Translate

Tuesday, April 25, 2017

வாழ்க்கைத் துணைநலம்



மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

     ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்படுகிறது எனும் குறுஞ்செய்தி வந்தவுடன் சாவரிக்காக காத்திக்கிடந்து கந்தன் செய்தி வந்த எண்ணிற்கு அழைத்து பேசினார், விரைந்து மருத்துவமனைக்கும் சென்றார், இருபத்தி எட்டு வயது இளைஞருக்கு இருதய அறுவைசிகிச்சைக்காக என்பதை அறிந்தார். அந்த இளைஞரின் தந்தை விம்மி புலம்பி அழுதுகொண்டிருந்தார் "சம்பாரி..சம்பாரி னு எவளோ பிரஷர் குடுத்தா அவன் பொண்டாட்டி  ... ஐயோ...ஐயோ."

                    கந்தன் ரத்தம் கொடுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினார், தனது ஆட்டோவில் செல்லும் போது அந்த தந்தையின் அழுகுரல் உடன் வந்தவாறே இருந்தது, அப்பொழுது தன் மனைவியை பற்றி சிந்திக்கலானார், ஆட்டோ ஒட்டிக்கொண்டு தானே பேசினார் " டெய்லி 500 ரூபா கெடச்சா பெரிய விஷயம், இதுவரைக்கும் அவ நேத்து ஜாஸ்தியா இருந்துது இன்னைக்கி கம்மியா இருக்கே ன்னு சொன்னது இல்ல, நான் குடுக்கற காச வெச்சி தான் குகன்க்கு ஸ்கூல் பீஸ் , புக்ஸ் லாம் வாங்கி தறா, சமைக்கிறா, சேத்து வெச்ச
காசுல சீட்டு போடுறா, அவள இதுவரைக்கும் பாராட்டி பேசுனதே இல்ல அவ அருமை இப்பதான் தெரியுது, அவ உண்மையான வாழ்க்கை துணை.

Friday, April 21, 2017

மானம்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

  "அந்த ஷாட்டுக்கு  லென்ஸ் வேற மாத்தணும், டெலி யூஸ் பண்ணு " என்று சொல்லி நகர்ந்தான் ராஜேஷ், பார்த்த மாத்திரத்தில் பலுக்கலை (Lens) சொல்லக்கூடியவன், அற்புதமான நிழற்பட கலைஞன்; அந்த நிறுவனமே ராஜேஷை நம்பி ஓடிக்கொண்டிருந்தது. மேலும் நிறுவனத்தில் அவனுக்கு அனைத்து சலுகையும் நல்ல சம்பளமும் அளித்தனர். ஒரு நாள் விடுப்பெடுத்தால் நிறுவனமே ஸ்தம்பித்த சூழல் உருவாகும், ராஜா வாக வாழந்து வந்தான் ராஜேஷ் !
      "என்ன இருந்தாலும் முதலாளிக்கு இப்படி துரோகம்  பண்ணியிருக்க கூடாது  அவன்.. " என ஒரே எதிரொலியாக நிறுவனத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது.
       "என்னையா , ராஜேஷ் ,.. நம்ம கம்பனிக்கு வர விளம்பர ஆர்டர் லாம் அவன் சொந்தக்காரன் கம்பெனிக்கு திருப்பி விட்றானமே"  என்ற பேச்சை முதலாளி காதிலே விழ, அதீத மனம் வருந்தினார.ராஜேஷை தனது அறைக்கு வர சொன்னார். இரண்டு நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை முதலாளி எதுவும் சொல்லாமல் " ஒன்னும் இல்ல ராஜேஷ் .. வேலைய பாருங்க " என்று தயக்கத்துடன் சொல்லி அனுப்பினார்.
          எல்லா கூற்றையும் தெரிந்த ராஜேஷ் அமைதிகாத்தன் மனம் வருந்தினான், அடுத்த நாளிலிருந்து அவன் அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லவில்லை, உதறிவிட்டான்; அலைபேசி வந்தது அவனை பணிக்கு வர கூறி இருப்பின் அவன் முடிவில் நின்றான். ஏன் இந்த முடிவு என அவன் தங்கை கேட்கையில் அதற்கு " ஒரு வேலை அதுல நம்மதான் ராஜா, நம்மளால தான் பண்ண முடியும்ன்னு இருந்தாலும் அந்த இடத்துல ஒரு சின்ன இழிவு ஏற்பட்டுடுச்சினா அங்க இருக்குறது தான் இழிவு அதனால நஷ்டம் எவளோ ஆனாலும் செரி..அதான் வெளிய வந்துட்டேன் " என்றான் ராஜேஷ் .
       
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

          

Wednesday, April 19, 2017

வான் சிறப்பு


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

          அவன் தேர்ந்த திறமைசாலி, நல்ல கதைசொல்லி ஒரு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனனாக பணியாற்றிக்கொண்டிருந்தான்.என்றுமே எதிர்பாராத அந்த நாள் வந்தது, அவன் தன் இயக்குனர் எடுத்த காட்சியில் பிழையை கூறினான், இயக்குனருக்கு அது தவறில்லை எனவும் தன்  அகம்பாவத்தையும் காட்டினார். அவனுக்கு சாபமிட்டார் 'ஒரு போதும் உனக்கு படம் இயக்க வாய்ப்பே கிடைக்காது' என. அவ்வார்த்தைகளை அடுப்பாங்கறை மூளையில் தூசிக்கு நடுவே சொருகினான். அவன்  பெருமுயற்சியுடன் ஒரு கதையை தயார் செய்தான் ஒரு நடிகரும் ஒப்பந்தமானார் ஆனால் தயாரிப்பாளர் கிட்டவில்லை; மனம் தளராது போராடினான் இப்பவும் கிடைக்கவில்லை ஜனங்களிடம் வசூல் (Crowd funding) செய்து படம் துவங்கலாம் என்ற முயற்சியுடன் ஆரம்பித்தான் கணிசமான தொகை வந்தது, படப்பிடிப்பு ஆரம்பமானது; படம் முடிந்து வெளியானது, மாபெரும் வெற்றி, வசூல் சாதனை படைத்தது; அவன் பெரிய இடத்திற்கு சென்றான், அடுத்த படம் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் ஒப்பந்தமானான்; அவனுடைய இயக்குனர் பணத்தட்டுப்பாடு வந்தது அதை கேட்டதும் அவன் பணம் தர முற்படவில்லை ஆயின் அவருக்கு பல வாய்ப்புகள் வரவழைத்து பணம் புழக்கம் அதிகம் பெற செய்தான், இது அந்த இயக்குனருக்கு தெரியாது. இப்படியேயாக போக அந்த மாநகரில் பேரிடர் மழை வெள்ளம், மக்கள் அவதிப்பட்டனர் சிறிது நாட்களில் சற்று சீரானது ஆனால் பலர் வீடில்லாமல் இருந்தார்கள், அவன் வீடிழந்தவர்கள் என நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு  சென்று பணம் கொடுத்துதான் அவனிடம் கடேசி ரூபாய் இருக்கும்வரை கொடுத்தான்.
    அவன் உதவியாளன் "சார், வேஸ்ட் சார் நீங்க; எதுக்கு தேவ இல்லாம உதவி செய்றீங்க"
  அதற்கு அவன் " உதாரணத்துக்கு , கடல்ல இருந்து மழை மேகம்  உருவாகுது, சரியான நேரத்துல மழை பெய்யல்லனா கடல் கூட வத்தி போய்டும் அப்படி தான் இதுவும்.."

Monday, April 17, 2017

~ரசனையாளன்~

~ரசனையாளன்~


காரிருளில் திடமான நட்சத்திரங்கள்,
மின்னிக்கொண்டிருக்கும் தெரு விளக்குகள்,
அடர்ந்த இரவில் பேன் போல நகர்கிறேன்;
நடைபாதை வியாபாரி கடையை மூடி கற்பூரம் கொளுத்த,
அப்பிரகாசத்தில்
பச்சை நிற சில்க் புடவையில் வெள்ளையான திருநங்கை
எதையோ துறக்கிறாள்;
பாஞ்ச் ருப்பியே குலஃபி ஐஸும்,
மலையாள தம்பதியும் காதலின் வெளிச்சமா காமத்தின் இருளா ??
ஒட்டும் போஸ்டர்களின் பசைக்கு தெரியும்
ஒட்டிய கையின் பசியை;
இரவில் போதையா
போதையில் இரவா ??
எங்கும் இளையராஜா,நிலவு இல்லா நாளிலும்;
நிசபதமும் ஓங்கார அமைதியும்
சத்தம்போடும் சிறு பூச்சியும்
கொசுக்கடி தூக்கத்தின் நடுவே
ரசனையின் உச்சமாய்
இரவின் மிச்சமாய்
மின்மினயாய் வண்டி ஊர்ந்தது;
வண்ணம்புரியாத விளக்குகள் விட்டு விட்டு எரிய,
வண்டியை யாரோ நிறுத்தினார்,
"ஊதுங்க" என்றார் ..
ரசனையின் ரசம் குப்பென போனது....

Wednesday, March 15, 2017

அனுபவங்கள்

நல்ல சினிமா, வான் கோப் / ட்ரொட்ஸ்கி மருது ஓவியங்கள், பீத்தோவன் 9th சிம்பொனி, பிடித்த பாடல்கள், சில மூட்டையில் புத்தகங்கள், நெருங்கிய நண்பனிடம் 2 நிமிட உரையாடல், நண்பனின் பழைய புகைப்படம், அம்மாவின் டீ, மிதிவண்டியில் நீண்ட பயணம், பேருந்தில் ஜன்னல் சீட், பழைய பாதுகை, மை பேணா, கிறுக்கிய பழைய பேப்பர், பிராபஜனின் குமாரசாமியின் பகல் பொழுது சிறுகதை, யாரும் பார்க்காத போது சத்தம் போட்டு அழுவது, மேகம் நகர தெரியும் நிலா, முகமறியாதவன் சிரிப்பு, வேகமாக வந்து ஸ்டாண்ட் எடுங்க ன்னு சொல்பவரின் குரல், முச்சந்தி விநாயகரிடம் உச்சு கொட்டும் பள்ளி குழந்தை, மரங்களினூடே வெயிலின் கீற்று, ரமலான் மாதம் மசூதியின் ஒலி பெருக்கியில் ஒளிரும் வேண்டுதல்கள், கற்பூர இலையின் வாசம்,
என (,) கம்மாக்கள் நிறைந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையில் கலக்கம்/தோல்வி/வருத்தம்/ஏக்கம் என பல வருமாயின்...

மேலே* இட்டுள்ளவையில் இரண்டோ மூன்றோ கிடைத்தால் போதும் ...
வாழ்க்கை ஒரு மாயப்பெட்டியின் ஒளிந்திருக்கும் ஆச்சர்யம்!!
many tiny things can lift you in many ways !!
*உங்களுக்கு தகுந்தாற் போல

~ஒரு நாய் கதை~

~ஒரு நாய் கதை~


ஏதோ ஓர் ஊரில் பல நாய்களில் இதுவும் பிழைத்துக் கொண்டிருந்தது, ஊரிலுள்ள விதி நாய்கள் தேங்காயை உருட்டி கொண்டு ஒவ்வோர் வீட்டில் சேர்க்க வேண்டும், அப்படியே எல்லா நாய்களும் ஏன் உருட்டுகிறோம் எதற்கு உருட்டுகிறோம் என்பதை அறியாமல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நாய்க்கு தேங்காயை உருட்டவும் உடைக்கவும் தெரியும் ஆதலால் இதை இன்னும் அதிகம் இப்பணியை புரிய வேண்டும் என்றும்,அதற்காக பெரிய ரொட்டி கிட்டும் என ஊர் வீட்டுக்கார்கள் தெரிவித்தார்கள். இருப்பினும் அந்த நாய்க்கு உருட்டுவதும் உடைப்பதும் பிடிக்கவில்லை, இதற்கு பிடித்ததெல்லாம் அருகம்புல்லுடன் இருக்கும் விநாயகர் சிலையையே பார்ப்பது அங்கு கிடைக்கும் சுண்டல் வைத்து காலம் தள்ளலாமென நினைத்ததை எதிர்த்தனர் ஊர்க்காரர்கள். மீண்டும் எதிர்க்கையில் அந்த நாய் மீண்டும் அதையே கூறுகையில் கல் அடியும் வாலில் தீ வைப்பும் நிகழ்ந்தேறியது.
வேறு வழி இல்லாமல் அதே உருட்டல் உடைத்தல், அதன் எண்ணவோட்டம் புரிந்த சில நாய்களில் ஒன்று அந்த சுண்டல் போதுமா என வினவியது, அதற்கு அந்த நாய் "அந்த அருகம்புல்லும் வசியம் பொதிந்த அவ்விநாயகருக்காக தேங்காய், பழம் உருட்டும்/எடுத்து கொடுக்கும் வேலை செய்ய வேண்டும், அதற்காக அந்த இரண்டு மூன்று சுண்டல்களே போதும், வயிறை விட மனசு நிறைவதே போதும்" என்றது.
சில நாய்கள் இதற்கு கோரஸாக மூன்று முறை குலைத்தது (அதன் மொழியில் இங்கு குலைத்தத்துக்கான அர்த்தம் - சிரிப்புடன், இந்த நாய் அடி வாங்கியே சாவப்போது).
ஒரு காலக்கட்டத்தில் இந்த நாயை மனிதர்கள்(ஆணோ/பெண்ணோ உங்கள் ஊகத்தில்) ஏமாற்றினார்கள், உறுதியாக விநாயகர் கோவில் அருகே தனி வீடு தருவோம் என வாக்களித்து ஆசையை தூண்டினார், அதுவும் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு தன் சக்தியை மீறி உருட்டி உடைத்தது. இறுதியில் மனிதர்கள் வேலை முடிந்தவுடன் சரமாரியாக கல்லைக் கொண்டு எறிந்தார்கள்.மண்டையில் வழிந்த இரத்தம் கண்ணீருடன் கலந்து ஓடியது, கோவம் பூண்ட நம் நாய் வெறியுடன் தாக்க முற்பட்டு இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு வலிக்குமே என நினைத்தது பைத்தியம் பிடித்த நம் நாய்.
ஒரு நாள் அருகம்புல் வாசத்துடன் சேர்ந்திருக்க வேண்டும் என எண்ணி கனவினூடே இரத்தம் சொட்ட கால்கள் நொண்ட உருட்டுகிறது.

நாய்கள் மனிதர்களா இல்ல மனிதர்கள் நாய்களா ??

குறுங்கதை :அப்போ நரி இப்போ காக்கா (March 8 Special)

குறுங்கதை : அப்போ நரி இப்போ காக்கா (March 8 Special)


சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்..
கோடானகோடிக் கணக்கான ஆலமரங்கள் இருக்குமிடம் அது, வயோதிக அல்லது நடுவயது பெண்மணி வடை சுடுவது வழக்கம், அந்த வடையில் நல்ல நார்ச்சத்தும், சத்துமிக்க தானியங்களும் அடங்கும். ஒரு மரத்திற்கு நிறைய காகங்கள் இருப்பது வியப்பில்லை. அவ்வடையை காகங்கள் எடுத்துச் செல்லும்,
அதை பார்க்கும் அப்பெண்மணிகள் "வடை பத்திரம் கீழே விற்றாதே" என கூறுவது இயல்பே. அப்படியாக ஒரு காகம் வடை
யை வாயில் கவ்வி சென்றது,யாருமற்ற கிளையில் வாடையுடன் அமர்ந்தது. அதை நோட்டம் விட்ட நரி வடையை அபகரிக்க அந்த கிளையின் கீழே நின்றது. "இந்த கானகத்துல உன்ன காகம் னு கூப்பிடறதவிட பட்டு ன்னு கூப்பிடணும்னு தோணுது" என்றது நரி.
காகத்திற்கு ஒரு பக்கம் வெட்கம், மகிழ்ச்சி என பல உணர்ச்சியின் குளியலில் சிலிர்ப்பி கொண்டிருந்தது.
மீண்டும் நரி " உன் முகத்துல ஏதோ அழுக்கு மாறி இருக்கு" என்றது.
அதற்கு காகம் தன் காலின் உதவியுடன் சுத்தம் செய்தது.
நம்ம நரி சும்மா விடுமா!
"பட்டு .. கொஞ்சம் கிட்ட வா, நான் செரி செய்யறேன் " என்றது நரி.
அந்த அமைதியான கானகத்தில் காகம் தன்னை மறந்து நரியின் பேச்சில் மயங்கி அருகே சென்றது, நரி வடையை லாவகமாக எடுத்து அழுக்கை எடுக்கிறேன் என சொல்லி காக்காவுக்கு அழகு குத்தி ஓடிப்போனது. காகம் காயத்துடன் அழுத்துகொன்டே இருந்தது....
முப்பது ஆண்டுகளுக்கு பிறகு ..
கோடானக்கோடி கணக்கான சிறு மரங்கள்,செடிகள் இருக்கின்ற இடமாக உருமாறியது. நடுவயது பெண்மணி வடை சுடுவது வழக்கம், அது இன்ஸ்டன்ட் வடை, சத்திருக்குமா என்பது சந்தேகமே ! ஒரு மரத்திற்கோ செடிக்கோ ஒன்றோ இரண்டோ காகங்கள் இருப்பது வியப்பே இல்லை.அவ்வடையை காகங்கள் எடுத்துச் செல்லும், ஒரு போதும் அப்பெண்மணிகள் கண்டுக்கொள்வதே இல்லை இது இயல்பே.அப்படியாக ஒரு காகம் வடை வாயில் கவ்வி சென்றது,கூட்டம் அடர்ந்த கிளையில் வாடையுடன் அமர்ந்தது. அதைக்கண்ட நரி அந்த கிளையின் கீழே நின்றது. அந்த நரியிடம் இரண்டு பண் பொட்டலம் இருந்தன, எப்போதுமே வடையை பார்த்தால் நரிகளுக்கு ஈர்ப்பு தான் !
வைத்த கண் வாங்காமல் வாயில் வடையுடன் இருக்கும் காகத்தை பார்த்துக் கொண்டிருக்க, திடீரென காகம் வடையை தன் காலின் கீழே வைத்து நரியை பார்த்து
" டியர் ... " என்றது
"நான் பாஃஸ், டியர் இல்ல " என அசடாக கூறியது நரி..
"ஷாப்பா... உன்ன செல்லமா கூப்பிட்டேன், அங்க வரேன் இரு .." என காகம் கூறி நரியின் அருகே சென்றது.
நரிக்கு ஒரு பக்கம் வெட்கம், மகிழ்ச்சி என உணர்ச்சியின் குளியலில் சிலிர்ப்பி கொண்டிருந்தது. வடையை ருசித்து விடவேண்டும் எனும் எண்ணம் இருந்தது.
காகம் அருகே வந்து "இந்த கானகத்துல உன்ன நரி னு கூப்பிடறதவிட செல்லம் ன்னு கூப்பிடணும்னு தோணுது" ..
சிரிப்பும் ஆனந்தமும் கலந்து தன் காலால் கோலமிட்டு கொண்டிருந்த நரியிடம் இருந்த இரண்டு பண்ணையும் லாவகமாக எடுத்து பறந்து கிளையில் அமர்ந்தது காகம். நரிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது "இப்படி ஏமாத்திட்டியே .. காக்கா..உன்ன கடிக்க போரேன் பாரு " என்றது.
அதற்க்கு காகம் "இது சாமர்த்தியம் ஏமாத்துறது இல்ல.. நீ வடைக்கு ஆசைப்பட்டவன்னு எனக்கு தெரியும், இந்தா பொழச்சிக்கோ ..." என ஒரு பண்ணை தூக்கி எரிந்தது. காகம் வடையுடனும் பண்ணுடன் பறக்க விருந்ததது.
"ஏய் காகமே !! " என கூவியது நரி.
பறந்து கொண்டே காற்றில் நின்ற காகம் "என்னா ??" என கேட்க ,
"ஹாப்பி ஒமென்ஸ் டே (HAPPY WOMENS DAY)" என சொன்னது நரி ..
சிரித்தே பறந்தது காகம் ..