காட்சி-1 ~டீ கடை~ மாலை
நண்பன் ராஜனை பார்க்கலாம் என காத்துக் கொண்டிருக்கிறார் அடையாளமாய்
இருக்கிற சரஸ்வதி திரையரங்கின் கணக்கர் (அக்கவுண்டண்ட்) சிவ
பிரகாசம்,சரஸ்வதி திரையரங்கம் மாலாக உருமாற பிரகாசம் வெளியேறி ஆறு மாதங்கள்
ஓடியது, கணக்கராக வேலை கிட்டாதநிலையில் வேறு பணிப்புரிய தன்மானம் ஒரு
ஸ்கோயர் பீட் கூட இடம் கொடுக்க மறுத்தது, ராஜன் ராயப்பேட்டையிலுள்ள ஒரு
டயர் நிறுவனத்தின் துணை மேலாளர், பிரகாசத்தின் பழைய நண்பன்; முதலில்
கணக்கர் வேலை ஏதேனும் இருந்தால் அவனிடம் கேட்க வேண்டும், என் நிலை
அறிந்தால் அவன் துடித்துவிடுவான் எனும் கவலையும் இருந்தது மேலும் பி.எப்
பணம் வாங்கும் விதி வைகைகளை கேட்டறியலாம் என்ற பல மன ஓட்டத்தில் டீ கடை
முன் நின்று கொண்டிருந்தார்.
இருபது நிமிடங்கள் கழிந்தும் ராஜன் வரவில்லை, ஒரு போன் செய்யலாம் என பிரகாசம் அழைத்தார்.
"ஹலோ ராஜி.. ?? "
"'I got my first real six-string ,Bought it at the five-and-dime
Played it 'til my fingers bled, Was the summer of '69...summer of '69 ' .. ஹலோ .. எஸ்.பி 2 மினிட்ஸ்"
சிறிது நேரத்தில் ராஜன் வந்தார் அவருடன் தனது மூன்று சகாக்களும்
வந்திருந்தனர்,தனியாக பேசலாம் என்று நினைத்திருப்பார் போலும் முகத்தில்
பிரகாசம் இழந்தார் பிரகாசம்.
"என்ன எஸ்.பி எப்படி இருக்க ?? நல்ல இன்க்ரீமெண்ட் போலயே , செழிப்பா இருக்க " என நகைத்தார்.
தனது நண்பர்களை அறிமுகம் செய்தார்.
உண்மையான நண்பன் குரலை வைத்தே நட்பதிகாரத்தின் குறளாவான் சிறந்த நண்பன்.
"ராஜி , நாலு டீ சொல்லுவா ?? "
"டேய் .. ஐஞ்சு சொல்றா, இங்க நாலு பேர் இருக்கோம்,பர்ஸு டெஸ்க் ல வெச்சிட்டேன்... பாத்துக்கோ "
"ராஜன் .. அட இருங்க , நான் தரேன்" என்றார் மூன்றில் ஒருவர்.
"அட , வைங்க பாசு.. மச்சான் இருக்கான்" .
பிரகாசம் டீ சொல்லி அருகே வந்தார்,
வழக்கமான விசாரிப்பின் பிறகு பிரகாசம் "தோ, வந்திடரேன் ராஜி " என மறைவாக போனார்.
மூன்று பேரில் ஒருவர் "அவசரமோ" என குத்தினார்.
பிரகாசம் மறைவான இடத்தில் அவசரமாக தன் பர்ஸை எடுத்து பிரித்து பார்த்தால்
முப்பது ரூபாய் மட்டுமே இருந்தது, ராஜன் மட்டும் வருவான் என்று
நினைத்திருந்தார். அவர் வாழ்வில் இல்லாத சில்லறையை இது வரை தேடியது இல்லை
அன்று தேடினார், அவர் அறியாமல் கண் கலங்கியது. இப்படியே ஓடி விடலாமா என
யோசித்தார், ஏதோ ஒரு பொய் சொல்லிவிடலாம் எனும் எண்ணத்துடன் கண்களை துடைத்து
நகர்ந்தார்.
ஒரு மனிதனுக்கு தன்மானம் சுயமரியாதை கிணற்றிலிருக்கும் ராட்டினமும் கயிரையும் போல, இரண்டும் எங்கும் சிக்கிக் கொள்ள கூடாது.
"எஸ்.பி எவளோ நேரம் டா ... டீ அறுத்து பார்.." என்றார் ராஜன். அமைதி
காத்தார் பிரகாசம்,அனைவர் முன்னே எப்படி சொல்வதெனும் பெரிய மன போராட்டம்;
வேலை கேட்பதா,பணம் இல்லை சொல்வதா, ராஜனுக்கு அசிங்கமாகிவிடுமா எனும் பல
கலகங்கள் அவர் குடிக்கும் டீ யுடன் சேர்ந்து சென்றது.
கூச்சலுக்கும்
அலறலுக்கும் மத்தியில் "சார்ர்ர் " என ஒருவர் பிரகாசத்திடம் வணக்கம்
வைத்தார், " எப்படி இருக்கீங்க " அதே கூச்சலுடன்.
திகைத்தார் பிரகாசம்,
"யோவ் மாஸ்டர் , இவரு கிட்ட துட்டு வாங்கின உன் வாய் சைடு வங்கிக்கும் " .
"சார் .. நான் வரேன் .. டீ சாப்ட்டு கிளம்புங்க , ஸ்கூல் சவாரி விட்டு வரேன்.."
" மாஸ்டர்ர்ர்ர் .." என்ற கணீர் தொனியுடன் ஆட்டோவில் போனான்.
:CUT TO
எட்டு மாதங்களுக்கு முன்
காட்சி -2 வேறு இடம்- டீ கடை காலை-11.30
பிரகாசம் மற்றும் திரையரங்கு ஊழியர் விஸ்வமுடன் டீ குடித்துக்கொண்டிருந்தார்,
"பிரகாசம் ணே, மால் ஆவப்போதுமே .. என்ன பண்ணப் போற ??"
"வேற ஜோலி பாக்கணும் டா.."
அருகாமையில் ஒருவர் மெது வடை சாப்பிட்டுக்கொண்டிருந்தார், தனது சட்டை
பையில் இருந்த வெத்துக் காகிதத்தில் எண்ணெய் கையை துடைத்து எரிந்து,
விரைவாக ஆட்டோ எடுத்து கிளம்பலானார். பிரகாசம் துடைத்த காகிதத்தை உற்று
பார்த்தார் , அது நூறு ரூபாய் தாள் சட்டென்று அதை எடுத்து அந்த ஆட்டோ காரரை
உரக்க அழைத்தார் ஆனால் ஒரு பயனுமில்லை. ஆட்டோ உருண்டு செல்ல ஆரம்பித்தது.
"பிரகாசம் ணே.. காலைல நரி மொகத்துல முழிச்சிருக்க ணே ... " என்றான் விஸ்வம்.
"அட .. இரு டா .." என அவர் வந்த வாகனத்தை எடுத்து வேகமாக ஆட்டோவை மடக்கினார்.
"என்னங்க .. ரூபாய்க்கும் காகிதத்துக்குமா வித்யாசம் தெரியல.. இந்தாங்க " என பிரகாசம் சொன்னார்.
"என்ன சார் சொல்றீங்க ??" என கேட்டார் ஆட்டோ.
மறுமுறை தெளிவாக சொன்னனர் கணக்கர்.
"சார், இன்னிக்கி மிஷின் எடுத்துட்டு வர்ல, கொஞ்சம் சத்தமா சொல்லுங்க " என்றார் ஆட்டோ.
பரிதாபமும் கவலை சூழ உரக்க குரலில் தெளிவு படுத்தினார் பிரகாசம்.
நெகிழ்ந்து சொன்னார் ஆட்டோ "சார்.. இந்த நூறு பா தான் ஆட்டோக்கு பெட்ரோல் இல்லாட்டி இந்த செவிடன் எங்கையோ நின்னிருப்பான்.."
சிறிய புன்முறுவலுடன் அங்கிருந்து சென்றார் பிரகாசம்.
"ணே .. ஏன் இந்த வேண்டாத வேல .. டொக்கு பீஸ் ணே நீ " என விஸ்வம் சலித்துக்கொண்டான்.
அமைதியாக சிரித்து " வா டா .. போவோம் " என்று நகர்ந்தார்.
:CUT TO
காட்சி -1 ~(நீட்சி) டீ கடை~ மாலை
வியப்புடன் ராஜனும் அவரது நண்பர்களும் இருந்தார்கள், "காட்டு காத்து
கத்தறான் .. குட் பிரெண்ட்ஸ்" என்று பகடி செய்தார் ராஜன். அதனூடே எல்லோரும்
சிரித்தார்கள்.
பிரகாசமும் சிரித்தார், பூதாகரமாக சிரித்தார், மற்றவர்கள் அமைதியானார்கள்.
"எதிர்பார்ப்பு இல்லாத செயல்ல தெய்வம் இருக்கும் டா .." என சொல்லி புறப்பட்டார் நிறைந்த மனதுடன் காலி பர்ஸுடன்.