Translate

Saturday, May 30, 2015

சரியான இளிச்சவாயன் !! ....

சரியான இளிச்சவாயன் ....

      'திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம், வேறென்ன செய்வது போய்தானாகாணும், ஏ. சி மெக்கனிக்னா சில்லுனே இருக்குமா, உழைச்சு வியர்வை நாத்தம் வந்தா தான் சாம்பார் வாசனைய நுகர முடியும்'.

"ஹலோ ...ஹலோ சார்.. கூப்டே இருக்கன்.. எங்கயோ யோசனையா இருக்கீங்க, சரி... எவளோ லிட்டர் "
" ஏதோ ஞாபகத்தில இருந்துட்டேன்... ஒரு லிட்டர் போடு பா".
"ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ......."
"சார்.. போன் இங்க பேசக் கூடாது."
"சரி .. பா , இந்த நூறு ரூபா ,மீதி கொடு .."
"இந்தாங்க... "

            மோட்டார் சைக்கில் சற்றே நகரத்தில் நகர "ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு .......  சார்.. ஏ.சி மெக்கானிக் சுந்தர் பேசுறேன் சார் ... இன்னும் ஒன் ஹவர் ல வந்துடறேன்" .
           சுந்தரின் வண்டி இப்படியே மெதுவாக நகர்கிறது, குளிரூட்டியை பழுது பார்த்து வரும் பணமே போதுமானது என்ற சிந்தனையில் செல்கிறது இவர் வண்டி, இவருக்கு மனதில் குளிரூட்டியிருப்பதால் அகப் புழுக்கம் நேராது. எண்ணூரை அடைந்தார், பெரிய மாடி வீடு மூன்று குளிர் சாதன இயந்திரத்தை ஒரு மணிநேரத்தில் சீர் செய்தார், அதன் உரிமையாளருக்கோ அலவற்ற மகிழ்ச்சியுடன்,
"சுந்தர் , ரொம்ப தேங்க்ஸ்... குழந்தைங்க வெயில தாங்க மாட்டேன்கிறாங்க.. கரெக்ட் ஆ ஹெல்ப் பண்ணீங்க.."
"சார்...நான் குழந்தைய இருக்கும் போது  ஃபேனுக்கே வழி இல்ல, இந்த காலத்துல ஏ. சி யும் ஜாஸ்தி ஆயிடுச்சு லேசி யும் ஜாஸ்தி ஆயிடுச்சி, குழந்தைங்கள நம்ம தான் சார் சொகுசு வாழ்கைக்கு பழக்கப் படுதுறோம்.."
"போதும் பா.. சுந்தர் , எவலோன்னு சொல்லு " என அயர்ந்து சொன்னார் உரிமையாளர்.
"200 ரூபா கொடுங்க சார்"
அதிர்ச்சியான உய்ரிமையாளர் " வீட்ட பாத்தே காசு கேக்கற கும்பல் அதிகம் , நீ என்ன டா னா இவளோ கம்மியா கேக்குர ??"
"இது போதும் சார், நான் செய்த வேலைக்கு இது சரியா இருக்கும் சார்.."

             சுந்தரிடம் 200 ரூபாய் கொடுத்தார், அதை வாங்கிக் கொண்டு அவரும் எந்த தவறு செய்யாத வண்டியை இரண்டிற்கு மூன்றுமுறை  உதைத்து அங்கிருந்து கிளம்பினார். சிறிது தூரம் கடந்தப் பின் வழி தெரியவில்லை, அங்கங்கே உள்ளவர்களிடம் கேட்டு கேட்டு சென்றுக் கொண்டிருந்தார், திடீரென நடந்து சென்ற ஒருவர் மயங்கி கீழே விழுந்தார், சுந்தர் கடந்த செல்கையில், அதை கவனித்து சட்டென்று வண்டியை நிறுத்தி அந்த நபரைத் தூக்கினார், உதவிக்கு கூட யாருமில்லை, மயங்கிய ஆள் சலனமற்று கிடந்தார். அவரைத் தூக்கி வண்டி மேல் அமரவைத்தார், ஆனால் பயனில்லை சரிந்து சரிந்து விழ முற்பட்டார் அவர். வண்டியை நேராக நிறுத்தி விட்டு மயங்கியவரை அதன் மேல் உட்கார்ந்தவாரே பெட்ரோல் டான்க் மேல் தலை சாய்த்து படுக்க வைத்தார்.

        ஆட்டோ பிடிக்க ஓடினார், அப்பொழுது ஒரு வண்டியின் சத்தம் கேட்டது யாரவது வருகிறார்களா என்று திரும்பிப் பார்த்தார்.
"யோவ் ..தத்தி... வரட்டுமா ..." என்று மயங்கியவன் சுந்தர் வண்டியை எடுத்து பறந்தான்.
அவன் திருடன் என்று சுந்தருக்கு அப்போது தான் புலப்பட்டது, அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அங்கே சற்று நேரம் நின்றார். கொஞ்ச தூரம் நடந்து தெரு முனையில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் சொன்னார் , அவர்கள் காவல் நிலைத்திற்கு ஏவி விட்டனர்.
தட்டுத் தடுமாறி சுங்கச்சாவடி வந்து சேர்ந்தார், 6 D பேருந்தில் ஏறினார் திருவல்லிகேனிக்கு பயணச் சீட்டு வாங்கி தன்னை சீட் பண்ணியவன் பெட்ரோல் இல்லாமல் எங்கே நிற்கிறானோ என்று கவலைப்பட்டார் நம் சுந்தர்.

    "கண்ணகி செல ஸ்டாப்பிங் இறங்கு ..." என் கண்டக்டர் கத்த, சுந்தர் இறங்கி வீடிற்கு நடக்க ஆரம்பித்தார்.ஆட்டோக்காரன் வண்டியை மெதுவாக இவரிடம் நெருங்கி "சவாரி வரியா சார் ?? " என்றான்.
"இல்ல பா, பெல்ஸ் ரோடு முனைல தான் மான்ஷன் ... வேற யாரையாவது கேளுங்க.." என சிரித்து நகர்ந்தார் சுந்தர்.
எங்கு பார்த்தாலும் தன் வண்டி ஞாபகமாகவே இருந்தது , பெல்ஸ் ரோட்டில் இரு சக்கர வாகன விற்கும்/வாங்கும் கடையில் அந்த திருடன் சுந்தரின் வண்டியை விற்றுக் கொண்டிருந்தான், அதை பார்த்து சுந்தர் "என்ன பிரம்மை பா இது , நம்ப வண்டியும் திருட்னவனும் இங்க.. " என்ற முனகலுடன் அந்த கடையை கடந்தார்.

        கொஞ்ச தூரம் சென்று ஏதோ ஒரு நினைவில் திரும்பி பார்க்க அதே திருடன் மற்றும் அவரது வண்டி. மிகவும் சாதரணமாக , பதட்டப் படாமல் அவனருகே சென்றார். சுந்தரப் பார்த்தவுடன் அவன் ஓட முற்ப்பட்டான், உடும்புப் பிடியாக அவனைப் பிடித்தார் சுந்தர்.
"தம்பி ... ஓடி நீயே காம்ச்சி கொடுத்திடாதே திருடன்னு, இந்த வண்டிய வித்து நீயே காசு எடுத்துக்கோ" என்றார்.
அந்தத் திருடன் திகைத்துப் போனான், " ஏன் இப்படி ... " என வடிவேலு பாணியில் திருடன் கேட்க்க.

      "உன்ன பிடிசிக் கொடுத்தா நீ செஞ்ச ஆக்டிங் வெளிய வரும் , உண்மையா மயங்கி விழுறவங்கள யாரும் காப்பாத்த மாட்டங்க,
அதுவும் இல்லாம சந்தர்ப்பம் தான் திருடனாக்குது ஆனா நம்ப திருந்த சந்தர்ப்பம் கொடுக்கறது இல்ல ..., இனிமே ........."
என்று கூறி நகர்ந்தார் சுந்தர்.

அந்தத் திருடன் முனங்கினான் "சரியான இளிச்சவாயன் ....."

         அது சுந்தர் காதில் விழுந்தது , திரும்பி அவனருகே வந்து சொன்னார்  " நானும் இந்த பைக்க திருட்னவன் தான் 4 வருஷம் முன்னாடி , இந்த பைக் ஓனர் எனக்கு இதே தான் சொன்னாரு  'நல்லவன் எப்பவுமே சரியான இளிச்சவாயன், ஆனா அவன் நல்லவன் ... போடா திருந்து போ'  அதே தான் உனக்கு சொல்றன் 'திருந்து போ' "

               திருடனின் கண்களில் திருடன் வேடம் கலைந்தது, வண்டியை சுந்தரிடம் கொடுத்து அவர் சொன்னதை வாங்கிச் சென்றான் இளிச்சவாயனாக.

Wednesday, May 27, 2015

இளங்கோ எப்போது மலையாளியானான் ??? !!!

இளங்கோ எப்போது மலையாளியானான் !!

 நிசப்தத்தின் உச்சம், வியர்வையின் மிச்சம். கீழே சில நகத் துகள்கள் தரையை நட்சத்திரம் போல் அலங்கரிக்க,

 "யாருப்பா இங்க இளங்கோ ??"
" சார்.." என்று கை மேல உயர்ந்தது.
"நீங்க டாட் நெட் ஆ ஜாவா வா ???"
"டாட் நெட்"
"அந்த ரூம்க்கு போங்க,  சோழா ன்னு எழுதிருக்கும் " என்று அந்த நபர் கூறி நகர்ந்தார்.

இளங்கோவின் கண்கள் பயத்திலிருந்தது அதனுடன் நகக் கண்களும் பதட்டத்திலிருந்தது, கண்ணாடி கதவை திறக்கும் போது வாயைத் திறந்து பதில் சொல்ல வேண்டும் என்பதை மனதில் கொண்டு என்பதாவது இண்டர்வ்யுவிலாவது வேலை கிடைக்க வேண்டும் என்று
"மே ஐ கம் இன் சார்.. ???"
"எஸ் ... ப்ளீஸ்" என்றது ஒரு பெருத்த உருவம்
"சிட் டவுன் !!"
"சார் !! மை ரெசுமே!!" என்று இளங்கோ நீட்ட, கேள்விகள் ஆரம்பித்தது. எல்லாம் படித்தது தான் ஆனால் அந்த நேரத்தில் நினைவிற்கு வரவில்லை வந்ததெல்லாம் படிக்கும் காலத்தில் புரிந்து படித்திருந்தால் சிரத்தையுடன் கவனித்திருந்தால் இந்த நேரத்தில் தலை சொறியாமல் இருந்திருக்கலாம் என்பது மட்டுமே.
"என்ன இளங்கோ எல்லாத்துக்கும் ஒரே வார்த்தைல பதில் சொல்றீங்க , எஸ் ஆர் நோ ன்னு , இந்த மாதிரி ஒரே வார்த்தை மட்டும் பேசினீங்கனா யாருக்கும் உபயோகம் இல்ல. நீங்க தெரியாம MCA படிச்சிடீங்க, உங்களுக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் சுத்தம்மா இல்ல, சாரி டு சே ஆனா இதான் பாக்ட்" என்று அந்த உருவம் இளங்கோவின் மனதைச் சிதைத்து.

    "தேங்க்ஸ் சார் " என இளங்கோ வெளியே நடக்க ஆரம்பித்தான், அந்த நபர் சொன்னது நிதர்சனமான உண்மை என அவனுக்கு தெரியும், ஆனால் தன் தந்தைக்கு தெரியவில்லை இவனுக்கு உகந்த படிப்பில்லை என்று,நடந்துக் கொண்டே இருந்தான் போகும் வழியில் நகராட்சி பூங்கா இருந்தது அதனுள் சென்றான், மூன்று மணி வெயிலின் சூடு அந்த சிமெண்ட் பெஞ்சில் மேல் படுத்தான், அங்குள்ள பச்சை பச்சையான  செடி கொடிகளை பார்த்தே தனுக்கு பத்திரிகையாளன் ஆகா வேண்டும் என்ற கனவும் பச்சைப் பசேலென்று தழைத்ததை அந்த இலைகளில் கண்டான், ஆனால் கணினி படித்துவிட்டு யாராவது பத்திரிகையில் தன்னை சேர்ப்பார்களா என்ற கேள்வியும் மாலை வேளையில் உதித்தது, இந்த வேலையும் போனதா என்று வீட்டில் கேட்ப்பார்களே அதன் கவலையும் சேர்ந்து மிக்சியில் அறையும் சட்னியாய் உழன்று விட்டத்தைப் பார்த்தான்.

    சட்டென்று ஒரு குடிகாரன் இளங்கோவைத் தட்டி, தள்ளாடிக் கொண்டே "டேய் .. இந்த என் பெஞ்சு ஏந்திரி.." என்றான்.
இளங்கோ எந்த பதில் சொல்லாமல் எழுந்தான் எதுவும் பேசாமல் நகர ஆரம்பித்தான்.
அந்த குடிகாரன் என்ன நினைத்தானோ திடீரென "டேய் .. தம்பி! இங்க வா !!" என்றான்
அருகில் வந்தான் இளங்கோ.

        "என் போதைக்கு நீ குடிக்க முடியுமா ?? இல்ல உன் பசிக்கு நான் துன்ன முடியுமா?? உன் வாழ்க்கைய வாழு போ ... தூர போ ..." என்றான் குடிகாரன்.
பூங்காவிலிருந்து வெளியேறினான் இளங்கோ, நடக்கும் வழியெங்கும் அந்த குடிக்கரனின் சொற்கள், "வாழு போ" எவ்வளவு உண்மை. தீர்த்தத்தை குடித்தால் கூட ஒருவன் இந்த அளவுக்கு எதார்த்தத்தை சொல்ல முடியுமா ஆனால் டாஸ் மாக் நேக்கா சொன்னது, அந்த நொடியிலிருந்து ஒரு பெரிய தெளிவு கிடைத்தது. சில மணி நேரம் முன் ஒருவர் என்னை பின் தள்ளினார் இன்னொருவர் படிக்கட்டுகள் அருகே தான் இருக்கிறது என்று உரைத்தார். வீட்டில் எல்லாம் தூங்கியவுடன் செல்லலாம் காலையில் என் முடிவை சொல்லலாம் என தாமதமான மின் தொடரில் ஏறினான்.
      ஒரு சில சொற்கள் நம்மை எழ வைக்கிறது என்பதை அசைப் போட்டு யாருமில்லாத ஜன்னல் ஓரத்தில் தலையை சாய்த்து எதிர் காற்றை நோக்கினான்.தான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தது அதில் சொற்ப மக்களே இறங்கினர், ரயில் சென்றப் பின் இரும்புப் பாதையைக் கடந்தனர், இறுதி பெட்டியில் ஏறியதால் இவன் பின்னே நடந்து வந்திருந்தான் இவன் முன்னே ஒருவர் நடந்துக் கொண்டிருந்தார்.  இரும்புப் பாதையை அவர் கடக்க முற்பட்டார் அப்போது மறு புறம் வேகமாக ஒலியில்லாமல்  ரயில் வந்துக் கொண்டிருந்தது அதை இளங்கோ பார்த்தான் அவரும் பார்ப்பார் என்று எண்ணினான் ஆனால் அவர் எதோ ஒரு நினைப்பில் முன்னோக்கி சென்றார்.

   "அண்ணாணா .... பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....அண்ணாணா ட்ரைன்ன்ன்"  ஒரே அலறல் இளங்கோவிடமிருந்து.
அந்த சொற்கள் அவரை திரும்பி பார்க்க வைத்தது, சட்டென்று பின் வாங்கினார், ரயில் கடந்தது வேகமாக. மெதுவாக வந்தான் இளங்கோ.
"அண்ணே ... என்ன.. ணே இனி பாத்து வாங்க.."
"அனுஜா ....நண்ணி... சாரி !! தேங்க்ஸ்"
"மலையாளம் புரில பரவா ல உங்க கண்ணுல புரியுது"
"ட்ரைன்  வந்நது ஸ்ரேடிச்சில்லா ..."
"சரி .. விடுங்க ..பாத்து போங்க அண்ணே !!"
"என்ட குட்டிகள் இந்த பிஸ்கெட்டை கழிக்கும் ... வளர நண்ணி" கண் கலங்க சொல்லி நகர ஆரம்பித்தார் திடீரென்று நின்று
"நீ என்ட அச்ச்சனப் போலே ....." என்று அழுதார்.

சில சொற்கள் நம்மை பின்னும் தள்ளும், முன்னும் தள்ளும் மனிதனாகவும் மாற்றும் இன்னும் சில நேரத்தில் மலையாளியாக்கும்.

இளங்கோ மலையாளியானான் !!!!

Friday, May 8, 2015

நான், போலீஸ் மற்றும் பழ வண்டி எங்களோடு ராஜா சார் !!! // சிறுகதை வடிவில்



                 நீல வானம், ஆங்காங்கே வெண்ணைத் தடவினார் போல் வெண் மேகங்கள், 9 மணியை 11 மணியாக மாற்றி தன் வேலையை மிக செம்மையாக செய்த சூரியன், கானல் நீரை தெளிக்க, நான் இரும்புப்பாதையைக் கடந்தேன். இருபுறமும் பார்த்து கடந்து நடைமேடையைச் சேர்ந்தால், இது எதாவது பேரணியா ? இல்லை போராட்டமா ? என என்னும் அளவிற்கு கூட்டம். நானும் அதில் வியர்வை வழிந்து கூட்டத்தில் வழிந்தேன்.

  "ச்ச.. 15 நிமிஷம் தூக்கத்த தியாகம் பண்ணி இருந்தா,இந்த கூட்டத்தில இருந்து தப்புச்சி இருக்கலாம் என்றது என் மைண்ட் வாய்ஸ்"

எனதருகே ஒருவர் "சார் !! அர மணிநேரமா ஆச்சு.. இன்னும் ட்ரைன் வரல..என்ன இந்த மாதிரி பண்றானுங்க!!!!".

அதற்கு இன்னொருவர் "அவனுங்க என்ன பண்ணுவாங்க சார் ! நம்ப தான் சீக்கிரம் வரணும் , நான் மட்டும் 10 நிமிஷம் தூக்கத்த ஒதறி இருந்தா இந்நேரத்துக்கு ஜம்முனு ஆபீஸ் கிட்ட போய் இருக்கலாம்..".

"சார் ! எல்லாரு மைண்ட் வாய்சும் இது தான் சொல்லும் " என்று சொல்லி சிரித்தார் முதலில் பேசியவர்.

           அதைக் கேட்டு என் மைண்ட் வாய்சை ஊமையாக்கினேன், சட்டென்று மின் தொடரின் ஒலி  காதைக் கிழித்து கொண்டு  வந்தது. எப்படியாவது இதில் ஏறிவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தேன் , தொங்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. ஐந்து நபர்கள் மட்டுமே நிற்கக்கூடிய அந்த மின் தொடர் நுழைவாயிலில் பத்து நபர்கள் தொங்கினோம். அதில் நான் மட்டும் தொங்கவில்லை என் மேலாளர் அலுவலகத்தில் திட்டக்கூடாது என்ற நினைப்பு தொங்கியது; கட்ட வேண்டிய  மாதத் தவணைத் தொங்கியது; ஏன் இந்த வேலைக்கு வந்தேன் எனும் கவலைத் தொங்கியது. எல்லாவற்றையும் சற்றே பொறுத்துக்கொண்டு 11 மணியளவில் ஒரு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

         நான் ஒரு எழுத்தாளன் ஆகா வேண்டும் என்ற கனவை என் சுற்றத்தார் தகவல் தொழில்நுட்பத்தின் கட்டத்தில் அடைத்தார்கள்."அவன் எவளோ சம்பாதிக்கிறான் பாரு.. இவன் எவளோ சம்பாதிக்கிறான் பாரு.. இப்ப இருக்கற பொண்ணுங்க அதிக சம்பளம் வாங்கனவன தான் கல்யாணம் பண்ணுவாளுங்க.." என்ற வசை எதிரொலியாக ஒலிக்க, வேறு வழியில்லாமல் கணினியில் துப்புரவு தொழில் ! அந்த குளிரூட்டியில் கூட மனதில் புழுக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

 "பார்த்தி, யு. எஸ் கிளைன்ட் கால் என்ன ஆச்சு ?? " என்றார் எனது அணி தலைவர் (டி. எல்).

 " இன்னைக்கு நைட்டு 9 மணிக்கு ஷெட்யுல் ஆயிருக்கு.. சாம்" என்றேன்.

"எவளோ நேரமானாலும் நீங்களே அட்டண்ட் பண்ணுங்க " என்று கடித்து கிளம்பினார்.

பலியாகும் ஆடு கூட ஈரமாக தண்ணீர் தெளித்து வெட்டுவார்கள் ஆனால் என்னை... என்று மனப் புலம்பலுடன் அன்றைய நாள் முடிந்தது.  அலுவலகத்திலிருந்து தாமதமாக கிளம்பினேன், எந்த வேளையில் இந்த வேலை தேர்ந்தெடுத்தேன் என்பதை மறுபடியும்  யோசித்து சந்திர பாபு சார் பாட்டு மனதில் ஒலித்தது  "நான் ஒரு முட்டாளுங்க ...." சிரித்துக் கொண்டே எவளோ உண்மை என்று மின் தொடரை நோக்கி நடந்தேன்.

           மின் தொடர் பயணம் ஒன்றரை மணி நேரம் நான் இறங்க வேண்டிய இரயில் நிலையம் வந்தது. இரவு 11.30 மணி இருக்கும் என் வீட்டிற்கு 15 நிமிடம் நடை. தெரு விளக்குகள் ஒளிர்ந்து மஞ்சள் போர்த்தினார் போல தார் ரோடும் சிமென்ட் ரோடும்; அத்துடன் கொஞ்சமாக பனி , சில்லென்று நடக்க ஆரம்பிதேன். நான் மட்டும் தான் நடந்து வருகிறேன், திரும்பி பார்த்தால் யாருமே இல்லை, பயமில்லை எனக்கு மகிழ்ச்சி தான் அதிகமாக இருந்தது பனி விழ யாருமில்லாத சாலையில் மஞ்சள் நிற தெரு விளக்குகளுடன் அந்த நொடிகளை இன்னும் ரம்யமாக்க இசைஞானி சார் பாட்டுகேட்டால் சொர்க்கம் என்று யோசித்தேன்.

               அந்த பனி விழும் இரவில் சத்தமாக கேக்கலாம் யாரும் தான் இல்லையே என்ற நிலையில் எடுத்தவுடன்,  "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ.." பாடலை மொபைலில் ஒலி பெருக்கியாக கேட்டுக்கொண்டு நடந்தேன்,சரி  யாரும் தான் இல்லையே என்ற நிலையில் நாமும் பாடலாமே என பாட்டினோடே பாட ஆரம்பிக்கும் முன் நாய் எதாவது உள்ளதா என்று பார்த்து விட்டு ஆரம்பித்தேன். "கதையா விடுகதையா......" என அந்த பாட்டின் அழகை கத்தியின்றி ரத்தமின்றி செய்யும் பைல்ஸ் ஆப்ரேஷன் போல கண்டம் செய்தேன் !!

     திடீர் ஒரு குரல் " டேய் !! தம்பி !!" பீடி வலித்துக்கொண்டு ஒரு 50 வயது ஆசாமி ஒரு தள்ளு வண்டி அதில் வாழைப் பழம், ஒரு காடை விளக்கு, கொஞ்சம் போதையில் இருந்தார். அருகே வந்து " ராஜா சார் பாட்டு தானே" . " ஆமா.. ணா " என்றேன்.

" சரி ! உன் கிட்ட ' பொன்மானே சங்கீதம் பாடவா ' ன்னு ரஜினி பாட்டு இருக்கா ?? " என கேட்டார்.

         ராஜா சார் எவ்வளவு மக்களின் இதயத்தில் 365 நாட்களும் பனியாக இருக்கிறார் என்பதை நினைத்தேன். " ணா.. , எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ணா.. ஒரு நிமிஷம் தேடி எடுக்கிறேன் " என்றேன்.

     பாட்டு கிடைத்தது, ஒலிக்க வைக்க ஆரம்பித்தேன். அந்த பாட்டிற்கு அவர் எனக்கு ஒரு வாழைப்  பழம் கொடுத்தார். " இந்த பாட்டு முடிஞ்ச உடனே போ தம்பி.. " என்றார்.

நானும் அவரும் பிளாட் பாரம் மீது அமர்ந்தோம் பாட்டுடன் நானும் அவரும்  "... பொன் ஊஞ்சல் ஆயிரம் ... தேன் மழை நீ ஓய் ... என் காதல் வானிலே பெண் மேகம் ஊர்வலம் .." என கத்தினோம் நானும் அவரும், மகிழ்ச்சியின் உச்சம் அது, மணி 12 தொட சில நேரம் தான் ஒரு போலீஸ் எங்கள் கூச்சலை கேட்டு நெருங்கி வந்தார்.

" என்ன டா சூப்பர் சிங்கர்ஸ்!! செம்ம மப்பா.." என்றார்.

"சார் !! சும்மா ஒரு பாட்டு கேக்கனு ன்னு சொன்னாரு இவரு அதான்.. நான் ஆபீஸ் ல இருந்து வீட்டுக்கு போறேன் சார்!! சரக்கெல்லாம் இல்ல ." என்றேன் நான்.

" உன் முகரைய பாத்தா அப்படி தெரியலயே.. சரி அத விடு இது 'ராஜா சார் பாட்டு தானே' " என்றார் போலீஸ் காரர்.

    பழவண்டி காரரின் அதே தொனியில் கேட்டார் போலீஸ், நான் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றேன். பழவண்டி அண்ணா அவரை மதிக்காமல் "பொன் மானே......" பாடிக்கொண்டிருந்தார்

"உன் கிட்ட குருவாயுரப்ப பாட்டு, பாலசந்தர் சார் படம்..., ராஜா சார் மியூசிக் வெச்சி இருக்கியா ??? " போலீஸ் கேட்க்க.

     அந்த பாடலை ஒலிக்க ஆரம்பித்தேன் , நான் அந்த போலீஸ் மற்றும் பழம் விற்கும் அண்ணா ஒன்றாக " குருவாயுரப்பாபாபாபாபாபாபா...... நான் கொண்ட காதலுக்கு நீ தானே ....." என்று கத்தினோம்.

அன்று இசை இரவு தான் !! ராஜா சாரின் ஆளுமை நம் வாழ்வின் கடினமான சூழலில் மயில் இறகாக பறக்க விட்டு, நம் துன்பத்தை இலகுவாக்குவார் அவரின் இசையில்..
வெறுப்பாக ஆரம்பித்த நாளை ராஜா சார் விருப்பமாக இரவு 12.30 க்கு முடித்து வைத்தார்!!...