Translate

Wednesday, November 21, 2018

நெருக்கமான பத்து திரைப்படங்கள்

        மிக நெருக்கமான பத்து திரைப்படங்கள் இருப்பின் பதிவிடுக எனும் சவாலை நண்பர் விட்டிருந்தார், இதை சவாலென வகைமைப் படுத்தாமல் நான் தனிப்பட்ட முறையில் பாதித்த ரசித்த படங்களை குறிப்பிடுகிறேன். இதில் அனைத்து படங்களும் ஒரே வரிசையே ..
*சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயாகந்தனின் எழுத்தில் பீம் சிங் இயக்கிய திரைப்படம் (1977). மாற்று சினிமாவுக்கான பெரும் முயற்சி.
*கில்லா (killa) 2015ஆம் ஆண்டு வெளியான மராட்டிய திரைப்படம், பதின் வயதின் தனிமையை வலியை கண்ணீரற்று சொல்லும் படம், படத்தின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவினாஷ் அருண், மாசான்(Masan) படத்திற்கும் இவரே ஒளிப்பதிவு.
*போஸ்ட் மாஸ்டர், சம்பந்தி(sampanti), மோனிஹரா (monihara)..1960 களில் வங்காள மொழியில் வெளிவந்தது, மூன்றுமே தாகூரின் சிறுகதைகள், இதை சத்தியஜீத் ரே இதயத்திலிருந்து படமாகியிருப்பார்.
*திதி (thithi)- 2016 ஆம் ஆண்டு வெளியான கன்னட மொழி திரைப்படம். ராம் ரெட்டி இயக்கித்தில் ஒரு வாழ்வியல் அனுபவம். அந்த கதை மாந்தர்களை அருகே பார்த்த உணர்வு வரும்.
*நச்சோம்-ஐய-கும்பஸார் (Nachom-ia Kumpasar) 2015ஆம் ஆண்டு வெளியான கொங்கனி திரைப்படம், உலகதரத்தில் எடுக்கப்பட்ட மியூசிக்கல் டிராமா.. பரோட்டி இயக்கியது. அவசியம் பார்க்க கற்க வேண்டிய திரைப்படம்.
*அன்னையும் ரசூலும் (annaiyum rasoolum ) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளப் படம், ராஜிவ் இயக்கியது, நடிப்பதற்கு கை தட்டலாம் நடிக்காமல் இயல்பாய் இருத்தமைக்கு கொண்டாடலாம், பாஹத் பாசில் நடிப்பின் நாடியை தொட்டு பார்க்காமலே புரியும் மகா கலைஞன். ஆண்ட்ரியாவும் இணையாக வாழ்ந்திருப்பார். (பாசிலின் ஐயோபின்டே புஸ்தகம், தொண்டிமுதல் த்ரிஷ்யம் இன்னும் பல படகளில் அசாத்திய நடிப்பை காணலாம்)
*அங்காமலே டையரீஸ் (angamalay diaries) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம், லிஜோ எனும் மாபெரும் திரைமொழியில் காட்சியினூடே நம்மை வியக்க வைக்கும் ஒரு படைப்பு.
*வீடு - 1988 ஆம் ஆண்டு வெளியான ஒரு மென்மையான பூ ... பாலு சார் இயக்கத்தில் ஒவ்வொரு வீட்டின் கதைவை தட்டி உணர்வை தூண்டும் ஓர் உன்னதமான திரை கவிதை.. எம்.ஏ. சொக்கலிங்க பாகவதரின் சின்ன பார்வை போதும் நம்மை அழ வைக்க..
*உதிரிப்பூக்கள் - மகேந்திரன் சார் இயக்கத்தில் "சிற்றனை " சிறுகதையை திரைப்படமாக தீட்டும் தூரிகை மகேந்திரன் சாரிடம் மட்டுமே இருக்கிறது. புதுமைப்பித்தன் இருந்திருந்தால் இந்த படைப்பை சிலாகித்திருப்பார். தமிழ் சினிமாவின் முக்கிய விலாசம் இந்த படம். 'நண்டு' படத்தை விட்டு நம்மால் நகர இயலாது. மகேந்திரன் சாரின் மற்றொரு பூ...
* சபாபதி (1941) - ஏ.வி.எம்மால் இயக்கப்பட்ட முதல் முழு நீள நகைச்சுவை திரைப்படம். இன்றளவும் திகட்டாத படம், டி.ஆர்.ராமச்சந்திரன் தமிழின் பஸ்டர் கீடன்.. மறுமுனையில் ரத்தனம் போற்ற படாத கலைஞன்.. அவசியம் பார்க்க வேண்டிய படம்...
கேட்டமைக்கு மிக்க நன்றி ராகவ்..

100 லைக்குகள்..

            திடீர் ஓர் அழைப்பு "வாசக சாலைல இருந்து பேசுறோம், நீங்க யூ ட்யூப் சானல்ல புக் பத்தி பேசுவீங்க ன்னு சொன்னாங்க, எதாவது நாவல் பத்தி பேசுறீங்களா ??", நானும் சரி என்று சில நாவல்களை குறிப்பிட்டேன்.அதிலிருந்து, சிறு குழப்பத்துடன் அவர்கள்  சுஜாதா எழுதிய "வண்ணத்துப் பூச்சி வேட்டை " தேர்வு செய்தார்கள். நவ் 4 ஆம் தேதி பெரியார் நகர் கிளை நூலகத்தில் பேச வேண்டும், அதற்கான அழைப்பிதழ் வடிவமைப்பு செய்து என்னிடமும் முக நூலிலும் பகிர்ந்தார்கள், சிறு மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் நான் யாரிடமும் பகிரவில்லை ஒரு நாள் முன்னர் பகிரலாமென்ற எண்ணத்தில் இருந்தேன். சுஜாதாவின் நாவல் "வண்ணத்துப் பூச்சி வேட்டை" வாசித்து பல வருடங்கள் ஆனது, மறு வாசிப்பு கொடுத்தால் தான் சீராக பேசமுடியும். நவ 3 ஆம் தேதி இரவு 11 மணி வரை பேசுவதற்கான எந்த தயாரிப்பும்  மேற்கொள்ளவில்லை.
                      முதலில் "வ.பூ.வே" ஆரம்பித்தேன் அதனூடே மற்ற முக்கிய சுஜாதாவின் சிறுகதைகளையும் வாசித்தேன். ஒரு நாவலைப் பற்றியே பேசினால் பெரும் சலிப்பேற்படும் எனவே நாவலைகளின் வரலாற்றை பற்றிய குறிப்பு, பெரியார் நகர் பற்றிய வரலாறு, நிலம் சார்ந்த வரலாறு என குறிப்புகள் அடிக்கிக்கொண்டே போனேன். எல்லா தரவுகளையும் அதி காலை 4 மணிக்கு முடித்தேன், ஒரு மன நிறைவு ! அட .. உங்களிடம் நான் முக நூலில் பகிர்ந்தது சொல்லவில்லை, நவ 3 அன்றே காலையில் முகநூலிலும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாகவும் பகிர்ந்தேன், பெரும்பாலானோர் வாழ்த்தினார்கள். முகநூலில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட லைக்குகள் 10 க்கும் மேற்பட்ட பகிர்வுகள். இலக்கிய கூட்டத்திற்கு இவ்வளவு வரவேற்பென்பது அசாத்யமானதல்ல,  குறைந்தது 20 இலக்கிய ஆர்வலர்கள் வருவார்கள் என்ற நினைப்பு இருந்தது. எப்போதுமே இறுதி நேரங்களில் இது மாதிரியான நிகழ்வுக்கு தயார் செய்தால் தான் என் மனம் முழுமையடையும் ,அப்படியொரு மெண்டல் தனம்.
                        அங்க கட் பன்னேன்ல இப்ப திரும்பவும் தொடறேன்; 4 மணிக்கு தூங்கி 8 . 30 எழுந்தேன், பொறுப்புணர்ச்சியுடன் மறுமுறை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டேன். முதன் முதலில் எங்கள் பகுதி நூலகத்தில் பேச போகிறேன் என்கிற மகிழ்ச்சி மிக அதிகாமாக இருந்தது, எனக்கு எப்போதும் நெருக்கமானது மிதிவண்டி பயணம், எனது மிதிவண்டியை எடுத்து நூலகத்திற்கு சென்றேன், 10 . 30 திற்கு ஆரம்பிப்பதாக அழைப்பிதழில் கோடிட்டிருந்தார்கள் அதற்கு முன்னரே சென்றேன் ஒரு டீ அருந்திவிட்டு சரியான நேரத்திற்கு சென்றேன். அங்கு இலக்கிய சந்திப்பு மாதிரியான எந்த வித அறிகுறியும் தெரியவில்லை, 10 . 45 மணிக்கு பிரவீன் வாசிகசாலை பெரியார் நகர் நூலகத்தின் ஒருங்கிணைப்பாளர் வந்திருந்தார், அறிமுகம் செய்துக் கொண்டார். நானும் அவரும் மட்டும் இருந்தோம். 15 இருக்கைகளை கொண்டுவந்து சீரமைத்து வைத்தார். " என்ன கம்மியா ச்சார் போட்றாப்ல " என்ற மைண்ட் வாய்ஸ் கரகரத்த குரலில் ஒலித்தது.
                    11 மணி ஆனது நானும் பிரவீன் மட்டும் இருந்தோம், "சகோ .. உங்க பிராண்ட் சர்கில்ல கூப்டீங்களா ?? தீபாவளி வாரம் வேற .." என இழுத்தார். என் நண்பன் அருள் ஜோதி வந்தான் அப்பாடா என்றானது, இனிமே எல்லாரும் வர ஆரம்பிச்சிருவாங்க வடுக்கப்பட்டி ராமசாமி மொமென்ட் வர .15 நிமிடங்கள் கழிந்தது; நான் பிரவீன் அருள் ஜோதி மற்றும் 12 இருக்கைகள். "நீங்க ஆரம்பிங்க" என்றார் பிரவீன். நானும் பேச தொடங்கினேன், நான்கு நபர்கள் கூடினார்கள் அப்படியே கொஞ்சம் நேரத்தில் 2 நபர்கள், ஆகா மொத்தம் 8 பேர். அருள் ஜோதிக்கு அவ்வளவாக புத்தகத்தில் நாட்டமில்லை இருப்பினும் எனக்காக வந்தமர்ந்தான், ஒரு மணிநேரம் ஐந்து நிமிடங்கள் பேசினேன் அதில் முப்பதாகும் மேற்பட்ட கொட்டாவியை விட்டான்.
                    ஆக, சுஜாதாவின் படைப்புலகம் , நாவலின் பெரும் வரலாறும், புனைவெழுத்தின் ஆதியும் அந்தமும், நம் இடத்தின் வரலாறு, குயவர்களைப் பற்றி என அனைத்து பொருட்கள் வாங்கும் கடையாகக் கூவி முடித்தேன். அன்று வந்த சிலர் மிகவும் ஆழமாக சிந்திக்கும் பாங்குடையவர்கள், மிக நுட்பமாக கவனித்தார்கள்,ஆங்காங்கே கொட்டாவிகள் ஏற்புடையது தானே ! நான் பெரிய பேச்சாளன் அல்ல , சாதாரண டுபாக்கூர். அலாதியான மன நிறைவுடன் அங்கு வந்த ஒருவர் எனக்கு அருள் ஜோதி, பிரவீன் மற்றும் இன்னொரு அன்பருக்கு டீ வாங்கிக் கொடுத்தார், இனிதே சில நிகழ்வுகளை நேரிலே பார்த்ததுப் போல பேசி அன்றைய தினத்தின் சிறப்பான நொடி பொழுதிற்கு என்டு கார்டு போட்டேன், அருள் ஜோதியும் கிளம்பினான், வீட்டிற்கு சைக்கிள் பயணம் தொடங்கியது.
               அடடே ... மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன், நண்பன் விமல் நான் பேச ஆரம்பித்த 10 நிமிடங்களில் வந்தான், யாரையுமே நான் அழைக்கவில்லை அவன் வந்து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தான். ரெயின்போ FM இல் அவன் RJ வாக பணிபுரியம் போது எனக்கு பழக்கம், தமிழை அவ்வளவு இனிதாக பேசுபவன், அருமையான உச்சரிப்பு கொண்டவன். அவனின் தேடல் பெரியது , எங்கு இத்தகைய இலக்கிய சந்திப்பு நிகழ்ந்தாலும் சென்று அட்டெண்டென்ட்ஸை போட்டு எதாவது கற்று கொண்டு வரலாமா என்று எண்ணுபவன். விமல் வசிப்பது திருவள்ளூர் எனக்காகவே பெரம்பூர் வரை வந்தான், என் வீட்டின் அருகாமையிலுள்ள நெருங்கிய நண்பர்கள் கூட வரவில்லை. நெகிழ்ந்து போனேன், வரும் சொற்களால் நன்றி மட்டும் சொன்னேன். அவனிடம் எந்த வித எதிர்பார்ப்பும் அற்ற அன்பு இருக்கிறது அது அவனை வேறு தளத்திற்கு இட்டுச் செல்லும்.
                சரி முடிவிற்கு வருவோம், முகநூலில் 100 க்கும் மேற்பட்ட லைக்குகள், 10 கும் மேற்பட்ட பகிர்வுகள், வாட்ஸ் ஆப்பில் 100 கும் அதிகமானோர் எனது ஸ்டேட்டஸை பார்வையிட்டனர். இதில் 1 % மக்கள் வந்திருந்தாள் அந்த 15 இருக்கைகள் நிறைந்திருக்கும். எல்லாருக்கும் எல்லா வேலைகள் இருக்கும் அதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் அருகிலிருக்கும் நண்பர்கள் கூட எட்டி பார்க்கவில்லை அதிலும் சமூக ஊடகம் என்றுமே நம்பத்தக்கதல்ல அது மாயையின் மற்றோரு பரிணாமம். அந்த கரடி கதை போலவே , சில நேரங்களில் உண்மையை அந்த கரடியாக வந்து சொல்லும் அவர்களை நம்பாதே என. தனிப்பட்ட முறையில் 4 பேர் அல்லது  400 முன்னிலையில் பேசினாலும் தயாரிப்பில் ஒரே உழைப்பு , அதே புத்துணர்ச்சி இருக்கும்; மொத்தத்தில் சுஜாதாவின் படைப்புக்களை விட அருள் ஜோதி மற்றும் விமல் யார் என்று இன்னும் அதிகமாக புரிந்தது.

8.30 PM
04-11-18