Translate

Sunday, May 24, 2020

இது எதுவோ..

மாடி வைன்ஸ் ,
பகார்டி லெமன்
சில லைட்ஸ் ,
உணவர்வுகளின் சப்தங்கள் ,
எங்கும் இளையராஜா ,
சிறு மௌனம் ,
நினைவுகளுக்கு அவள் ,
இந்த மரணத்திலும்
ஒரு சுகமுண்டு நண்பா..

Wednesday, March 25, 2020

Photoworks

பேராசிரியரும் செல்வம் ஐயாவும்...

பேராசிரியரும் செல்வம் ஐயாவும்...
அன்று நல்ல வெயில் நாள், வழக்கமாக டீ அருந்தும் கடைக்கு வருவார் 'அண்ணா குரல் செல்வம்' அவர்கள், அவர் பெயர் காரணம் எளிதில் புரிவதே, அண்ணா குரலில் இம்மி பிசகாமல் பேசுவார் , 70 களில் பல கழக மேடைகளில் அவர் மிளிரிந்துக் கொண்டே இருந்தார். எப்போதும் முன்னேற்றங்கள் எல்லாராலும் ஏற்கக் கூடியவையாக இருப்பதில்லை , செல்வம் ஐயா மீது திராவகம் வீசி பாதி முகம் , கண் பார்வை போனது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் கழகத்திற்கு அவரால் முடிந்த வரையில் உழைத்துக்கொண்டு இருக்கிறார். அந்த வெயில் நாளில் செல்வம் ஐயா அவர்கள் என்னை பேராசிரியரிடம் அழைத்து சென்றார் . நியூ ஆவடி ரோட் வாட்டர் டேங்க் தாண்டி வரும் இட புறமாக திரும்பும் சாலையில் சற்றே ஒரு வளைவுடன் பேராசிரியர் வீடு வந்தது.
இன்றும் என் நினைவில் அந்த மதியம் நிழலாடுகிறது, தி.மு.க கொடி பறக்க , யாருமற்ற வீட்டில் உதவியாளர் முகப்பில் இருந்தார், அண்ணா குரல் செல்வம் பார்த்ததும் உள்ளே அழைத்து சென்றார். இரண்டு அறைகளை கடப்பதற்குள் அரை நூற்றாண்டின் ஒட்டு மொத்த திராவிட அடையாளங்களை பார்க்க நேர்ந்தது , சி. நடேசன் முதல் கலைஞர் வரை, ஆயினும் கலைஞரின் காணக் கிட்டாத படங்கள் ஆட்பரித்தது.
அவரரையில் நுழைந்தேன் தயில வாசம் நிறைந்திருந்தது, மரக்கட்டிலில் படுத்திருந்தவர் செல்வம் அவர்கள் குரலைக் கேட்டு மிகவும் வாஞ்சையாக "வாயா .. செல்வா .. ரொம்பா நாளாச்சு ஆள காணோம்" என்றார். " தண்ணி பிரச்னை .. நம்ம வட்டத்துல லாரி செரியா வரல அதுக்காக அலைரத்துக்கே நேரம் போய்டுது.. " என செல்வம் கூறினார். இருவருக்குமான நட்பு 60 ஆண்டுகள் மேலிருக்கும். என்னையும் அறிமுகம் செய்து வைத்தார் , சிறு நிமிடங்கள் உரையாடினேன், போட்டோ எடுக்க இன்னும் சிலர் வந்தனர் , போட்டோவுக்கு சிரித்தார் அனைவரும் நகர்ந்தனர். திடீரென என்னை நோக்கிய பேரா வின் குரல் "என்னப்பா .. நீ போட்டோ எடுத்துக்களையா ? "
"என் போன்ல கமெரா இல்ல ஐயா" என சொன்னேன்.
"இங்க வா.. ஒக்காரு " என்றார் . இதற்கு முன்னர் பெயரென்ன கேட்டவர் , என் வேலையை பற்றி , பத்திரிகை தொழிலை ,புத்தகங்கள் என இன்னும் சில நிமிடங்கள் நீடித்தது.
" மொபைல் ஏதாவது ரிப்பேரா ?"
"இல்லங்க யா.. ரொம்ப வருஷமா இந்த மாறி போன் (nokia 1100) தான் வெச்சி இருக்கேன்".
"அப்போ.. உன் நேரத்தையும் காசையும் மொபைல் சாப்பிடரதில்ல.. "
அண்ணா குரல் செலவம் சிரித்தார் , நானும் சிரித்தேன். என்னை அறியாமல் அவரது காலைத் தொட்டு வணங்கினேன்.
"உடம்பு சுத்தமா முடில , அப்பறமா வா.. பேசலாம்" என்றார் . அப்பொழுது அவருக்கு 95 வயது , 2017 ஆகஸ்ட் மாதம்.
எல்லாருக்கும் மதிப்பு கொடுப்பது சிலரை கண்டுகொள்வது என்றுமே தலைமைக்கான அடையாளம் , அந்த வயதிலும் தொழில்நுட்பம் குறித்தான பார்வை, மக்களின் பங்கு என அனைத்தும் பேராவிடுமிருந்து உணர்ந்தேன். அன்பும் பண்பும் நிறைந்த மனிதர்கள் எல்லாராலும் போற்றப்படுவார்கள்.
இன்று அண்ணா குரல் செலவம் அவர் வீட்டின் வெளியே எங்கோவோரு நடைமேடையில் தன் நண்பனை நினைத்துக் கொண்டிருப்பார். பேராசிரியர் போல சிலர் தான் , செலவம் போல பலர் இருக்கிறார்கள், அவர்களை உயிரிலும் மேலான உடன் பிறப்புகள் கண்டுகொள்ள வேண்டும். அண்ணா குரல் செல்வம் , கழகத்தின் குரல். கழகத்திற்காக தன் அன்றாட வாழ்க்கையை இழந்தவர். இன்றும் அவரது பார்வையற்ற கண்ணில் இருந்து வரும் கண்ணீர் தனது கடேசி நண்பன் "அன்பழகனுக்காக"....



Wednesday, February 26, 2020

Jaywalkers near chennai central -

Jaywalkers near chennai central : Nov 28/2019,

After this i saw a change in traffic, dont know whether it had reached them though i take it.

சென்னை போக்குவரத்து காவல் ஆணையம் சில மாற்றங்களை நேற்று முன் தினம் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே கொண்டு வந்தது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ பணிகள் 80 % முடிந்த நிலையில், பூங்கா நகர்/ பூங்கா ரயில் நிலையம் செல்வதற்கு சுரங்க பாதை மக்களுக்கு திறந்து வைத்துள்ளார்கள்; சென்னை புறநகர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து குறிப்பாக பூங்கா நகர் செல்லும் மக்கள் போக்குவரத்து விதிகளைக் கவனிக்காமல் பூந்தமல்லி நெடுஞ்சாலையை குறுக்குமறுக்காகச் செல்கிறார்கள் (JAYWALKERS) ஆதலால் பல்லவன் சாலையிருந்து வரும் வாகனங்கள் , ரிப்பன் பில்ட்டிங் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் சற்றே போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது இதனால் பெரும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அருகிலே அரசு மருத்துவமனை இருப்பதால் விரையும் ஆம்புலன்சுக்கு பெரும் இடர்பாடாகிறது. இந்த முன்னெடுப்பு வரவேற்க வேண்டியது. சென்ட்ரலிலிருந்து பூங்கா நகர் செல்வோர் புதிதாக இரண்டு வழியாக இருக்கும் மெட்ரோ சுரங்கபாதகியை உபயோகிக்கலாம். அதில் மின்படிக்கட்டு இருப்பது இன்னும் சிறப்பு.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க , பூங்கா நகர் ரயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் போகும் சுரங்கப்பாதையின் நிலையை ஏன் கணிக்க தவறினார்கள் என்பது பெரும் வருத்தமாக உள்ளது. 2012 ஆம் ஆண்டின் கணக்கு படி 30000 பயணிகள் அம்மார்க்கத்தை பயன்படுத்துகிறார்கள் என புள்ளி விவரம் சொல்கிறது, இன்றைய நாளில் திருவாங்மயூர், பெருங்குடி , தரமணி ஆகிய இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம் அதே போல பயணிக்கும் மக்களும் கடந்த ஏழு ஆண்டுகளில் 100 மடங்காக உயர்ந்துள்ளது என்பது புரிந்துகொள்ளக்கூடியவொன்று.
சில புரிதல்கள் :
# MRTS Phase 1 1997 ஆம் ஆண்டு மக்களுக்கான சேவை தொடங்கப்பட்டு திருமயிலை வரை ரயில் நிலையங்கள் நிறுவப்பட்டது (6 பெட்டிகள் கொண்ட தொடர் வண்டி என்பதை குறிப்பிட வேண்டும்).
# அன்றைய மக்கள் பயன்பாடென்பது சொற்பமே ஆகையால் அப்போதைய சுரங்கப்பாதை கட்டமைப்பு ஒரே நேரத்தில் 150 க்கும் குறைவானவர்கள் எந்த வித நெரிசலும் இல்லாமல் பயன்படுத்தலாம் .
# இன்றைக்கு ஒரு ரயிலிலிருந்து(9 பேட்டிகள் கொண்ட தொடர்வண்டி ) பார்க் டவுன் இறக்கும் மக்களின் எண்ணிக்கை (PEAK HOUR – 6 PM to 9:30 PM ) 1000 முதல் 1200 க்குள்ளாக இருக்கலாம்.
# சென்னை புறநகர் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் சில விரைவு வண்டிகளை பிடிக்கும் முனைப்பில் இருக்கும் மக்களின் அவசரத்தை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது, இதனூடே கும்முடிபூண்டி மார்க்கமாக செல்லும் வண்டிகளும் சேர்க்கலாம் ஏனெனில் குறிப்பிட்ட நேரத்தில் தான் பொன்னேரி/சூலூர்பேட்டை வழியாக செல்லும் வண்டிகள் இயங்கும்.
# ஒரே நேரத்தில் 100 முதல் 150 வரை செல்லும் சுரங்கபாதையில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் உபயோகித்தால் , நெரிசலில் சிக்கி மூச்சு திணறலும், தள்ளு முள்ளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
# தேவையில்லாத விபத்துகளை தவிர்ப்பது நம் கடமை.
இந்த சுரங்கப்பாதையை விரிவாக்குவதற்கான முயற்சிகளை ஏற்படுத்தினால் மக்கள் எந்த வித பாதிப்பின்றி பயணிப்பார்கள். இதற்கேற்ப சில வழி வகைகளை தீர்க்கமாக செயலாக்கினால் மக்களுக்கு நன்மை பயக்கும். சென்னை போக்குவரத்து காவல் துறையின் இம்முன்னெடுப்பு பாராட்டுக்குரியது இருப்பினும் இத்தைகைய இன்னல்களையும் மனிதில் கொள்ள வேண்டும்.
சில மைண்ட் வாய்ஸ்கள் :
"பெருமையா நின்னு போக வேண்டியது .. என்ன அவளோ அவசரம் "..
"ஏன் அடுத்த வண்டில போனா ஆகாதா ??"
"ஜனங்களுக்கு பொறுமையே இல்ல சார் .. "
சிரமங்கள சொல்லித்தானே ஆகணும் பாஸ் ..

பகிர தோணுச்சு

     இந்த வருஷத்தோட கடேசி நாள்ல இருக்கோம்,பலர் இந்த ஆண்டோடா மட்டும் இல்லாம கடந்த 10 வருஷமா நடந்த சிறப்பான படங்கள்ல , புத்தகங்கள்ல பதிவு செஞ்சிக்கிட்டு இருந்தாங்க , நிறைய மக்கள் போஸ்ட் பண்ணத்துனால சிலர் கான்டாகி பகடி செஞ்சாங்க, பரவால இருக்கட்டும். அட்லீஸ்ட் அந்த பதிவுல இருந்து குறைந்தது 10% சதவீதம் பேர் அறியாத புத்தகம் , சிறந்த படங்கள்ல கட்டாயம் தெரிஞ்சிக்கிட்டு இருப்பாங்க.. என் பங்குக்குக்கு சொல்ல போறேன்ன்றத்துக்காக வக்காலத்து வாங்கல , நம்புங்க ப்ளீஸ்...
# இந்த 10 ஆண்டுகள்ல தலை சிறந்த படங்கள் வந்திருக்கு ,
என்னை பொறுத்தமட்டுல "மதுபானக்கடை" ரொம்ப முக்கியமான படம்.

# அதே போல புத்தகங்கள்..
ராஜு முருகன் சார் எழுதின "வட்டியும் முதலும்" , விகடன்ல தொடரா வந்துச்சு.. விக்ரமன் படத்துல அப்பளம் வாங்க வரிசையா நின்னு 'எனக்கு .. எனக்கு' ன்னு அடிச்சிபாங்க, அதே மாதிரியான கூட்டம் வட்டியும் முதலும் வாங்க வந்துச்சு... இதே போல "மறக்கவே நினைக்கிறேன்" ன்னு சேத்துக்குறேன். மிக முக்கியமான பெரிதும் அவசியமான புத்தகம், மாரி செலவராஜ் எழுதியது. இந்த ரெண்டு பேரும் இந்த தொடர்கள் எழுதும் போது சாமான்ய ஆட்கள் தான். இந்த புத்தகங்களுக்கு அப்றம் பெரிய பெயர்கள் ஆட்களுக்கு கொண்டோர்க்கு மதிப்பு கொடுக்காம எழுத்துக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பிச்சாங்க...
# சிறந்த யூ ட்யுப் சேனல் , ஞானி சார் து தான்... ஓ பக்கங்கள் சேனல்
இன்னும் நிறைய இருக்கு, ஆனா இதெல்லம் பலர நேரடியாகவோ மறைமுகமாகவோ மாற்றத்த கொண்டு வந்திருக்கு....

31-12-2019

மிச்சம் இருக்கும்...

தேனீர் குவளையில்கடைசிச் சொட்டிற்கு,
வரும் எறும்புகளைப்பார்க்கையில் தோன்றுகிறது,
"இன்னும் மிச்சம் இருக்கிறது வாழ்க்கை"..

காதருந்த ஊசிகள் ..

  •  புரிந்துணர்வடையும் கணத்தில் இழந்தவர்களை ஒரு போதும் மீட்டெடுக்க முடியாது ..
  • பொய்யான ஆளுங்கள இங்க அன்பிரென்ட் பண்றா மாதிரி வெளியிலையும் பண்ண ஆப்ஷன் இருந்தா ஒரு கிளிக் ல போய்டும் ...
  • ட்ரைனில், சூடான நெய் பிஸ்கெட்டை யாராவது வாங்குவார்களா என பார்க்கும் வாய்கள் ஏராளம் !
    ~ துணைத் தேடிகளின் ஆதி ஊற்று .
  • அதே சாம்பார் சாதம் ஆனா தொட்டுக்க வேற சிப்ஸ்" என்றான் மணக்கோல நண்பன் .. செரிக்காத காதல் தோல்வி ஏப்பங்கள் ...
  • 'சாய்'யில் தொடங்க ; 'ஸ்ரீ'யில் முடிய , 'சாய்'யில் முடிய ; 'ஸ்ரீ'யில் தொடங்க , இவ்வாறே முழுமையடைகிறது இக்கால குழந்தைகளின் பெயர்கள்..
  • காலம் தாழ்ந்த ஞானங்கள் யாவும் பாரபட்சமின்றி தூக்கிலடப்பட வேண்டியவை..
  • வெற்றியின் அமைதியை விட, தோல்வியின் படிப்பினையை விட , இயலாமையின் புலம்பலகள் பீடித்திருக்கிறது ..
  • எண்ணம் நம் செயலை தீர்மானிக்கிறது ,நாளைடைவில் காலம் அதையே வழி நடத்துகிறது !!
  • பலருக்கு எல்லாம் சுலபமா கிடைச்சிட்டா அதோட அருமை தெரியற்தில்ல, இன்னும் சிலருக்கு கஷ்டப்பட்டு கிடைச்சாலும் அத தக்க வெச்சிகிற பக்குவம் இருக்கிறது இல்ல...
  • முக்கால் வாசி சுய செய்வினைகள் ஸ்க்ரீன்ஷாட்களால் நிரம்பியவை..
  • என்னவாகபோகிறது ஒன்றுமில்லை,
    ஒன்றுமில்லாமல் போனாலென்ன ,
    கொஞ்சம் அழுது தீர்க்கிறேன் ..
  • "சும்மா தான்.. " என்பதற்குள் எண்ணற்ற எண்ண ஓட்டங்கள் அமர்ந்திருக்கிறது..
  • 'சோ' கால்டு அறிவாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு நூல் தான் சார் வித்யாசம்.
  • ஒரு விடயத்தை செய்து முடிப்பதற்குள் , முடித்து செய்துவிடுகிறது சமூக ஊடகம்..
  • குழந்தையை குழந்தையாக வைத்திருப்பது best parenting ..
  • "உனக்கென்ன ப்பா.." வென பிதுங்கும் முக்கால்வாசி உதடுகள் பொறாமை பொதிந்ததே !
  • எப்ப சிக்கன் கட லாம் ப்ரோடீன் ஷாப்பா மாறிச்சோ அப்பவே ஒரு வித வெஜ் மோட் ஆன் பண்றாப்ல..
  • விரைவில் இந்த "வேற லெவல்"என்ற சொல்லுக்கு மாற்று அறுவைசிகிச்சை செய்தருளுங்கள் ..
  • அவர்களை அவர்களாகவே வைத்திருப்பது ஆகச்சிறந்த செயல்..
  • வருஷமெல்லாம் வருஷ கடேசி வாரமா இருக்க வேணும்னு அமெரிக்க பேய்களை வேண்டுகிறோம், பிதாவே !
  • மக்களுக்காகவே அரசாங்கம் தவிர, ஒரு நாளும் அரசாங்கத்திற்காக மக்கள் இல்லை ..
  • சில சந்தர்ப்பத்துல கேள்வி எழுப்ப தொடங்கிட்டாலே, பல சூழல்ல கேள்வி நம்மல எழுப்பிடும்..
  • இங்கு மதிப்பீடென்பது பிரபலத் தன்மை பொறுத்தே சுழல்கிறது..
  • நம்ம உசாரு சாக்ரதலாம் பைக்ல லிப்ட் கொடுத்திட்டு அவன் இறங்கனவுடனே பர்ஸ் இருக்கான்னு தடவி பாக்குரப்பவே முடிஞ்சிடு்து..
  • அனுபவங்கள் சொற்களாக விழுகிறது,அதே சொற்கள் அனுபவங்களாக மாறுகிறது.
  • வெள்ளையா அழகா இருக்கா/கான், கருப்பா களையா இருக்கான்/கா; அழகும்/களையும் என்றுமே நிறத்தோடு ஒப்பிடுபவையல்ல என்பதை எப்போது உணர்வார்களோ !
  • காது கொடுத்து கேட்பதனால் என்னவாக போகிறது.. அதிகபட்சம் ஒரு தற்கொலையை தடுக்கலாம்..
  • மூச்சடக்கி நடித்துக்கொண்டிருக்கும் அவனிடம் "கஷ்டப்படுகிற காலம் மட்டுமில்லாமல் சாதாரண நேரங்களிலும் உன் நண்பர்கள் யார் என்பதை அறியலாம் " என்றது திரும்பி வந்த கரடி !