Translate

Wednesday, March 25, 2020

Photoworks

பேராசிரியரும் செல்வம் ஐயாவும்...

பேராசிரியரும் செல்வம் ஐயாவும்...
அன்று நல்ல வெயில் நாள், வழக்கமாக டீ அருந்தும் கடைக்கு வருவார் 'அண்ணா குரல் செல்வம்' அவர்கள், அவர் பெயர் காரணம் எளிதில் புரிவதே, அண்ணா குரலில் இம்மி பிசகாமல் பேசுவார் , 70 களில் பல கழக மேடைகளில் அவர் மிளிரிந்துக் கொண்டே இருந்தார். எப்போதும் முன்னேற்றங்கள் எல்லாராலும் ஏற்கக் கூடியவையாக இருப்பதில்லை , செல்வம் ஐயா மீது திராவகம் வீசி பாதி முகம் , கண் பார்வை போனது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் கழகத்திற்கு அவரால் முடிந்த வரையில் உழைத்துக்கொண்டு இருக்கிறார். அந்த வெயில் நாளில் செல்வம் ஐயா அவர்கள் என்னை பேராசிரியரிடம் அழைத்து சென்றார் . நியூ ஆவடி ரோட் வாட்டர் டேங்க் தாண்டி வரும் இட புறமாக திரும்பும் சாலையில் சற்றே ஒரு வளைவுடன் பேராசிரியர் வீடு வந்தது.
இன்றும் என் நினைவில் அந்த மதியம் நிழலாடுகிறது, தி.மு.க கொடி பறக்க , யாருமற்ற வீட்டில் உதவியாளர் முகப்பில் இருந்தார், அண்ணா குரல் செல்வம் பார்த்ததும் உள்ளே அழைத்து சென்றார். இரண்டு அறைகளை கடப்பதற்குள் அரை நூற்றாண்டின் ஒட்டு மொத்த திராவிட அடையாளங்களை பார்க்க நேர்ந்தது , சி. நடேசன் முதல் கலைஞர் வரை, ஆயினும் கலைஞரின் காணக் கிட்டாத படங்கள் ஆட்பரித்தது.
அவரரையில் நுழைந்தேன் தயில வாசம் நிறைந்திருந்தது, மரக்கட்டிலில் படுத்திருந்தவர் செல்வம் அவர்கள் குரலைக் கேட்டு மிகவும் வாஞ்சையாக "வாயா .. செல்வா .. ரொம்பா நாளாச்சு ஆள காணோம்" என்றார். " தண்ணி பிரச்னை .. நம்ம வட்டத்துல லாரி செரியா வரல அதுக்காக அலைரத்துக்கே நேரம் போய்டுது.. " என செல்வம் கூறினார். இருவருக்குமான நட்பு 60 ஆண்டுகள் மேலிருக்கும். என்னையும் அறிமுகம் செய்து வைத்தார் , சிறு நிமிடங்கள் உரையாடினேன், போட்டோ எடுக்க இன்னும் சிலர் வந்தனர் , போட்டோவுக்கு சிரித்தார் அனைவரும் நகர்ந்தனர். திடீரென என்னை நோக்கிய பேரா வின் குரல் "என்னப்பா .. நீ போட்டோ எடுத்துக்களையா ? "
"என் போன்ல கமெரா இல்ல ஐயா" என சொன்னேன்.
"இங்க வா.. ஒக்காரு " என்றார் . இதற்கு முன்னர் பெயரென்ன கேட்டவர் , என் வேலையை பற்றி , பத்திரிகை தொழிலை ,புத்தகங்கள் என இன்னும் சில நிமிடங்கள் நீடித்தது.
" மொபைல் ஏதாவது ரிப்பேரா ?"
"இல்லங்க யா.. ரொம்ப வருஷமா இந்த மாறி போன் (nokia 1100) தான் வெச்சி இருக்கேன்".
"அப்போ.. உன் நேரத்தையும் காசையும் மொபைல் சாப்பிடரதில்ல.. "
அண்ணா குரல் செலவம் சிரித்தார் , நானும் சிரித்தேன். என்னை அறியாமல் அவரது காலைத் தொட்டு வணங்கினேன்.
"உடம்பு சுத்தமா முடில , அப்பறமா வா.. பேசலாம்" என்றார் . அப்பொழுது அவருக்கு 95 வயது , 2017 ஆகஸ்ட் மாதம்.
எல்லாருக்கும் மதிப்பு கொடுப்பது சிலரை கண்டுகொள்வது என்றுமே தலைமைக்கான அடையாளம் , அந்த வயதிலும் தொழில்நுட்பம் குறித்தான பார்வை, மக்களின் பங்கு என அனைத்தும் பேராவிடுமிருந்து உணர்ந்தேன். அன்பும் பண்பும் நிறைந்த மனிதர்கள் எல்லாராலும் போற்றப்படுவார்கள்.
இன்று அண்ணா குரல் செலவம் அவர் வீட்டின் வெளியே எங்கோவோரு நடைமேடையில் தன் நண்பனை நினைத்துக் கொண்டிருப்பார். பேராசிரியர் போல சிலர் தான் , செலவம் போல பலர் இருக்கிறார்கள், அவர்களை உயிரிலும் மேலான உடன் பிறப்புகள் கண்டுகொள்ள வேண்டும். அண்ணா குரல் செல்வம் , கழகத்தின் குரல். கழகத்திற்காக தன் அன்றாட வாழ்க்கையை இழந்தவர். இன்றும் அவரது பார்வையற்ற கண்ணில் இருந்து வரும் கண்ணீர் தனது கடேசி நண்பன் "அன்பழகனுக்காக"....