் திடம் குணம் என்ற விளம்பரத்தை விமர்சிப்பதை ambience ஆகா சொல்லி இருப்பார்கள்.(53 mins )
# ஒரு பாதியில் vote எழுதி கொண்டிருப்பான் மீதி பாதியில் காக்கா முட்டைகள் சுவரை சுரண்டுவார்கள் சுண்ணாம்பு முகத்தில் விழும் - என்ன தான் நாங்க vote போட்டாலும் நீங்க சுரண்டறது சுரண்டறது தான்...
# கரி அள்ள போகும் போது எப்பவுமே பெரிய காக்க முட்டையை கரி பையை வைத்திருப்பான் அதுமட்டுமில்லாமல் அவன் பின் தான் செல்வான் சின்ன காக்கா முட்டை - வீட்டுக்கு மூத்தவன் குடும்ப பொறுப்பை சும்மப்பவன்.
#சிட்டி சென்டர் மைலாப்பூர் எனும் அட்ரெஸ்ஸை முதலில் பெரிய காக்கா முட்டை சொல்வான் சிறியவனுக்கு பிறகு பஸ்ஸில் (45 B) பெரிய காக்கா முட்டை மறக்கையில் சிறியவன் பெரிய காக்கா முட்டைக்கு சொல்வான் - இதில் இரண்டு பேரின் பரஸ்பரம் விட்டுக் கொடுத்தாலும் தெரியும்.
# படம் முழுவதும் யாருக்கும் தங்களது இயற் பெயரே கிடையாது, மாடி வீட்டுப்பையன் லோகேஷ் தவிர அது கூட ஒரு காட்சியில் சின்ன காக்கா முட்டை தன் அம்மாவிடம் சொல்வான் "மா .. லோகேஷ் வீட்டு நாய் மூஞ்சி சப்பையா இருக்குமா .. 25000 ரூபாயாம்". ஏன் பெயரில்லை ?? நம்மில் பல காக்கா முட்டைகளும் பழ ரசங்களும் நைனாக்களும் இருப்பதால் தான்.
# கடேசிக் கட்டத்தில் பீசா கடையின் ஊழியர் அடித்த பிறகு சிறுவர்கள் சின்ன காக்கா முட்டையும் பெரிய காக்கா முட்டையும் கரி அல்ல போகும் போது கிண்டல் செய்வார்கள் "திரும்பி பீசா துன்ன போறீங்களா?" அந்த காட்சியுடன் கேமரா அங்கே நின்று விடும் அந்த இரண்டு சிறுவர்களும் frame ஐ விட்டு வெளியே செல்வார்கள் - ஷாட் மூலம் கதை சொல்லும் பாணி, இத்துடன் சிறுவர்கள் காணாமல் போக போகிறார்கள் என்பது. பின்னர் அவர்கள் கிடைத்து அம்மாவிடம் சேரும் போது கேமராவை நோக்கியே ஓடி வருவார்கள். அத்துடன் கேமரா எங்கும் அலையாது எல்லாம் சீராயிற்று எனும் சொல்லும் ஷாட் பாணி.
# நம்மக்கு தெரியாமலே நம்மைப் பற்றி விவாதித்து பிழைப்பு நடத்தும் ஊடகத்தை சாடி இருப்பார்கள், காக்கா முட்டைகள் நடந்து வரும் போது ,புதிய தலைமுறை செய்தியாளர் பேசிக் கொண்டிருப்பார், அருகில் உள்ளவன் அந்த சிறுவர்களை ஆதிக்க உடல் மொழியில் அவர்களை விரட்டுவார்.
# இறுதி காட்சியில் சின்ன காக்க முட்டையும் கரி அள்ள பை எடுத்து தன் அண்ணனுடன் செல்வான் அதற்கு முன்னர் அவன் இரவில் தூங்கியவாறே சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிடுவான் அதிலிருந்து பெரியவன் ஆகிவிட்டான் என்பதை குறிக்கும்,அதே போல் அவன் "நிறைய சம்பாதிக்கணும் டா, அப்பா வ வெளிய கொண்டு வரணும், சம்பாரிச்ச பணத்துல பழ ரசத்துக்கு குடுக்கலாம்" இந்த வசனத்தில் அவர்களின் உன்னதமான மனதை இருவரியில் அடக்கி இருப்பார்கள் .
நுட்பமாக கவனிக்க :-
# பாட்டி இறந்த பின் ஒரு மஹாலக்ஷ்மி விளக்கு எரிந்து கொண்டிருக்கும் , அதன் திரி ஒலி துல்லியமாக கேட்கும் .
# பாட்டியின் இளமை கால படமொன்று அந்த வீட்டின் சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் அதிலிருந்த காக்கா முட்டையும் அவர்களின் அம்மாவும் பாட்டி வீட்டில் தங்குகிறார்கள் எனும் பதிவு அங்கே ஏற்படுகிறது
‌# நாம் திரைப்படங்களை எவ்வளவு கவனமாக பொறுப்புணர்ச்சியுடன் எடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு காட்சி சொல்லாமல் சொல்லும் , சிம்புபின் சிலம்பாட்டம் படத்தை பார்த்து அந்த சிறுவர்கள் அப்படியே நடிப்பார்கள்.

ஓய்ந்திருக்கலாகாது பாப்பா !!

~~~ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா !! ~~~


                         "என் பையனுக்கு 6 வயசு தான் ஆகுது. அதுக்குள்ளாற ஐ-பேட்ல எல்லா கேம்ஸ் ஆடுறான்",
"அட நீங்க ஒன்னு  , என் பொண்ணு டவுன்லோட் பண்ண கத்துக்கிட்டு அவளாவே இன்ஸ்டால் பண்றா " என்ற பெற்றோரின் புகழ் பாடும் உரையாடலை எங்கோ நாம் கேட்டிருக்க கூடும். ஒரு காலக்கட்டத்தில் அம்மா/அப்பா பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் இன்று எங்கிருந்தோ சுட்டக்  கதைக் கூட சொல்ல நேரமில்லாமல் ஓடுகிற வாழ்க்கையில் நிதானமாக ஐ-பேடையும் அலைபேசியும் குழந்தைகளிடம் கொடுத்து சந்தர்ப்பத்திற்கு தப்பிப்போரின் எண்ணிக்கை அதிகம். தாய் தந்தை கைச்சூட்டின் கதகதப்பில் இருப்பதைக் காட்டிலும் அலைபேசியின் சூட்டில் காய்ந்துக்கொண்டிருக்கும் கைகள் ஏராளம்.  இதனால், குழந்தைகள் மந்தமான சூழலுக்கு தள்ளப்படும் நிலை இன்று நிலவுகிறது.
           இத்தைகைய  போக்கினால் கைபேசியில் வரும் வெளிச்சம் கண்களுக்கு தேவையில்லாத சிரமத்தைத் தரும் அதுவுமில்லாமல் அதன் கதிர்வீச்சு உடல் ரீதியான சில கேடுகளை விளைவிக்கும். குழந்தைகள்  முதல்  வளர் இளம் பருவம் மற்றும் பெரியவர்கள்  வரையில் விளக்கைத் தேய்க்கும் அலாவுதீன் போல கோடிக்கணக்கான அலாவுதீன்கள்  இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் நேராக விஷயத்திற்கு வருவோம் .
              குழந்தைகளுக்கு இன்று அவசியம் தேவைப்படுவது ஏதோ ஒரு விளையாட்டில் நாம் சேர்ப்பது நன்மை பயக்கும், கட்டாயமாக விளையாட்டின் முக்கியத்துவமும் புரிதலும் பெற்றோர்கள் அறிய வேண்டும். இன்று சிறு பொறிகருவியின் (GADGETS) ஆதிக்கம் ஓங்கியிருக்க, நம் பிள்ளைகளின் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தியாவில் ஒரு கொடியே நாற்பது லட்சம் குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்  பட்டிருக்கிறார்கள் எனும் புள்ளி விவரம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது .குழந்தைகளுக்கு வியர்வை வருவது வீட்டில் மின்சாரம் துண்டிக்கும் போது மட்டுமே என்பது வருத்தமளிக்கிறது.

         வரும் விடுமுறை நாட்களில் உடல்  உழைப்போடு செயல்படும் எதாவது ஒரு விளையாட்டில் நமது பிள்ளைகளை சேர்த்துவிட்டால் அவர்களின் எதிர்காலத்திற்கு நீங்கள் வித்திடும் பாதையே அவர்களின் எதிர்காத்திற்கு வழிவகுக்கும்.

குழந்தைகள்/சிறார்கள் விளையாடினால் ஏற்படும் நன்மைகள் என்று பார்க்கும்போது : -

# விளையாட்டில் வெற்றி தோல்வியால் ஏற்படும் மனப்பக்குவம் எந்த சூழலிலும் சமநிலையோடு பார்க்கும் தன்மை ஏற்படும்.

# படிப்பில் அதீத கவனத்தோடு செயல்படுவார்கள்.

# பலரிடம் பழகும் வாய்ப்பு உண்டாகும். அதன் வெளிப்பாடாக மேடை பயமோ தெரியாத மனிதர்களோடு சகஜமாக பேசும் ஆற்றல் இயல்பாக வரும்.

# வகுப்பில் சக மாணவர்களிளிடையில் ஏதோ ஒரு விளையாட்டில் இருப்பின் ஒரு நல்ல முன் உதாரணமாக திகழ்வார்கள்.

# மன அழுத்தம் குறையும், சுறுசுறுப்பு மேலிடும்.

#  இக்கட்டான சமயங்களில் தாங்கள் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமாக இருக்கும்.

# ஆளுமை, மன உறுதி , உத்வேகம் , நட்பு பாராட்டல் , தன்னமிக்கை, மதிக்கும் பண்பு என அனைத்தும் சீர் பெற்று வளரும்.

# மிக முக்கியமாக உடல் தோற்றமும் வலிமையும்  மேம்படும்.

         
                 இப்படியாக நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம், குழந்தைகள் சேட்டை செய்யாமல் இருக்க நாம் வீடியோ கேம்ஸ் அல்லது கைபேசியை அவர்களிடம் கொடுத்து சமாளிக்கும் பெற்றோர்கள் எப்படியான விளைவுகளை அவர்கள் உருவாக்குகிறார்கள் என்பது அவர்களே அறியாத ஒன்று; நாளைடைவில், இதனால் குழந்தைகள்/ சிறார்கள் ஒரு செயலுக்கு அடிமையாவதன் மூலக் காரணம் பெற்றோர்களாகவே இருக்கின்றனர். சரி அலைபேசியோடு அடிமையாக இருக்கும் குழந்தைகளை என்ன செய்வது என்று கேட்டால் அவர்களை திசை திருப்புவதே ஒரு உகந்த செயல். எப்படி திசை திருப்புவது என்று நீங்கள் கேட்பது கேட்கிறது ! மேற்கூறியவற்றை மனதில் கொள்ளுங்கள் , 'விளையாட வைப்பதே' சாலச் சிறந்தது. குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு மைதானத்திற்கு செல்லுங்கள், விளையாடும் குழந்தைகளை நேரில் பார்க்கட்டும். அதனால், அவர்களுக்கு ஓர் உன்னத உத்வேகம் உண்டாகும், அவர்களும் அதில் பங்கேற்க பெரும் விசை மனதில் எழும். இதை முயற்சி செய்து தான் பாருங்களேன். மாற்றம் உண்டாகும் ங்க ..
                 பாரதி எழுத்தில் தீட்டிய, " ஓடி விளையாடு பாப்பா" படித்தால் மட்டும் போதுமா ? இங்கு பள்ளிகளில் விளையாட்டிற்காக ஒதுக்கப்படும் நேரங்களும் கூட முடிக்காத பாடம் எடுக்க ஆசிரியர்கள் முனைவது நிதர்சனமான உண்மை. 'இன்றே செய் அதை நன்றே செய்' எனும் பழமொழிக்கு தகுந்தாற் போல இன்றே நம் பிள்ளைகளிடத்தில் சிறு பொறிகருவிகளை (GADGETS) சற்றே தள்ளி வைத்து விளையாட்டை அருகாமையில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். உங்களால் விலை உயர்ந்து பொருட்செலவு அதிகமா இருக்கும் விளையாட்டில் சேர்க்க இயலவில்லை என்றால் பரவாயில்லை, நம் பாரம்பர்ய விளையாட்டான சிலம்பம் கபடியில் சேர்க்கலாம் அதில் அவ்வளவு பொருட்செலவு கிடையாது. இதையும் பாரமாக கருதுவாராயின் குறைந்த பட்சம் அருகில் இருக்கும் பூங்காவிற்கு கூட்டி செல்லுங்கள் ஓடி விளையாடட்டும்.