Translate

Friday, May 24, 2024

நிழற்படங்கள்

 

என் புகைப்படங்களில்
நீங்கள் இருக்கிறீர்கள் ,
உங்கள் புகைப்படங்களில்
நான் இருக்கிறேன்,
அவர்களின் புகைப்படத்தில்
நாம் இருக்கிறோம்.

Tuesday, May 31, 2022

இமையத்தின் உச்சியில் அண்ணாமலை

இமையத்தின் உச்சியில் அண்ணாமலை

 

    ஏறக் குறைய மூன்று தசாப்த காலமாகத் தமிழ் இலக்கியவுலகின் தவிர்க்க முடியாத பெயர், "இமையம்". அவரது பதினான்கு படைப்புக்களும்  , சிற்றிதழுக்கு ,  தின இதழ்களுக்கு  அவர் எழுதிய கட்டுரைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எழுத்திலும் பொது வாழ்விலும் எவ்வித சமரசங்களற்ற போக்கை மேற்கொள்ளும் பண்பு அவரை அப்பழுக்கில்லா எழுத்தாளரென உளப்பூர்வமாக சொல்லத் தோன்றுகிறது.

 

        அகமொன்று வைத்து புறத்தே எழுதி, பேசி நகர்கிற சந்தையில் உண்மையினூடாக ஒரே நிறத்துடன் கடையைப் விரித்திருப்பது எளிதல்ல.

இமையம் அவர்களின் கதை மாந்தர்கள் உண்மையின் எழுச்சிகளே !  ஆணாதிக்க சமூகத்தின் கொடுங்கூற்றினை பகிரங்கமாக கண் முன்னிறுத்தி கூறும் கதைகளினூடாக பெண்ணின் அகச் சிக்கல்களைக் கட்டவிழுக்கும் இலாவகமே வாழ்வின் மீட்சி. கோவேறு கழுதைகள் முதல் இப்போது உயிரோடிருக்கிறேன் வரை பெண்களின் கதாப்பாத்திரங்கள் திண்ணமான உண்மையின் சாட்சியங்கள்.  சமூகத்தின் பெரும் கிழிசலை மூன்று தசாப்த காலமாக தைத்தவருக்கு , "செல்லாத பணம்" வாயிலாக கிடைத்த சாகித்ய அகாடெமி விருது சொச்சமே !

 

         உயிர்க்காக்கும் மருந்தா ? உயிரை எடுக்கும் மருந்தா ?? எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் கட்டுமானம் அளப்பரியது, இக்கட்டுரை 2019 ஆம் ஆண்டு, வெளியானது. அன்றைய அரசின் மருத்துவ ரீதியான ஆற்றாமையை கேள்வி கேட்கும் தைரியம் இமையத்திற்கு மட்டுமே உரித்தானது.தமிழகத்தில், ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பிரச்சனைகள் இருக்கின்றன என்கிறது புள்ளி விவரம். சிறுநீரகம் செயலிழந்து, மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளுக்கு மாதந்தோறும் இலவசமாக அன்றைய அரசு, ‘உயிர் காக்கும் மருந்துகள்என்று வழங்குகிறது.  குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 உள்ளவர்களால் மட்டுமே இலவச மருந்துகள் பெற முடியும். இவ்வழிவகைகள் யாவும் பலருக்கு முற்றிலும் எட்டாக்கூற்று. சிறுநீரக உபாதையினால் அவதிப்படும் மக்களுக்காகப் பல கட்டுரைகள் எழுதி இருந்தாலும், "இப்போது உயிரோடிருக்கிறேன்" என்ற நாவல் தரும் வெப்பம் எளிதில் ஆறுவது அல்ல.

 

          எளிமையான மொழிநடை மற்றும் நுட்பமான கூறுகளை இலாவகமாகச் சொல்லும் பாங்கினால் கதையின் நீரோட்டத்தில் ஒன்றி நகர்வோம். இன்றைய சூழலில் எல்லாவற்றிக்கும் சலிப்பு , பொறுமையின்மை, புலம்பல் என பல்வேறு அரூபங்களின் நிழல் ஏந்தும் நிஜமாய் அலைகிறோம். தத்துவ வியாக்யானங்களை மருத்துவமனையிலோ அல்லது துக்க வீட்டிலோ பேசி அலுத்து அடுத்த நாள் அரூபங்களின் நிழலாக மாறும் மனநிலையே படர்ந்திருக்கும்.  வெள்ளந்தியான பெற்றோர் தன் பதின் பருவ மகனின் சிறுநீரகங்கள் செயலிழந்து போக அதனால், அவர்கள் முன்னெடுக்கும் மருத்துவப் போராட்டம் அதனூடே நுண்ணியலான மருத்துவ புரிதல்களை மிக நேர்த்தியாக வாசகனிடம் கடத்திவிடுகிறார். அருணாச்சலம் ஒரு சிறிய மில் வைத்து ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளந்தியானவர். அவரது மனைவி வள்ளியம்மை. இவர்களுக்கு தமிழரசன், தமிழரசி எனும் மகன் மகள் இருக்கிறார்கள். தமிழரசன் பள்ளியை விட்டு வருகையில் காய்ச்சலும் மயக்கமும் வர அங்கிருந்து கதை நகர்கிறது. தமிழரசன் உடல் நிலை  நலிவடைய , பெரிய மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிறகு தான்  தெரிகிறது , தமிழரசனுக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டதென்று.  மாத்திரை உட்கொண்டால் சரியாகிடுமா என்ற படிப்பினையே பெற்றோர்களுக்கு இருக்கிறது. பயமுறுத்தும் மருத்துவ சொற்களும் அணுகுமுறையும் எளிய மக்களை எப்படி சித்திரவதைச் செய்கிறது என்பதை மிக கனமாக பதிவு செய்திருக்கிறார்.

 

                'டயாலிசிஸ்' செய்துகொள்ளும் நோயாளிகளின் சிரமங்கள் , பிஸ்டுலா என்றால் என்ன ?? கழுத்தில் .ஜே.வி ,தொடையில் துளைப் போட்டு மேற்கொள்ளும் டயாலிசிஸ் முறை; சிறுநீரக மாற்று  அறுவை சிகிச்சைக்கு கிராஸ் மேட்சிங் , ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வளவு கிரேட்டின் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு அடுக்குகளைக் கதையின் நீரோட்டத்தியில் சொல்லியிருப்பது பெரும் படிப்பினை. தமிழரசன் ஒரு நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவு அரை கிளாசுக்கும் குறைவாகவே இருக்கும், அவன் மன ரீதியான போராட்டம், அம்மா அப்பாவின் கவலை தோய்ந்த சொற்களைக் கேட்டு உடையும் தருணங்களில், இப்படியாக சிரமத்துக்குளிருப்போரை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஒரு கட்டத்தில் தனது அம்மாவின் சிறுநீரகம் பொருந்த அதன் பிறகு அறுவைசிகிச்சை நடக்கும் வரை நிகழும் போராட்டம் வர்ணனைக்குள் அடங்காதது.

 

நாவலிலிருந்து,

   "நோயாளியாய் இருக்கிறத விட நோயாளி கூட இருக்கிறது தான் பெரிய கஷ்டம். ஒரு நிமிசத்தில போற உசுருக்கு தான் எம்மாம் போராட்டம்"

   மகனின் துயரைப் போக்கும் பெற்றோரின் கையறு நிலையை மதிப்பதைவிட மிதிக்கவே செய்கிறது மருத்துவமும் அதிகாரமும். நாவலில் வரும் கிருஷ்ணனும் திலகவதியும் நிழலாடும் நிஜங்களே. ஒரு எழுத்தாளன் இச்சமூகத்திற்கு என்ன செய்துவிட முடியும் என்றால்

"இப்போது உயிரோடிருக்கிறேன்" என்ற நாவலை எழுத முடியும் . இருத்தலுக்கும் இருத்தலின்மைக்கும் நடுவே வாழ்க்கையின் அரிதாரங்ளைப் பூசவும் செய்யலாம், கலைக்கவும் செய்யலாம்.

 அவசியம் வாசிக்க வேண்டிய நாவல், 'இப்போது உயிரோடிருக்கிறேன்'.


Wednesday, June 2, 2021

அகவை தொன்னூற்றி நான்கு..

 

அகவை தொன்னூற்றி நான்கு..

காலையில் நாகூர் ஹனிபா தெரு முனைகளில் "கருணாநிதி வாழ்கவே .." என ஒலித்துக்கொண்டிருப்பார். அரை நூற்றாண்டிற்கும் மேல் பொது வாழ்வில் அர்ப்பணித்தவர் கலைஞர்; சமூக வலைத்தளங்களில் அவரை எள்ளி நகையாடுவோர் , அவதூறு சொல்லுவோர், பகடி செய்வோர்களில்10 சதவீதம் கூட அவரின் அரசியல், தமிழ் ஆளுமையை அறியாதவர்களாக இருப்பார்கள்; பார்ப்பனிய ஏகாதிபதியத்தில் இருந்து மீட்டெடுத்ததில் பெரும் பங்கு கலைஞரை சாரும்; அவர் தமிழ் சமூகத்திற்கு என்ன செய்தார் என்று கேட்டால்? இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் இருப்போருக்கு
மட்டுமே (Neutral english accent) நடுநிலையான ஆங்கில உச்சரிப்பு உள்ளது எனும் செய்தி அமெரிக்கா வெளியிட்டது,இதனால் பெருமளவில் BPO வும் தகவல் தொழிநுட்பமும் வளந்ததை மறுக்க இயலாது இதற்கு இரு மொழி கொள்கையே காரணம்; இன்றளவும் தமிழ் சினிமா நம்மிடமே இருப்பதற்கு இதுவம் ஒரு காரணம். இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுத்தவர், இது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது, இன்னும் அவரின் தனித்துவமான நகைச்சுவை அவரை வெறுப்பவரையும் நட்புக்கொள்ளவைக்கும். பத்திரிக்கையாளர்களையே சந்திக்காத முதல்வரை நம் தமிழகம் சந்தித்திருக்கிறது ஆனால் கலைஞர் அவ்வப்போது சந்திப்பார் மேலும் விமர்சனங்களையும் ஏற்பார் அதற்கு உகந்த பதிலையும் கொடுப்பார்;
பார்ப்பனிய சூட்சமங்களால் இன்று சிலர் அவரை தூற்றலாம், தமிழ் கோரும் நல்லுகத்திலிருந்து தூக்கி எறியமுடியாது.
வாழும் தொல்காப்பியருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 
June 3 2017

பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே !!

 

பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே !!
உதடுக்கும் தேநீர் கோப்பைக்கும் இருக்கும் சாவதானம் பொதிந்த மாலை நேரத்தில் ஒலிக்கும் நா.முத்துக்குமார் அவரக்ளின் வரிகளால் மனம் இயல்பை விட இலகுவாகிவிடுகிறது ; "பாதை முடிந்த பிறகும் இந்த உலகத்தில் பயணம் முடிவதில்லையே", இவ்வரிகளுக்கேற்ப நம் நினைவில் வருவது "விவியன் மேயர்".
விவியன் டோரோதி மேயர் (1926 - 2009 ) , அமெரிக்க புகைப்பட கலைஞர். இவர் புகைப்படக் கலைஞர் என்று அறியப்பட்டதென்பது இவரின் மரணத்திற்கு பிறகே, புகைப்படங்களின் வகைமைகளில் மிக முக்கியமான வகைமை, "தெருப் புகைப்படயியல்" (Street photography), வீதியில் நிகழும் நிகழ்வுகளை ரசனையுடன் கட்டமைத்து அதில் பல கூற்றுகளைக் கொண்டது தெருப் புகைப்படங்களின் தன்மை. விவியன் மேயர் எடுத்த புகைப்படங்கள் யாவும் அவரின் மறைவிற்கு பின்னரே உலக புகழ் பெற்றன. சுமார் 40 ஆண்டு காலம் குழந்தைக் காப்பாளராக சிகாகோவில் பணிபுரிந்திருக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரதிற்கு மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்துள்ளார். விவியன் மேயர் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகைக் கொடுக்க இயலாத சூழலில், அவரை வீட்டை விட்டு காலி செய்ய வைத்து வீட்டிலுள்ள நெகட்டிவ் பிரதிகளையெல்லாம் ஏலத்திற்கு கொடுத்துவிட்டனர்.
2007 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக எல்லா நெகடிவ்களை ஏலத்திலிருந்து ஜான் மலூப் (JHON MALOOF) என்பவர் எடுத்தார், அதன் பின்னர் அவற்றை புகைப்படங்களாக உருவாக்கி பார்க்கையில் அப்படங்கள் யாவும் வித்தியாசமாக இருந்தன. அதில் சிலவற்றை கணினியில் பதிவேற்றி புகைப்படத்திற்கு ப்ரத்தியேகமாக இருக்கும் சமூக வலைத்தளங்களில் இணைத்தார், வெறும் சொற்ப காலச்சூழலில் அப்படங்கள் புகழின் உச்சிக்கே சென்றன. மேற்கண்ட விவியன் மேயர் யார் ? என்று தேடும் படலம் பெரிதாகிறது. விவியனின் மறைவிற்கு பின்னரே அவர் தான் இந்த புகைப்படங்களின் கண்கள் என தெரியவந்தது. (FINDING VIVIAN MAIER) 2013 ஆம் ஆண்டில் வெளியான ஆவணப்படம் மிகவும் முக்கியமானது, ஆஸ்கார் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இன்று புகைப்படங்கள் மீது தீரா காதல் கொண்டிருந்தால் அவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய முக்கிய ஆவணப்படம் இது.
விவியன் மேயர் புகைப்பட நெகடிவ்கள் மட்டுமின்றி சில காணொளிகளையும் எடுத்திருக்கிறார், அவர் பணிபுரியும் வீட்டிலுள்ள குழந்தைகளின் குறும்பு தனத்தை அவர்களின் வாழ்வியலைப் பதிவு செய்திருந்தார். இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமேயானால், அவரின் சுய உருவப்படம் (SELF POTRAIT) அதி நேர்த்தியாக இருக்கும். அப்படங்களில் அவரின் தனிமையின் பீடிக்கையை பார்க்க இயலும். இன்னும் குறிப்பாக சொல்வோமேயானால் (DOUBLE EXPOSURE) பாணியில் எடுத்து சுயப்படங்கள் பல நூறு கதைகள் கொண்டிருக்கும்.அவரின் தொடக்க காலக்கட்டத்தில் பெரும்பான்மையாக ரோல்லிபிளேஸ் (ROLLIFLEX) 8mm பிலிம் ரோல்களால் படம் பிடிக்கப்பட்டவை. விவியன் எடுத்த ஒவ்வொரு படத்திலும் பேருணர்வு கலந்திருக்கும். விவியனின் புகைப்படமெடுக்கும் நுட்பம் மெச்சும்படியானது, அவர் புகைப்படம் எடுக்கப்படுவோரை (SUBJECT) எவ்வளவு அருகாமையில் செல்ல முடியுமோ செல்வார் மற்றும் ரோல்லிபிளேஸ் கேமரா குனிந்து பார்த்து எடுப்பதாக இருக்கும் ஆகையால் பெரும்பாலும் கருப்பொருளாக இருக்கப்படுவோர் இயல்பாகவே இருப்பர். இதனால், புகைப்படங்களின் ஆயுள் இலக்கற்றது.மேயரின் புகைப்படங்கள் இணையத்தில் இருக்கிறது, அப்படங்களை அவதானிக்கையில் 50 களில் நியூ யார்க் நகரத்தின் வாழ்வை கால மாற்றத்தை எளிதில் உணரமுடிகிறது.
அங்கீகாரத்திற்கும் பாராட்டுகளுக்கும் ஏங்காத அகவயத் தன்மை கொண்ட பெண்மணி தனது வாழ்வு முழுவதும் புகைப்படங்களுடன் உரையாடியதில் அவர் கண்டடைந்த உணர்வின் குவியல் ஏராளமே. ஒருவர் சுயத் திறமையை வெளிக் கொணர விருப்பமில்லையென்ற போதிலும் அத்திறமை அவரை உலகரியவைக்கும், விவியன் வாழ்ந்த நாட்களில் பாட்டியாக , குழந்தை பராமரிப்பாளராக திகழ்ந்தாலும் , அவர் மறைவிற்கு பிறகு புகைப்பட ஆளுமையாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.
"பாதை முடிந்த பிறகும் இந்த உலகத்தில் பயணம் முடிவதில்லையே"..

Friday, February 19, 2021

ரஷ்யாவின் வாசுகி - Published in Thina thanthi dated 07/02/2021

 

ரஷ்யாவின் வாசுகி

    வாழ்க்கைத் துணைநலம் கோருவது பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும். பெரும்பான்மையான உயர்  ஆளுமையின் பலம் யாவும் வீட்டிலிருந்தே வளர்கிறது இன்னும் குறிப்பிட்டு கூறவேணுமாயின் மனைவியர்கள் கணவன்மார்களின்  வெற்றிக்கு உறுதுணையாக திகழ்கிறார்கள். அப்படியாக, லியோ டால்ஸ்டாய் தன் வாழ் வழியெங்கும் பூக்கள் விரித்து முற்களைச் சுமந்தவர் தான் சோபியா ஆன்ரேவேய்னா டால்ஸ்டாய்.

          அன்னா கரீனினா நாவலில் ஓர் அழுத்தமான வரிகளுண்டு,  "எல்லா மகிழ்ச்சியான குடும்பங்கள் ஒன்று போலவே இருக்கிறது,  மகிழ்ச்சியற்ற குடும்பத்திற்கு ஒவ்வொருவிதமான காரணிகள்  உண்டு", இதில் சோபியாவின் திருமண வாழ்வு இரண்டாவது கட்டத்தில் அடங்கும். 1862 ஆம் ஆண்டு டால்ஸ்டாய் க்கும் சோபியாவிற்கும் திருமணம் நடந்தேறியது ; அப்பொழுது சோபியாவிற்கு 18 வயது,  டால்ஸ்டாய் 16 வயது மூத்தவர். திருமணத்திற்கு முன்னர் டால்ஸ்டாய் தன்னைப் பற்றிய நல்லதும் கெட்டதும் அடங்கிய நாட் குறிப்பேடுகளை சோபியாவிடம் கொடுத்தார். அதை வாசித்து புரிந்து கொண்டு சம்மதம் தெரிவித்தார். டால்ஸ்டாய் தம்பதியினர் பெரும்பாலும் உரையாடியது நாட்குறிப்பின் வழியே. இவர்களது வாழ்வில் 13 குழந்தைகளை ஈன்றனர்,இதில் 8 குழந்தைகள் பிழைத்து நோயின் பிடியிலிருந்து தப்பித்தன . 13 முறை மறுபிறவி எடுத்தவர் திருமண வாழ்வில் அவ்வப்போது செத்து பிழைத்திருக்கிறார்.

             திருமணத்துக்கு பிறகே மகத்தான மூன்று நாவலைகளை  (1.போரும் அமைதியும் -1869 , 2.அன்னா கரினீனா -  1877  3.புத்துயிர்ப்பு - 1899) எழுதினார் டால்ஸ்டாய்,  "போரும் அமைதியும்" மற்றும் "அன்னா கரினீனா" நாவல் உருவாவதற்கு சோபியாவின் பங்கு அளப்பரியது. இன்னும் குறிப்பாக சொல்லுவோமேயானால் டால்ஸ்டாயின் கையெழுத்து தெளிவாக இருக்காது, அவரது எழுத்துக்களில் மிகுந்த இலக்கண பிழைகள் அடங்கியிருக்கும், பிழைகள் அனைத்தையும் நீக்கி சோபியாவே கைப்பட தெளிவாக எழுதுவார். இறுதியாக அச்சிற்கு அனுப்பிவிடுவார். அச்சிற்கு ஏறி வெளிவந்தப் பின்னரும் மாற்றங்களை உரைத்துக்கொண்டே இருப்பார் டால்ஸ்டாய் , சில நேரங்களில் மாற்று சொற்களையும் தேடித் தேடி மாற்ற முற்படுவார். இவற்றைத்  தொகுப்பதென்பது எளிமையான காரியம் அல்ல, சோபியா டால்ஸ்டாயின் எழுத்துக்களைச் செப்பனிடுதலில் வல்லவர். டால்ஸ்டாயின் வெற்றியில் பாதி அவரது மனைவிக்கும் சேர வேண்டியவொன்று."போரும் அமைதியும்" என்ற நாவலை மட்டுமே 7 முறை திருத்தி எழுதி பிரதி எடுத்திருக்கிறார் சோபியா. டால்ஸ்டாய் சோபியாவின் அறிவை டால்ஸ்டாய் சோபியாவின் அறிவையும் திறமையையும் பாராட்டி மெச்சியதுண்டு ஆனால் அது பலருக்கும் அறியப்படாமலே போயிற்று.

       அர்ப்பணிப்பும் அன்பும் நிறைந்த சோபியாவிற்கு கலை மற்றும் புகைப்படங்கள் மீது தீரா காதல் இருந்தது ஆனால் அதில் பெரிதும் ஈடுபாடு செலுத்த முடியாமல் போனதற்கு காரணம் டால்ஸ்டாயின் எழுத்து சீரமைப்பு , பதிப்பு ரீதியான வேலைகளுமே. சோபியாவிடம் 16 வயது முதல் அவர் இறக்கும் வரை நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது, இன்றைய நாளில் தாமி (SELFIE) போல , டால்ஸ்டாய் இறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் சுய உருவப்படங்கள் (SELF PORTRAIT) எடுக்க ஆரம்பித்தார். அவரின் நாட்குறிப்புகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது "Song without words :The photographs and Diaries of Countless Sophia Tolstoy". சோபியாவின் படங்களைப் பார்க்கையில் அவரின் தனிமையின் நிழலில் வெப்பத்தோடு நிற்பது புலப்படுகிறது. டால்ஸ்டாயின் 48 ஆண்டு கால இல்வாழக்கையில் அன்பும் வெறுப்பும் அடர்ந்து இருப்பதை சோபியாவின் நாட்குறிப்பிலும்  புகைப்படங்களிலும்  உணரலாம்.

       வீடுகளில் சுடர்மிகு அணையா விளக்காய் ஆண்கள் இருந்தாலும் பெண்களுக்கு போதிய வெளிச்சம் படர்வதில்லை , இது எல்லா காலக்கட்டத்திலும் அவ்வண்ணமே இயங்குகிறது. டால்ஸ்டாய் தர்ம மனப்பான்மை அதிகம் பெற்றவர், ரஷ்யாவில் ஜார் மன்னர்களின் அடக்குமுறையால் டுக்கோபோர்ஸ்() என்ற இனத்தை காப்பாற்றியதற்காக எழுதப்பட்ட நாவல் "புத்துயிர்ப்பு". அந்நாவல் எழுதும் முன்பே அவர் பதிப்பாளர்களிடம் இருந்து பணம் பெற்று டுகோபோர்ஸ் இனத்தை காப்பாற்றினார், 3000 லிருந்து 4000 மக்களை தனது மகன் செர்கெய் டால்ஸ்டாய் மூலமாக கப்பல் ஏற்றி கனடா அனுப்பினார், இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்தவர் சோபியா.

          பல குடும்பங்களில் பெண்ணின் தியாகமென்பது எட்டா வண்ணாமகவே உருபெறுகிறது. டால்ஸ்டாயின் இறுதி நாட்களில் அன்பாக ஒரு வார்த்தை கூட தன் மனைவியிடம் பேசியதில்லை, மிகுந்த துன்பத்திற்கு உட்பட்டவளாய் இருக்க நேரிட்டது.இவற்றை அனைத்தும் புறந்தள்ளி மிகவும் நேர்த்தியாக டால்ஸ்டாயைப்  பார்த்துக்கொண்டார்.1910 ஆம் ஆண்டு ஒரு வெண்பனி இரவில் யாருக்கும் சொல்லாமல் தனது 82 வயதில் வெளியே சென்றார் டால்ஸ்டாய், ரயில் நிலையத்தில் கவலைக்கிடமாக இருந்தவரை வீட்டிற்கு கொண்டு வந்த பின்னர் உயிர் பிரிந்தது. அவரின் பெயரில் அளப்பரியா அன்பும் மாண்பும் கொண்ட சோபியா அவரை ஒரு போதும் அவதிக்குள்ளாக்கியதில்லை. 8 குழந்தைகளையும் வளர்த்து , டால்ஸ்டாயின் இலக்கிய துணையாக விளங்கி தனது விருப்பு வெறுப்புகளையெல்லாம் ஒதுக்கி வாழ்ந்த சோபியா , உண்மையில் வாசுகியின் மறு வடிவம்.

 

"மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை."