Translate

Showing posts with label கால்தடம். Show all posts
Showing posts with label கால்தடம். Show all posts

Wednesday, February 26, 2020

பகிர தோணுச்சு

     இந்த வருஷத்தோட கடேசி நாள்ல இருக்கோம்,பலர் இந்த ஆண்டோடா மட்டும் இல்லாம கடந்த 10 வருஷமா நடந்த சிறப்பான படங்கள்ல , புத்தகங்கள்ல பதிவு செஞ்சிக்கிட்டு இருந்தாங்க , நிறைய மக்கள் போஸ்ட் பண்ணத்துனால சிலர் கான்டாகி பகடி செஞ்சாங்க, பரவால இருக்கட்டும். அட்லீஸ்ட் அந்த பதிவுல இருந்து குறைந்தது 10% சதவீதம் பேர் அறியாத புத்தகம் , சிறந்த படங்கள்ல கட்டாயம் தெரிஞ்சிக்கிட்டு இருப்பாங்க.. என் பங்குக்குக்கு சொல்ல போறேன்ன்றத்துக்காக வக்காலத்து வாங்கல , நம்புங்க ப்ளீஸ்...
# இந்த 10 ஆண்டுகள்ல தலை சிறந்த படங்கள் வந்திருக்கு ,
என்னை பொறுத்தமட்டுல "மதுபானக்கடை" ரொம்ப முக்கியமான படம்.

# அதே போல புத்தகங்கள்..
ராஜு முருகன் சார் எழுதின "வட்டியும் முதலும்" , விகடன்ல தொடரா வந்துச்சு.. விக்ரமன் படத்துல அப்பளம் வாங்க வரிசையா நின்னு 'எனக்கு .. எனக்கு' ன்னு அடிச்சிபாங்க, அதே மாதிரியான கூட்டம் வட்டியும் முதலும் வாங்க வந்துச்சு... இதே போல "மறக்கவே நினைக்கிறேன்" ன்னு சேத்துக்குறேன். மிக முக்கியமான பெரிதும் அவசியமான புத்தகம், மாரி செலவராஜ் எழுதியது. இந்த ரெண்டு பேரும் இந்த தொடர்கள் எழுதும் போது சாமான்ய ஆட்கள் தான். இந்த புத்தகங்களுக்கு அப்றம் பெரிய பெயர்கள் ஆட்களுக்கு கொண்டோர்க்கு மதிப்பு கொடுக்காம எழுத்துக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பிச்சாங்க...
# சிறந்த யூ ட்யுப் சேனல் , ஞானி சார் து தான்... ஓ பக்கங்கள் சேனல்
இன்னும் நிறைய இருக்கு, ஆனா இதெல்லம் பலர நேரடியாகவோ மறைமுகமாகவோ மாற்றத்த கொண்டு வந்திருக்கு....

31-12-2019

Friday, June 7, 2019

சிரிப்பென்பது யாதெனில்...

பள்ளி நாட்களில் ராஜ் பரத் எனும் நண்பன்அவனது வீட்டில் ஒரு மினி ரேடியோஸ்டேஷன் உருவாக்கி கையில்மைக்கையை தந்தான், அதில் மிமிக்கிரிசெய்து பேசலானேன். பக்கத்து வீட்டுஅக்காளிடம் கத்தினான் "அக்கோவ் .... 100 .3 டியூன் பண்ணுங்க .. க்கா சீக்கிரோங்கேளு " . அவர்களும் உடனே கேட்டு "டேய் ...விஜயகாந்த் வாய்ஸ் மாறியே பேசுறான் .. ஜோரா இருக்குன்னு சொல்றா" என உரக்ககூறினார்கள். இப்படியான சிலஉத்வேகங்களும் பல உசுப்பேற்றல்களும்என்ன செய்யும் என்பதை அனுபவித்துபார்த்தால் நன்றாக புரியும், அதேஉற்சாகத்துடன் போகும்போது களஎதார்த்தம் கொடுக்கும் சம்பட்டி அடிகள்நம்மை செதுக்குவத்திற்கான உளி. அப்படியே ஜம்ப் கட் ஆக 2013 க்குகுதித்தால் DLFல் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த சமயம், இரவு உணவிற்காக கீழுள்ளஉணவகத்திற்கு செல்லபடியிலிறங்கும்போது என் நண்பனிடம்சொன்னேன் "பேசாம RJ வேலையதேடலாம்னு இருக்கேன்.. இந்த IT லாம் செட்ஆகாது போல .." , ஒரு சிறு புன்னகைஓசையுடன் " பேசுனா தான் RJ வேலைசெய்ய முடியும் .. அதுக்கெல்லாம்ப்ரெசென்ஸ் ஆப் மைண்ட் வேணும்" என்றவுடன் சுயக்கேள்விகள் தோன்றின. தொடர்ந்த எங்காவது RJ ஆடிஷன்நிகழ்கிறதா என நோட்டம் விட்டவண்ணம்இருந்தேன். அப்படியாக 2014 ஆம் ஆண்டுஒரு நாள் பீச் அருகிலிருக்கும் ஒரு FM ல்அழைப்பு விட்டிருந்தனர் அது விளையாட்டுதொகுப்பாளருக்கானது (SPORTS PRESENTER), விண்ணப்பித்து பார்ப்போம்என மனவுந்ததலுடன் செய்தேன்; 60 க்கும்மேற்பட்ட பங்கேற்ப்பாளர்களில் 10நபர்களை தேர்வு செய்தனர் அதில் நானும்ஒருவன் . அங்கிருக்கும் தேர்வுக்குழுவினர்ஒருவரிடம் "சார் , RJ ஆகணும்னு ஆசை.. " என இழுத்தவுடன் , சிரித்தார். அந்த ஒருபுன்முறுவல் அவ்வளவே !
முதல் ஷோ இந்தியாவிற்கும்ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலானடெஸ்ட் போட்டி ,2014 டிசம்பர் மாதம்நடைபெற்றது அதற்காக முதல் அழைப்பு, கிரிக்கெட் அப்டேட்ஸ் நிகழ்ச்சியை ஷியாம்என்ற நண்பர் மட்டும்வழிங்கிக்கொண்டிருந்தார், டெஸ்ட் போட்டி5 நாட்கள் ஆகையால் தேர்வு செய்யப்பட்ட10 பேரை தினம் 2 என்ற விகிதத்தில் பேசிமைக்கிற்கு பழக வைக்கலாம் எனநினைத்தார்கள், எனக்கும் இன்னொருநண்பருக்கும் வந்த வாய்ப்பு 5 ஆம் நாள். மிக விறு விறுப்பாக போட்டிசென்றுகொண்டிருந்தது, வீட்டிலிருந்துகிளம்பும் முன் ஊரிலுள்ள எல்லாசிறுவண்டுகளுக்கும் சொல்லிவிட்டேன்"நான் ரேடியோல பேசப்போறேன் .. பேசப்போறேன் .. பேசப்போறேன்". அரைமணிநேரம் முன்னதாகவே வானொலிநிலையத்திற்கு வந்தடைந்தேன், பயபக்தியுடன் ஸ்டூடியோக்குள் சென்றேன். ON AIR என சிவப்பு விளக்கு எறிந்தாள்ஏனோ இன்றுவரை ஒரு இனம்புரியாதபொறுப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அட சொல்ல மறந்துட்டேன்வானொலிக்கென சில சடங்குகள்இருக்கின்றன, கன்சோலில் இருக்கும்FADER IN கொடுத்தால் நாம்நேரலையிலிருக்கிறோம் என்பதைகுறிக்கும். இது அனைத்தும் RJக்கள்செய்வார்கள் இந்த பாவப்பட்ட ஸ்போர்ட்ஸ்அப்பரசண்டிகள் அருகிலுள்ள கண்ணாடிஅறையில் அமருவர் அங்கு செய்திகளும்வாசிக்கப்படும், ஆகையால் அவர்கள்கொடுக்கும் செய்கையும் அந்த சிவப்பு ON AIR விளக்கே எங்களைப்போன்றோருக்குபச்சை விளக்கு அதன் பின்னர் பெரும்பொறுப்புணர்ச்சி சொற்களாக வந்துவிழும். ஆக ... மேட்சுக்கு வருவோம்,ஒருமணி நேரத்திற்கு 3 நிமிடங்கள் என அந்தநாள் முடியும் வரை அப்டேட் கொடுக்கவேண்டும், விஜய் மற்றும் விராட் கோலிமிக சிறப்பாக விளையாடிகொண்டிருந்தனர், முதல் அப்டேட் ஷியாம்கொடுத்தார். இரண்டாவது அப்டேட்டிற்குஎன்னை தயார் செய்ய சொன்னார் நானும்செய்தேன்.
11 : 05 ற்கு ஷியாம் " ஹலோ .. வணக்கம்ங்க நான் தான் உங்க ஷ்யாம் சுந்தர் , மேட்ச்ரொம்ப இன்ட்ரெஸ்ட் ஆஹ் போகுது.. முரளிவிஜய் , கோலி சிறப்பா ஆடிக்கிட்டு வராங்க.. 364 ரன்கள் எடுத்தால் வெற்றி ன்றடார்கெட்டோட ஆடிக்கிட்டு வராங்க , இன்னும் இந்த மேட்ச பத்தி பவித்ரன்சொல்லப்போறாரு , ஓவர் டூ பவித்ரன்" என்று ஷியாம் முடிக்க ஏனோ என் பற்கள்மட்டும் கட கட வென ஆடியது, கை கால்கள்உதறியது. யாரடி நீ மோகினி படத்தில்கருணாஸ் பேசியத்தைவிட உதறலோடுபேசினேன். இன்ஜி இடுப்பழகா பாடலில்ரேவதி சொல்வது போல் வெறும் காற்றுமட்டுமே வந்தது. பேசியது மொத்தம் 54வினாடிகளே, என்ன உளறினேன் என்றுஒன்றுமே தெரியவில்லை, ஷியாம்திடீரென என்னை விளக்கி க்ளோஸிங்கொடுத்தார். கண் கலங்க எழும்பிநின்றேன், என் நம்பிக்கையெல்லாம் அந்த54 வினாடிகளில் ஐஸ் கட்டியாக கரையஆரம்பித்தது. எதிர் அறையிலிருந்தஇரண்டு பெண் RJ க்கள் இதைபார்த்துக்கொண்டே இருந்தார். அவர்கள்புருவத்தை உயர்த்தி தலை அசைத்தார்கள், ஏதோ குசு குசுத்தப் பின் கையை வைத்துவாயைப் பொத்தி சிரித்தார்கள். அந்தசிரிப்பை மட்டும் இன்றுவரை என்னால்கடக்கவே இயலவில்லை. அடுத்து வந்தபோட்டிகளிலிருந்து என்னை தனியாகபேசும்படி என் இயக்குனர் கூறினார். லைவ்பயம் பனி போல் விலக ஆரம்பித்தது, முன்னே இருக்கும் மைக் என் நண்பனாகஉருமாறியது.
எப்பொழுதெல்லாம் முக்கியமான இந்தியவிளையாடும் கிரிக்கெட் போட்டிகள்நடக்கிறதோ அழைப்பு வரும் , ஒரு முதிர்மஞ்சளான காலையில் வானொலிநிலையம் வந்தடைந்தேன், வழக்கமாகபேசினேன். அன்று வந்த ஆர்.ஜே ஒருவர்எந்த சிமிக்ஞையுமில்லாமல் FADER OUTசெய்தார், அந்த நேரம் பார்த்து எழுதிவைத்த தாள் கீழே விழுந்தது, கண்ணாடியின் வழியே அவரைவினாடிக்கும் குறைவாக பார்த்தேன், அலறலுடன் சாதித்தாற்போல கையைஉதறி சிரித்திக்கொண்டே இருந்தார்.அவர்நான் பார்ப்பேன் என்று சற்றும்எதிர்பார்க்கவில்லை. அதுவரை அவ்வளவுநேர்த்தியாக பேசியததேயில்லை ,எந்த விததயாரிப்புமில்லாமல் பேசினேன். ஏனோஇனம் புரியாத வெறி ஏறியதாக இருந்தது, பின்பு பேசி முடித்தபின் அவர் எந்த விதசலனமும் இல்லாமல் வேலையைதொடர்ந்தார், அன்றைய நாள் நான்கிளம்பும் முன்பு அவரை பார்த்து பல்தெரியாத வாறு உதடுகள் மட்டும்கன்னத்திற்கு அருகில் சென்றார் போலபுன்முறுவல் செய்தேன். அவ்வளவு தான் ..
எப்படியாவது ஆர். ஜே ஆகிட வேண்டும்என்று அலைந்த நாட்கள் இன்றளவும்நீட்சியாக நீண்டுக் கொண்டே இருக்கிறது,வருகிறவர்கள் போகிறவர்கள் எனஎல்லாரிடமும் வாய்ப்பு கேட்டிருக்கிறேன், அடையாளமற்றவர்களுக்கு உழைப்புமட்டுமே மூல தனம் ,உழைப்பு இன்னும்அதிகம் இருந்திருக்க வேண்டும் போல. தோல்விகள் நிஜங்களாக நகர, காரணங்கள் பின் நிழல்களாகதொடர்வதை பலரிடம் கேட்டிருக்கிறேன். அந்த பலரில் நானும் ஒருவனாக கூடஇருந்ததும் உண்டு. வயதிற்கும் போதுஅவசரமிருப்பதுண்டு , வயதாகும் போதுஞானம் வளருவதுண்டு. ஒரு கட்டத்தில்ஏளன சிரிப்பால் பழகி போன கண்களும்காதுகளும் அதை சன்னமாகவேஉணரத்தொடங்கும். இக்கட்டான சூழல்நம்மில் இருக்கும் இன்னோர் பிரதியைநிஜம் எடுக்கிறது. சுயத்தை இழக்காமல்நம் இலக்குகள் நோக்கி நடந்தோ , ஓடியோ , ஊர்ந்தோ நகர்ந்தால் காலம் சிரிப்பின்அழகை வேறொரு ரூபத்தில் காண்பிக்கவிழையும்.

Wednesday, November 21, 2018

நெருக்கமான பத்து திரைப்படங்கள்

        மிக நெருக்கமான பத்து திரைப்படங்கள் இருப்பின் பதிவிடுக எனும் சவாலை நண்பர் விட்டிருந்தார், இதை சவாலென வகைமைப் படுத்தாமல் நான் தனிப்பட்ட முறையில் பாதித்த ரசித்த படங்களை குறிப்பிடுகிறேன். இதில் அனைத்து படங்களும் ஒரே வரிசையே ..
*சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயாகந்தனின் எழுத்தில் பீம் சிங் இயக்கிய திரைப்படம் (1977). மாற்று சினிமாவுக்கான பெரும் முயற்சி.
*கில்லா (killa) 2015ஆம் ஆண்டு வெளியான மராட்டிய திரைப்படம், பதின் வயதின் தனிமையை வலியை கண்ணீரற்று சொல்லும் படம், படத்தின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவினாஷ் அருண், மாசான்(Masan) படத்திற்கும் இவரே ஒளிப்பதிவு.
*போஸ்ட் மாஸ்டர், சம்பந்தி(sampanti), மோனிஹரா (monihara)..1960 களில் வங்காள மொழியில் வெளிவந்தது, மூன்றுமே தாகூரின் சிறுகதைகள், இதை சத்தியஜீத் ரே இதயத்திலிருந்து படமாகியிருப்பார்.
*திதி (thithi)- 2016 ஆம் ஆண்டு வெளியான கன்னட மொழி திரைப்படம். ராம் ரெட்டி இயக்கித்தில் ஒரு வாழ்வியல் அனுபவம். அந்த கதை மாந்தர்களை அருகே பார்த்த உணர்வு வரும்.
*நச்சோம்-ஐய-கும்பஸார் (Nachom-ia Kumpasar) 2015ஆம் ஆண்டு வெளியான கொங்கனி திரைப்படம், உலகதரத்தில் எடுக்கப்பட்ட மியூசிக்கல் டிராமா.. பரோட்டி இயக்கியது. அவசியம் பார்க்க கற்க வேண்டிய திரைப்படம்.
*அன்னையும் ரசூலும் (annaiyum rasoolum ) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளப் படம், ராஜிவ் இயக்கியது, நடிப்பதற்கு கை தட்டலாம் நடிக்காமல் இயல்பாய் இருத்தமைக்கு கொண்டாடலாம், பாஹத் பாசில் நடிப்பின் நாடியை தொட்டு பார்க்காமலே புரியும் மகா கலைஞன். ஆண்ட்ரியாவும் இணையாக வாழ்ந்திருப்பார். (பாசிலின் ஐயோபின்டே புஸ்தகம், தொண்டிமுதல் த்ரிஷ்யம் இன்னும் பல படகளில் அசாத்திய நடிப்பை காணலாம்)
*அங்காமலே டையரீஸ் (angamalay diaries) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம், லிஜோ எனும் மாபெரும் திரைமொழியில் காட்சியினூடே நம்மை வியக்க வைக்கும் ஒரு படைப்பு.
*வீடு - 1988 ஆம் ஆண்டு வெளியான ஒரு மென்மையான பூ ... பாலு சார் இயக்கத்தில் ஒவ்வொரு வீட்டின் கதைவை தட்டி உணர்வை தூண்டும் ஓர் உன்னதமான திரை கவிதை.. எம்.ஏ. சொக்கலிங்க பாகவதரின் சின்ன பார்வை போதும் நம்மை அழ வைக்க..
*உதிரிப்பூக்கள் - மகேந்திரன் சார் இயக்கத்தில் "சிற்றனை " சிறுகதையை திரைப்படமாக தீட்டும் தூரிகை மகேந்திரன் சாரிடம் மட்டுமே இருக்கிறது. புதுமைப்பித்தன் இருந்திருந்தால் இந்த படைப்பை சிலாகித்திருப்பார். தமிழ் சினிமாவின் முக்கிய விலாசம் இந்த படம். 'நண்டு' படத்தை விட்டு நம்மால் நகர இயலாது. மகேந்திரன் சாரின் மற்றொரு பூ...
* சபாபதி (1941) - ஏ.வி.எம்மால் இயக்கப்பட்ட முதல் முழு நீள நகைச்சுவை திரைப்படம். இன்றளவும் திகட்டாத படம், டி.ஆர்.ராமச்சந்திரன் தமிழின் பஸ்டர் கீடன்.. மறுமுனையில் ரத்தனம் போற்ற படாத கலைஞன்.. அவசியம் பார்க்க வேண்டிய படம்...
கேட்டமைக்கு மிக்க நன்றி ராகவ்..

100 லைக்குகள்..

            திடீர் ஓர் அழைப்பு "வாசக சாலைல இருந்து பேசுறோம், நீங்க யூ ட்யூப் சானல்ல புக் பத்தி பேசுவீங்க ன்னு சொன்னாங்க, எதாவது நாவல் பத்தி பேசுறீங்களா ??", நானும் சரி என்று சில நாவல்களை குறிப்பிட்டேன்.அதிலிருந்து, சிறு குழப்பத்துடன் அவர்கள்  சுஜாதா எழுதிய "வண்ணத்துப் பூச்சி வேட்டை " தேர்வு செய்தார்கள். நவ் 4 ஆம் தேதி பெரியார் நகர் கிளை நூலகத்தில் பேச வேண்டும், அதற்கான அழைப்பிதழ் வடிவமைப்பு செய்து என்னிடமும் முக நூலிலும் பகிர்ந்தார்கள், சிறு மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் நான் யாரிடமும் பகிரவில்லை ஒரு நாள் முன்னர் பகிரலாமென்ற எண்ணத்தில் இருந்தேன். சுஜாதாவின் நாவல் "வண்ணத்துப் பூச்சி வேட்டை" வாசித்து பல வருடங்கள் ஆனது, மறு வாசிப்பு கொடுத்தால் தான் சீராக பேசமுடியும். நவ 3 ஆம் தேதி இரவு 11 மணி வரை பேசுவதற்கான எந்த தயாரிப்பும்  மேற்கொள்ளவில்லை.
                      முதலில் "வ.பூ.வே" ஆரம்பித்தேன் அதனூடே மற்ற முக்கிய சுஜாதாவின் சிறுகதைகளையும் வாசித்தேன். ஒரு நாவலைப் பற்றியே பேசினால் பெரும் சலிப்பேற்படும் எனவே நாவலைகளின் வரலாற்றை பற்றிய குறிப்பு, பெரியார் நகர் பற்றிய வரலாறு, நிலம் சார்ந்த வரலாறு என குறிப்புகள் அடிக்கிக்கொண்டே போனேன். எல்லா தரவுகளையும் அதி காலை 4 மணிக்கு முடித்தேன், ஒரு மன நிறைவு ! அட .. உங்களிடம் நான் முக நூலில் பகிர்ந்தது சொல்லவில்லை, நவ 3 அன்றே காலையில் முகநூலிலும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாகவும் பகிர்ந்தேன், பெரும்பாலானோர் வாழ்த்தினார்கள். முகநூலில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட லைக்குகள் 10 க்கும் மேற்பட்ட பகிர்வுகள். இலக்கிய கூட்டத்திற்கு இவ்வளவு வரவேற்பென்பது அசாத்யமானதல்ல,  குறைந்தது 20 இலக்கிய ஆர்வலர்கள் வருவார்கள் என்ற நினைப்பு இருந்தது. எப்போதுமே இறுதி நேரங்களில் இது மாதிரியான நிகழ்வுக்கு தயார் செய்தால் தான் என் மனம் முழுமையடையும் ,அப்படியொரு மெண்டல் தனம்.
                        அங்க கட் பன்னேன்ல இப்ப திரும்பவும் தொடறேன்; 4 மணிக்கு தூங்கி 8 . 30 எழுந்தேன், பொறுப்புணர்ச்சியுடன் மறுமுறை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டேன். முதன் முதலில் எங்கள் பகுதி நூலகத்தில் பேச போகிறேன் என்கிற மகிழ்ச்சி மிக அதிகாமாக இருந்தது, எனக்கு எப்போதும் நெருக்கமானது மிதிவண்டி பயணம், எனது மிதிவண்டியை எடுத்து நூலகத்திற்கு சென்றேன், 10 . 30 திற்கு ஆரம்பிப்பதாக அழைப்பிதழில் கோடிட்டிருந்தார்கள் அதற்கு முன்னரே சென்றேன் ஒரு டீ அருந்திவிட்டு சரியான நேரத்திற்கு சென்றேன். அங்கு இலக்கிய சந்திப்பு மாதிரியான எந்த வித அறிகுறியும் தெரியவில்லை, 10 . 45 மணிக்கு பிரவீன் வாசிகசாலை பெரியார் நகர் நூலகத்தின் ஒருங்கிணைப்பாளர் வந்திருந்தார், அறிமுகம் செய்துக் கொண்டார். நானும் அவரும் மட்டும் இருந்தோம். 15 இருக்கைகளை கொண்டுவந்து சீரமைத்து வைத்தார். " என்ன கம்மியா ச்சார் போட்றாப்ல " என்ற மைண்ட் வாய்ஸ் கரகரத்த குரலில் ஒலித்தது.
                    11 மணி ஆனது நானும் பிரவீன் மட்டும் இருந்தோம், "சகோ .. உங்க பிராண்ட் சர்கில்ல கூப்டீங்களா ?? தீபாவளி வாரம் வேற .." என இழுத்தார். என் நண்பன் அருள் ஜோதி வந்தான் அப்பாடா என்றானது, இனிமே எல்லாரும் வர ஆரம்பிச்சிருவாங்க வடுக்கப்பட்டி ராமசாமி மொமென்ட் வர .15 நிமிடங்கள் கழிந்தது; நான் பிரவீன் அருள் ஜோதி மற்றும் 12 இருக்கைகள். "நீங்க ஆரம்பிங்க" என்றார் பிரவீன். நானும் பேச தொடங்கினேன், நான்கு நபர்கள் கூடினார்கள் அப்படியே கொஞ்சம் நேரத்தில் 2 நபர்கள், ஆகா மொத்தம் 8 பேர். அருள் ஜோதிக்கு அவ்வளவாக புத்தகத்தில் நாட்டமில்லை இருப்பினும் எனக்காக வந்தமர்ந்தான், ஒரு மணிநேரம் ஐந்து நிமிடங்கள் பேசினேன் அதில் முப்பதாகும் மேற்பட்ட கொட்டாவியை விட்டான்.
                    ஆக, சுஜாதாவின் படைப்புலகம் , நாவலின் பெரும் வரலாறும், புனைவெழுத்தின் ஆதியும் அந்தமும், நம் இடத்தின் வரலாறு, குயவர்களைப் பற்றி என அனைத்து பொருட்கள் வாங்கும் கடையாகக் கூவி முடித்தேன். அன்று வந்த சிலர் மிகவும் ஆழமாக சிந்திக்கும் பாங்குடையவர்கள், மிக நுட்பமாக கவனித்தார்கள்,ஆங்காங்கே கொட்டாவிகள் ஏற்புடையது தானே ! நான் பெரிய பேச்சாளன் அல்ல , சாதாரண டுபாக்கூர். அலாதியான மன நிறைவுடன் அங்கு வந்த ஒருவர் எனக்கு அருள் ஜோதி, பிரவீன் மற்றும் இன்னொரு அன்பருக்கு டீ வாங்கிக் கொடுத்தார், இனிதே சில நிகழ்வுகளை நேரிலே பார்த்ததுப் போல பேசி அன்றைய தினத்தின் சிறப்பான நொடி பொழுதிற்கு என்டு கார்டு போட்டேன், அருள் ஜோதியும் கிளம்பினான், வீட்டிற்கு சைக்கிள் பயணம் தொடங்கியது.
               அடடே ... மிக முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன், நண்பன் விமல் நான் பேச ஆரம்பித்த 10 நிமிடங்களில் வந்தான், யாரையுமே நான் அழைக்கவில்லை அவன் வந்து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தான். ரெயின்போ FM இல் அவன் RJ வாக பணிபுரியம் போது எனக்கு பழக்கம், தமிழை அவ்வளவு இனிதாக பேசுபவன், அருமையான உச்சரிப்பு கொண்டவன். அவனின் தேடல் பெரியது , எங்கு இத்தகைய இலக்கிய சந்திப்பு நிகழ்ந்தாலும் சென்று அட்டெண்டென்ட்ஸை போட்டு எதாவது கற்று கொண்டு வரலாமா என்று எண்ணுபவன். விமல் வசிப்பது திருவள்ளூர் எனக்காகவே பெரம்பூர் வரை வந்தான், என் வீட்டின் அருகாமையிலுள்ள நெருங்கிய நண்பர்கள் கூட வரவில்லை. நெகிழ்ந்து போனேன், வரும் சொற்களால் நன்றி மட்டும் சொன்னேன். அவனிடம் எந்த வித எதிர்பார்ப்பும் அற்ற அன்பு இருக்கிறது அது அவனை வேறு தளத்திற்கு இட்டுச் செல்லும்.
                சரி முடிவிற்கு வருவோம், முகநூலில் 100 க்கும் மேற்பட்ட லைக்குகள், 10 கும் மேற்பட்ட பகிர்வுகள், வாட்ஸ் ஆப்பில் 100 கும் அதிகமானோர் எனது ஸ்டேட்டஸை பார்வையிட்டனர். இதில் 1 % மக்கள் வந்திருந்தாள் அந்த 15 இருக்கைகள் நிறைந்திருக்கும். எல்லாருக்கும் எல்லா வேலைகள் இருக்கும் அதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் அருகிலிருக்கும் நண்பர்கள் கூட எட்டி பார்க்கவில்லை அதிலும் சமூக ஊடகம் என்றுமே நம்பத்தக்கதல்ல அது மாயையின் மற்றோரு பரிணாமம். அந்த கரடி கதை போலவே , சில நேரங்களில் உண்மையை அந்த கரடியாக வந்து சொல்லும் அவர்களை நம்பாதே என. தனிப்பட்ட முறையில் 4 பேர் அல்லது  400 முன்னிலையில் பேசினாலும் தயாரிப்பில் ஒரே உழைப்பு , அதே புத்துணர்ச்சி இருக்கும்; மொத்தத்தில் சுஜாதாவின் படைப்புக்களை விட அருள் ஜோதி மற்றும் விமல் யார் என்று இன்னும் அதிகமாக புரிந்தது.

8.30 PM
04-11-18

Wednesday, March 15, 2017

அனுபவங்கள்

நல்ல சினிமா, வான் கோப் / ட்ரொட்ஸ்கி மருது ஓவியங்கள், பீத்தோவன் 9th சிம்பொனி, பிடித்த பாடல்கள், சில மூட்டையில் புத்தகங்கள், நெருங்கிய நண்பனிடம் 2 நிமிட உரையாடல், நண்பனின் பழைய புகைப்படம், அம்மாவின் டீ, மிதிவண்டியில் நீண்ட பயணம், பேருந்தில் ஜன்னல் சீட், பழைய பாதுகை, மை பேணா, கிறுக்கிய பழைய பேப்பர், பிராபஜனின் குமாரசாமியின் பகல் பொழுது சிறுகதை, யாரும் பார்க்காத போது சத்தம் போட்டு அழுவது, மேகம் நகர தெரியும் நிலா, முகமறியாதவன் சிரிப்பு, வேகமாக வந்து ஸ்டாண்ட் எடுங்க ன்னு சொல்பவரின் குரல், முச்சந்தி விநாயகரிடம் உச்சு கொட்டும் பள்ளி குழந்தை, மரங்களினூடே வெயிலின் கீற்று, ரமலான் மாதம் மசூதியின் ஒலி பெருக்கியில் ஒளிரும் வேண்டுதல்கள், கற்பூர இலையின் வாசம்,
என (,) கம்மாக்கள் நிறைந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையில் கலக்கம்/தோல்வி/வருத்தம்/ஏக்கம் என பல வருமாயின்...

மேலே* இட்டுள்ளவையில் இரண்டோ மூன்றோ கிடைத்தால் போதும் ...
வாழ்க்கை ஒரு மாயப்பெட்டியின் ஒளிந்திருக்கும் ஆச்சர்யம்!!
many tiny things can lift you in many ways !!
*உங்களுக்கு தகுந்தாற் போல

Sunday, November 15, 2015

சொல்லத் தோணுது...



                            அப்படத்தின் காதலை இணைக்கும் பாலம் Somerset Maugham novel, இயக்குனரோ அல்லது உதவி இயக்குனரின் இலக்கிய ஆளுமை என்பதில் அதிலே புலப்படும்.இந்த படம் ஓர் உண்மை கதை என்பதை ஒவ்வொரு காட்சி படிமம் உறுதி செய்யும். காதல் தோல்வியின் உணர்வின் பிரதிபலிப்பு உடைந்த கண்ணாடி மனதின் துகள்கள் சொல்லும், அவ்வுணர்விற்கு விதவை கோலத்தின் வண்ணம் பூசாமல், பூ வைத்து அழகு பார்த்திருப்பார் இயக்குனர், தமிழ் திரையுலகில் மிக முக்கியமானவர். இந்த படம் தோல்வியை தழுவியது, நேர்த்தியாக திரைக்கதை அமைக்கவில்லை, ஒரே பாணி தான் என்று பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், அப்படம் ஓர் உணர்வின் குவியலே! இன்று தொழில்நுட்பம் நம் உறுவுகளை நொடிப் பொழுதில் அருகே அழைத்து சென்றாலும் அவர்களின் மனதை புரிந்துணரும் நேரம் தூரமே!! ஒரு இன்லண்ட் கடிதம் அல்லது போஸ்ட் கார்டு உறவுகளை அர்த்தப்படுத்தும், அப்படியொரு முக்கியமான கருவியாக கடிதங்கள் இப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும், இந்தக் காலத்தில் இப்படியொரு கதையை சிந்திக்க துளி கூட வாய்ப்பில்லை அதனால் தான் பீரியட் படங்கள் வருகிறோதோ. வெற்றிமாறன், மிஷ்கின் இப்படத்தின் உதவி இயக்குனர்கள், படத்திலும் சில காட்சிகளில் தோன்றுவார்கள். எவ்வளவு முறை பார்த்தாலும் AR இன் இசை புதிதுப் போல தோன்றும், வாலியின் வரிகள் வலியின் தீரா தைலம். இப்படத்தை கட்டமைத்தவர் கதிர் சார். கவிதை எழுத இயற்கையும் சூழலும் தேவையில்லை மனதிற்கு பிடித்த படைப்புகளைப் பார்த்தாலும் தான்..
"காதல் வைரஸ்" பரவாத மனசில்லை ..

Tuesday, September 29, 2015

என் இதயச் சூட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் RX 100 பயணம்...

என் இதயச் சூட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் RX 100 பயணம்...

                    இந்த நிகழ்வும் உணர்வும் உங்களுக்கு வாய்திருக்குமானால் என்னை போல நீங்களும் ஓர் அதிர்ஷடசாலி, நான் பணி புரிந்த நிறுவனத்திலிருந்து இன்று விடைப் பெற்றேன், கடைசி நாள் என்று சொல்ல மனது இடம் கொடுக்கவில்லை, பிரிவின் தொடக்கம் என உரக்கச் சொன்னது ;கொஞ்சலான முத்தம் கொடுக்கும் பொய்யை விட பளீர் அரை விழும் உண்மை மெச்சத்தக்கது; இந்த ஒன்றரை மணி நேரம் RX 100 ல் ஒன்றரை ஆண்டு பணி புரிந்த நிகழ்வுகள், நினைவுகள் ,குறும்படங்கள் எடுத்த நாட்கள், சிரித்த , சண்டையிட்ட, அழுத உணர்வகள் ஒவ்வொரு க்ஷணமும் எதிரில் வரும் விளக்குகள் போல மின்னிக் கொண்டிருந்தது. சௌந்தரிடமும் தீனாவிடமும் மூவரும் சரவண பவனில் ஒரு காபி குடித்து படித்த பிடித்த கதையை , புத்தகத்தின் விமர்சனத்தை பேசிக்கொண்டே ஆறிப்போன காபியில் விழுத்த ஈயாய் ஆனேன் இன்று. நட்பின் சான்றை சமிக்ஞையில் சொல்லி கொடுத்த சௌந்தர், பிரேம், சர்வதா, திவ்யா, தினேஷ், வினோத் என நீளும் சிந்தனையில் டைடல் சிக்னலை கடக்க சற்றே சிவப்பு தெரிந்தது. நான் எடுத்த முடிவு சரியா என சிவப்பு அறிகுறி சொல்கிறதா என்று எண்ணுகையில் பச்சை விளக்கு பளீரிட்டது, என் RX 100 உறுமி என்னை அசைப்போடு என்று சொன்னது,சிலரிடம் பேசியதே இல்லை ஆனால் இன்று வந்து வெகு நாள் பழகினாற்போல் பேசின நண்பர்கள் என்ன சொல்வது ? மனது சொன்னது ' நீ அதிர்ஷ்டசாலி' புன்முறுவலுடன் நகர்ந்தேன் புழுதியில் நினைவுகளை தூசி தட்டி;
நான் எழுதும் கிறுக்கல்களை, குறும்படங்களை, அர்தமற்ற வானொலி பேச்சுகளை வெகுவாக பாராட்டி என்னை மிகவும் ஊக்குவித்த நண்பன் பிரகாஷ் , நான் எழுதியது அவனுக்கு முதலில் அனுப்புவேன், உடனே படித்து அவனின் நண்பர்களனைவருக்கும் பகிர்ந்துவிடுவான், அவனை பிரியும் போது குரல் தழுதழுக்கிறது, உண்மையான நண்பனின் பிரிவில் கண்கள் ஈரமானது அதிசியமில்லை, ஒரு மேலாளர் போலில்லாமல் நண்பனாய் பேசிப் பழகிய யாசர் இன்று மாலை 6 மணிவரை என் மனதை மாற்ற முயற்சி செய்து நான் வெற்றி பெற்றேன் ஆனால் அவரின் அன்பில் தோற்றுப்போனேன்.திவ்யா, தினேஷ் அன்பளிப்பாக கொடுத்த 'திருடன் மணியம்பிள்ளை' , மை பேனா வை யோசித்து சேத்பட் சிக்னலையும் கடந்தபோது அவர்கள் என் மனதை களவாடினார்கள் என இதயத்தில் ஒரு ஹோர்ன் அடித்தது, அப்படியே சிந்தனையோட்டத்துடன் செல்கையில் ஒரு ஆட்டோவில் " ஆகாசத்த நான் பாக்குறேன் .." என்ற பாடல் ஒலிக்க சர்வதா ஞாபகத்திற்கு வந்தாள், அவள் பாடிய பாரதியின் பாடல்கள்,வாதங்கள், எனக்காக இன்று எல்லைரையும் திரட்டியது, 20 நாட்களே பழகிய பென்னி 20 வருடம் பழகினார்போல தெளித்த அன்பு; சண்முகம், இலக்கிய படைப்பின் ஆளுமையை, உலக திரைப்படங்களை என பல்வேறு கருத்தக்களை தெளிவாக வேறு சிந்தியலில் சொல்லும் தம்பி, லெமன் டீயில் இருக்கும் புதினா வாசம் சொல்லும் எங்கள் நட்பின் சுவாசம், வெகு சில நாட்களே பேசிய ராதாவும் ஜெயந்தியும் 'ரூட்ட மாத்து' எனும் புத்தகம் கொடுத்த திகைக்க வைத்தனர்.என் கதைகளை வெகுவாக மெச்சிய சுந்தர் அண்ணா, யாமினி அவர்களின் பாராட்டுகளை பெற்ற நொடிகள், என நீங்கா நினைவுடன் சாம், வினோத், சரவணன்,கார்த்தி, ஜூட், மோகனா, நிதி, விஜயனின் நனைந்து கொண்டே சென்றேன் கெல்லிஸ் சிக்னலில் கண்கள் ஈரமாய் நீர் ஊற்றுப் போல் கசிய அருகிலிருந்த பஜாஜ் M 80 அண்ணா " ஏன்பா .. RX 100 னா ஸ்பீட் ஆஹ் தான் போவிய ?? கண்ணுல பார் தண்ணி .. தொடச்சிக்கோ " என்றார் ..
" ஆமா அண்ணா .. கொஞ்சம் ஸ்பீடு தான் " என்றேன்
அவர் காலத்தின் அசரீரி... கண்களை துடைத்து கனமான மனதுடன் வீடருகே வந்தேன். தொடர் வண்டி அருகே செல்லும் வீதியில் என் RX 100 ஐ நிறுத்தி, தொடர் வண்டி செல்ல... இவ்வளவு நினைவின் குவியல்கள் , அன்பு இதையங்கள், நெகிழியற்ற முகங்கள், பேச நினைத்து ஈடேறாத நபர்கள் , பேசிய நபர்கள் என பல படிமங்கள் தொடர் வண்டி வராத நிசப்தத்தில் கூச்சல் போட்டன .....
"பாதைகள் தொலைந்த பின்னும்
பயணங்கள் முடிக்க மறுக்கிறதே!
தேடிச் சென்றாலும்
சிறகுகள் உடைந்து போகிறதே !
எதுவுமில்லை நிரந்தரமென புரிகிறதே!
இதுவும் கடந்து போகிறதே !!"
நீங்களும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள் இத்தகைய நட்பின் கூடாரத்தில் ...

Sunday, August 30, 2015

பங்கஜம் அத்தை

       அவளை எண்ணும்போதெல்லாம் மனதில் மயிலிறகுடன் முற்கள் சேர்ந்து வருடி கீறுவது போல ஓர் பாதிப்பு, பங்கஜம் அத்தை ஒரு காலத்தில் என் வீட்டிற்கு பக்கத்து வீடு, என் பால்யம் முடிவதற்குள் அங்கிருந்து நான் வேறிடத்திற்கு நகர்ந்தேன் ஆனால் அத்தை என்னுள் பட்டா போட்டு அமர்ந்திருந்தாள்.அவளது கணவன் பழனிசாமி இறந்து 15 ஆண்டுகள் கடந்தது, அவர் இருக்கும் போதே குடியும் குடியுமாக தான் இருந்தார்,அவர்களுக்கு விழுதுகள் இல்லை. வாழ்க்கையின் வெற்றிடத்தில் அத்தைக்கு வந்த வாய்ப்பு மழலைகள், சிறார்களின் ஆய்யை அகற்றி ஹாயா ஆயா வேலை, அதீத மகிழ்ச்சியுடன் பணி புரிந்தாள். ஒவ்வொரு முறை அந்த பள்ளியையும் ,வீட்டையும் கடக்கையில் அவளது கீழ் பல்லில்லாத சிரிப்பு அகத்தில் மின்னலாய் தோன்றும்.
வருடத்திற்கு ஒருமுறை அவளை நான் சந்தித்தால் அரிது ஆனால் அவள் எப்படியாயினும் ஒவ்வொரு சனவரி மாதம் எனக்கு பிடித்த ஆசை சாக்லெட்டுடன் பார்க்க வருவாள் அன்றும் நான் இருக்க மாட்டேன், ஆசை சாக்லெட் எங்கும் கிடைக்காது இதற்காக வேப்பேரியில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து வாங்கி வருவாள். கசங்கிய நெகிழிப் பையில் பத்து முதல் பதினைந்து ஆசை சாக்லேட்டுகள் இருக்கும் அவள் சென்றபின்னும் அந்த ஆசையில் அன்பின் பசை ஒட்டிருக்கும்.காலத்திற்கு கால் உள்ளதால் என்னவோ இவ்வளவு வேகமான ஓட்டம், அத்தையின் அகவை கருதி பள்ளியிலிருந்து ஒய்வு கொடுத்தனர், வெறுமையின் ஆதிக்கம் ஓங்க பிழைப்பிற்காக மணி கோர்த்தல் , வீட்டு வேலை என நேரத்தை மிதி அடியாக மிதித்து.
ஒரு நாள் தபால் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் முதியோர் ஓய்வூதியத்திற்காக காத்துக் கொண்டிருந்தது பங்கஜம் அத்தை, அவளருகே சென்று " அத்த .. " என அகவ
"எலே .. மூக்கான்" என்று என் கன்னத்தை தடவினால், அவள் விரல்கள் தவில் வசிக்கும் கலைஞனின் விரல்கள் போல ஏதோ கனமான துணி சுற்றப் பற்றிருந்தது.
"இது என்ன அத்த .." என்றதற்கு
"மணி கோக்கையில கண்ணு தெரியாம குத்திடறேன் .. அந்த காயம் தான்" என்றாள்.
என் கண் மணியில் அந்த ஊசி குத்தியது ஒன்றும் வெளிபடுத்தாமல் " பாத்து அத்த ..." என நகர்கையில், முன் நிற்கும் அம்மாவை தன் சற்று நேரத்தில் திரும்புவேன் என்றுரைத்து என்னை அருகிலுள்ள கடைக்கு கூட்டிச் சென்றாள், 5 ஸ்டார் சாக்லேட் வாங்கிக் கொடுத்தாள்." இங்க ஆசை சாக்லேட் கிட்டாது , பொறவு வாங்கியாறேன்.. வர்ட்டா .." என கூறி நடையை வேகப்படுத்தினாள் வரிசையை பிடிக்க, டப் .. டப் என்ற ரப்பர் செருப்பின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது அவள் சென்றபின்னும் கூட, அந்த பாத வெடிப்புகள் கூறும் அன்பின் பாதையை. என் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் 5 ஸ்டார் சாக்லேட் இன்றும் காட்சி படிமம், அன்பின் சின்னம்.
ஆசை சாக்லெட்டை பிரிக்கும் போது பாசத்தின் சுவை பசையாய் இதயத்தில் ஈரமாக இருக்கும் .இன்று அத்தைக்கு 66 அகவை பூர்த்தி, அவளுக்கு பிடித்த சாம்பார் வடையுடன் ..........

Friday, July 3, 2015

பயணத்தினூடே ..‏

பயணத்தினூடே ..

     என் கல்லூரி நண்பனின் திருமணம் கடந்த ஞாயிறு தஞ்சை மாவட்டம் காவரப்பட்டு கிராமத்தில் நன்றாக நடந்தேறியது, இதற்கு நானும் இன்னொரு நண்பனும் சனி இரவு புறப்படலாம் என முடிவெடுத்தோம் ஆனால் அவனால் வரயிலவில்லை, நான் மட்டும் தஞ்சை வரை செல்ல வேண்டுமா ? அதுவும் அடியேன் சென்னை வாசி ,எனக்கு வழி தெரியாது  எனும் ஒட்டு மொத்த கலக்கம் தொற்றி மனதில் விவாதமானது, இறுதியில் போக வேண்டாமென்ற முடிவை எடுத்தேன், பிறகு  நண்பனை  நேரில் சந்தித்து சாக்கு சொல்லிவிடலாமென நினைத்துக்கொண்டேன், 9 மணியளவில் ஒரு மனக்குரல் ஒலித்தது  'உனக்கு வாய் இல்லன நாய் தூக்கின்னு போய்டும்..போய்டும்..போய்டும் ' அட எக்கோ லாம் அடிக்குதே என்ற பிரம்மிப்புடன் கிளம்பினேன் கோயம்பேடுக்கு , 10 மணிக்கு சென்றடைந்தேன் அடித்து பிடித்து நடைமேடை 1 ல்  தஞ்சை பேருந்து ஒன்று புறப்பட தயாராக இருந்தது, அருகிலிருந்த கன்டக்டரிடம் 'அண்ணே , சீட் இருக்கா ??" என்றேன்.  'இருக்கு பா போ .. ஏறு.. ஏறு' என்றார். பத்து தெரு விளக்குகள் முகத்தில் அடித்தார்ப் போல பிரகாசமானது , ஏறி உள்ளே சென்றால் லாஸ்ட் 5 சீட்கள் மட்டுமே காலியாக இருந்தது, தெருவிளக்குகள் சட்டென்று மெழுகுவத்தியனாது, அப்படியே ஜகா வாங்கி வேறு பேருந்தில் ஏறிடலாமெனத் திரும்பினால் '225 ரூபா எடுப்பா, இந்தா டிக்கெட் ..' என்றார் கன்டக்டர்.  'நோவ் ... லாஸ்ட் சீட்டு தான் காலியாயிருக்கு , அதவும் தூக்கித் தூக்கி போடும் .. நான் வேற தொலவா போறேன்..' என்றதக்கு 'டிக்கெட்டுக்கு 225 ரூபா கொடு இல்லாட்டி யாரையாவது புடிச்சி கொடுத்துட்டு கிளம்பு' என்றார். கோவம் என் கண்களில் தெரிந்து, உதடு  கெட்ட வார்த்தைகளுக்கு ஆயுத்தமானது ஆனால் 'மதுர மல்லி ..மதுர மல்லி.. ' காமெடி நினைவிற்கு வந்து வடிவேலு சிரிக்க வைத்தார், நூதன திருடன் கன்டக்டரிடம் அந்த மானங்கெட்ட டிக்கெட்டை வாங்கி கடைசி சீட்டில் அமர்ந்தேன், பேருந்தும் புறப்பட்டது, எதிர் பாராமல் அல்லது திடீர் பயணம் இப்படி கொடுமையாக தான் அமையும் என்று யோசிக்கையில் ஸ்ப்ரிங்கில் அமர்ந்து ஏக்குவது போல குதித்தேன், இந்த வேகத்தடைக்கேவா என்ற கலக்கத்திலிருக்க மெதுவாக இருக்கும் 2 சீட்டுகளும் நிறைந்தது, என் அருகே இரண்டு சீட்கள் காலியாக இருந்தது கொஞ்சம் வாட்டமாக தூங்கிவிடலாம் என்ற யோசனையில் தண்ணீர் தெளித்தார் போல இரண்டு நபர்கள் ஏறினார்கள், என்னருகே அமர்ந்தனர்,லேசான ஒரு துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்தது மட்டமான மானிட்டர் சாராயத்தின் வாசனை அது, அவர்களிடமிருந்த என்னிடம் படற ஆரம்பித்தது, 'மச்சா .. மேஸ்திரி தலைல சென்றிங் பலகை போட்டு கடகால் நடல .. என் பேர சேஞ் பண்றேன்'  என்றான் ஒருவன். இன்னொருவன் அதற்கு 'அவன நான் தான் போடுவேன்... நீ வராதே .. நான் தான் ஜெயிலுக்கு போவேன்' என்றான். அவர்கள் கட்டிடத் தொழிலாளர்கள், எனக்கு அவர்கள் ஏது வேண்டுமானாலும் பேசட்டும் பேருந்தின் குலுங்கலில் என் மீதி வாந்தி மட்டும் வேண்டாமென வேண்டினேன். சிறிது நேரத்தில் துர்நாற்றம் மூக்கை காக்கவிற்கு போட்டது போல உணர்வு, ஏன் இப்படியென்று பார்த்தால் இரண்டில் ஒருவன் வாயைப் பிளந்து என் தோளில் தூங்கினான், இப்பொழுது வாந்தி எனக்கு வர ஆர்மபிதது 'டேய் ... நீ குடிச்சதுக்கு , நான் வாந்தியெடுக்கனுமா ..' என்ற முணங்களுடன் அவனை எழுப்பினேன்,சற்று கண்ணசைந்து கண்விழிக்கும் நேரத்தில் வாந்தி வரவில்லை தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்தது.          விலாசம் தெரியாது ஊர் மட்டும் தான் தெரியும்  நண்பன் கொடுத்த உறவினர் அலைப்பேசி எண்ணையும் என்னிடமிருந்து வழுக்கிவிட்டது, அவனும் கல்யாணத்திற்கு ஆயுத்தமாகிக் கொண்டிருப்பான் அதனால் அவனையும் அழைக்கவில்லை, ஒரு தேநீர் அருந்திய பிறகு யோசிக்கலாமென அருகிலுள்ள தேநீர் கடைக்கு சென்றேன், குடித்து முடிந்தாகியது. 'அண்ணே !! காவரப்பட்டு எப்படி போகணும் ??' என்றேன் கடை உரிமையாளரிடம்.
'காசு ஜாஸ்தியா இருந்தா ஆட்டோ ல போலாம், கம்மி யா இருந்த பஸ் ல போலாம்' என்று கூறி நகைத்தார் அந்த அதி காலையில் ஒரு கலாய்ப்பு, நான் எதுவும் பேசாமல் நகர ஆரம்பிதேன். 'தம்பி கோச்சிகிடாதீங்க சும்மா ஒரு கட்ட கொடுத்தேன், என்னக்கு தெரியாது இருங்க கேட்டு சொல்றேன்' என அவரே அக்கம் பக்கத்தில் விசாரித்தார், அந்த வேளையில் ஒருவர் தேநீருக்காக காத்துக் கிடந்தார், நான் அவரை உரக்க குரலில் 'அண்ணே !! கடைக்கு ஆள் வந்து இருக்காங்க, நான் தேடிக்கிறேன் உங்க வியாபாரத்தை பாருங்க'. ' அஞ்சு நிமிசம் ஆகும் சொல்லுங்க .. இந்த வந்துடுறேன் ' என்று மும்மரமாக எனக்காக காவரப்பட்டை தேடிக்கொண்டிருந்தார் , நான் அவர் உள்ளத்தால் தொலைந்து போனேன் !   'இங்கிருந்து ஒரத்தநாடு பஸ் ஏறுங்க தம்பி, ஒரத்தநாடுல  எறக்கி விடுங்க ன்னு கன்டக்டர் கிட்ட சொல்லிகிடுங்க. அப்பறமேட்டு அங்கிருந்து மன்னார்குடி பஸ் ஏறுங்க, காவரப்பட்டு ன்னு சொன்ன கரெக்ட் அஹ இருக்குவாய்ங்க' என்றார்.   அவரிடம் நான் எதுவும் பேச முடியவில்லை , தலை மட்டும் அசைத்தேன் ஏதோ பேச வேண்டுமென 'என்னால உங்களுக்கு வியாபாரம் போச்சே' இதற்கு அவர் அலட்டி கொள்ளாமல் 'அட போ... பா, உதவி செய்றது ஒரு வரம் அது சின்னதோ பெரியதோ மனுசனுக்கு மனுசேன் உதவாம வேற யாரு ?? பாத்து போ.. பா '  என்றார்.         மனிதம் இருக்கிறது என்பதை லாவகமாக சொன்னார், அங்கிருந்து குளிப்பதற்கு விடுதி போல தேடினேன் எல்லாம் ஒரு நாள் வாடகை தான் என்று கூறினார்கள், ஒரு நகராட்சி குளியலறையும் கழிவறையும் இருந்தது அங்கு சென்றேன் ஐந்து ரூபாய் மட்டுமே கொடுத்து உள்ளே சென்றேன், குளித்தால் இன்னும் அழுக்கு வந்து சேரும் என்பது போல சேர் கலந்து , பாசி மண்டிக் கிடந்தது அப்படியும் பலர் அங்கு புழங்கினர் , சரி நானும் அவர்களைப் போல் தானே என நினைத்து நனைந்தேன் அந்த துருப் பிடித்த குவளையின் தண்ணீரில்; ஒரு வழியாக குளித்து வெளியே வந்து , 5 ரூபாய் கொடுத்தவரிடம் கேட்டேன் 'ஏன் தலைவரே , பாத்ரூமும் கக்கூசும் சுத்தமாவே இல்லையே, கழுவுவீங்களா  மாட்டீங்களா ??" என்றதற்கு  'சுடுகாடு கக்கூசும் ,பாத்ரூமும் அப்படி தான் இருக்கும்' என்றார்.  ஆச்சர்யம் கலந்த ஏமாற்றத்துடன் 'அடங்க.. ஹலோ முதலயே சொல்ல வேண்டியது தானே'.  'இங்க போனதுலயே நீ தான் காசு கொடுத்த அதான் ' என்று அவன் சொன்னான்.  அந்த இடத்தைவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் நடந்தேன், சிறிது நேரத்தில் அதை யோசித்து சிரிப்பு வந்தது சிரித்துக்கொண்டே நகர்ந்தேன், அதுவும் தண்ணீர் தானே ! அவர்களும் மனிதர்கள் தானே !!. ஷவெரில் குளித்தால் இந்த அனுபவம் வாய்க்குமா என்ற ஆசுவாசத்துடன் நடந்தேன், நான் திடீரென திரும்பி நகராட்சி குளியல் அறையருகே சென்றேன் அந்த நபரிடம் கையில் பத்து ரூபாயை திணித்தேன், 'என்ன பா திரும்பவும் போ போரியா ?? ' என்றார். 'இல்ல .. ஏற்க்கனவே ரெண்டு தடவ போய்ட்டேன் அப்போ காசு கொடுக்க மறந்துட்டேன், முடிஞ்சா கொஞ்சம் சுத்தம் பண்ணுங்க என்று கூறி நடையை பேருந்து நிலையத்திற்கு சாத்தினேன், அந்த நபரின் முகத்தில் சலனமே இல்லை காசை மேஜையில் வைத்து குளியலறையும் கக்கூசையுமே பார்த்தான்.

           ஒரத்தநாடு பேருந்தில் ஏறினேன், காவரப்பட்டு செல்லும் வழி இரண்டு மூன்று நபர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டேன், தெற்கத்திய மக்கள் பலர் பேசும் தமிழும் ,மரியாதையும், பண்பும் சென்னை வாசிகளை ஒரு தராசில் வைக்க தோன்றியது.செல்லும் வழியெல்லாம் பூமியில் பச்சை நிறம் பெயிண்ட் பூசியவாறு இருந்தது, கம்மாய் , பம்ப்பு செட், வாட்டம் காட்டிய நன்செய் நிலம், பயிர்கள், வைக்கோல்கள்,உர மூட்டைகள், ஏறுப் பூட்டிய மாட்டு வண்டி, ஓலை வீடும் ஓடு வீடும், ட்ராக்டர் சத்தம், சீரான காற்று; பேருந்து பள்ளத்திலும் மேட்டிலும் இறங்கியபோது கூட சூழலின் காட்சிகள் சமம் செய்தது. ஒரத்தநாடு இறங்கி மன்னார்குடி பேருந்து பிடித்தேன், 'அண்ணே ! காவரப்பட்டு ஒரு டிக்கெட் கொடுங்க' என நடத்துனரிடம் கேட்டேன். அவர் என்னை பார்த்து 'எ. எம். ஆர். கே கல்யாண மண்டபம் போறீங்களா' என்றார்.
  'கல்யாணத்துக்கு போறேன், அங்க ஒரு கல்யாண மண்டபம் தான் இருக்கா'  என்று வினவியதற்கு 'ஆமாம் ...' என நிதானமாக சொன்னார் அவர்.     இன்னொரு நண்பனின் குறும் செய்தி அதை சதப்படுத்தியது, கல்யாண மண்டபம் சென்றடையும் போது காலை 8.45, என் நண்பனின் நிழற்படம் பெரிய பதாகையில் சிரிப்புடன் ஜொலித்திருந்தான், உள்ளே சென்றால் தவிலும் நாதஸ்வர கலைஞர் மட்டும் வாசித்திருந்தார், அவர்களை தவிர்த்து நான் தான் இரண்டாவதாக அங்கு நுழைகிறேன் எனக்கு முன்னர் ஒரு தாத்தா இருந்தார், 'என்னடா .. மச்சா 9 டூ 10.30 ன்னு சொன்னான் இங்க யாருமே இல்லையே' என்ற முணு முணுப்புடன் பேன் கிழே அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்து தான் தெரியும் முகுர்த்தம் 10.30 யிலிருந்து 12.00 வரை என, கூட்டம் அவ்வளவு அதிகமாக வர ஆரம்பித்தது தலைவர் படத்தின் முதல் ஷோ வைப்போல், அங்கு இன்னொரு நண்பனை சந்திதேன் சந்தோஷ் வெகு காலம் கழித்து; ஊர் கதையை பேசி நேரம் போனது, திருமணம் முடிந்தது புகைப்படகாரர்களுக்கு 'கொஞ்சம் ரைட், கொஞ்சம் லெப்ட்' என சொல்லுவதற்காகவும் நண்பனுக்கு வாழ்த்து சொல்லவும் மேடை ஏறினேன் , இரண்டும் இனிதே முடிந்தது. பந்தியில் அமர்ந்தவாரே சந்தோஷ் என்னை கும்பகோணத்தில் விடுவதாக சொன்னான் , இலகுவாக செல்லலாம் என்று சரி  என்றேன், கிளம்பலாமேன்றால்  இன்னொரு நண்பன் இம்ரான் வருகை புரிந்தான் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திதேன் அவனை, அவன் பங்கிற்கு ஓர் பரிசை மாப்பிளைக்கு கொடுத்து  பின்னர் அவன் என்னை திருச்சியில் விடுவாதாக சொன்னான் ,அங்கிருந்து சொகுசு பேருந்து ஏதாவது இருக்கும் என எண்ணினேன் அப்படியே சந்தோஷுக்கு விடைக் கொடுத்து நானும் இம்ரானும் கிளம்பினோம்.
      புல்லட் இம்ரானுக்கு கச்சிதமாக பொருந்தியது, 'வண்டி செம்மைய இருக்கா மாமா' என்றேன், 'இரவல் வாங்கினா எல்லா செமையா தான் இருக்கும் மாம்ஸ்' என ஒரு போடு போட்டான். காவரப்படிலிருந்து திருச்சிக்கு பயணம் 60 கிலோ மீட்டர், அவனை நான் சரியாக 6 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறேன் இங்கு வருவானென நினைக்க கூட இல்லை. சிறிது தூரம் பேசினோம் பின்னர் காற்று பேச ஆரம்பித்தது, எதிர் காற்று பலமாக வீசியது. அப்படியும் விடாமல் சுடும் 2 மணி வெயிலில் பாச மழையைப் பொழிந்தோம். இம்ரான் என்னை ஓட்டும்மாறு சொன்னான், நோன்பில் இருந்ததனால் கலைத்து போயிருந்தான், நான் சிறு தூரம் ஓட்டினேன் காற்று புல்லட்டை ஒரு பக்கமாக இழுக்கும் போது தான் இம்ரானின் கஷ்டம் புரிந்தது. அவனிடம் பயணம் செய்த 1 மணி நேரம் காற்றால் எதுவும் பேச முடியவில்லை ஆனால் அதே காற்று எங்களின் கல்லூரி நாட்களின் சருகை நினைவில் கிளப்பிக் கொண்டே இருந்தது, மெரினா பீச் , விக்டோரியா ஹாஸ்டல் , பொது பணித்துறை கான்டீன் என அங்கங்கு கொண்டு சென்றது. திருச்சி பேருந்து நிலையம் வந்தடைந்தோம் அவனுக்கு விடைக் கொடுக்கும் முன்பு என்னை வற்புறுத்தி மாசா வாங்கிக் கொடுத்தான் அதில் காற்றின் வாசம் நிறைந்திருந்தது.
      இம்ரானின் திடீர் சந்திப்பு என்னை நெகிழ வைக்க, மாசா அருகும்போது ஒரு முதிய வயது அம்மா அமர்ந்திருந்தார். அவருக்கு இம்ரான் இரண்டு இட்லி வாங்குவதற்காக சென்றான் 3.30 மணிக்கு இட்லி இல்லை எனினும் ஒரு கடையில் கிடைத்தது, அந்த முதிய அம்மாவிற்கு கொடுத்தான். இம்ரான் அங்கிருந்து முசூரி எனும் ஊரிற்கு சென்று வண்டியை தெரிந்தவர்களிடம் கொடுத்து தருமபுரி செல்லவேண்டும் ஆகையால் என்னை புது பேருந்து நிலையம் போகும் பேருந்தில் ஏற்றினான், படிக்கட்டில் ஏறும் போது அந்த முதிய அம்மா எங்களை நோக்கி ஓடி வந்தால் நானும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன், இன்னும் காசு கொடு என்பாளோ என்ற ஊகத்தில் இருக்கையில் அவள் எங்களருகே வந்து 'அப்பா.. சாமி ... என் பக்கத்துல ஒரு அம்மா இருக்கு அதுக்கு இந்த இரண்டு இட்லில ஒன்னு கொடுக்கவா' என்றாள். என் கண் கலங்கியது 'சரி .. கொடுங்க என்றோம் ' அவளும் சென்றாள். இம்ரானும் நெகிழ்ந்தான், நேரமாகையால் அவனை கிளம்பச் சொன்னேன், மெதுவாக கிளம்பினான். என் மனம் கேட்கவில்லை இன்னொரு இரண்டு இட்லி வங்கி அந்த அம்மாவிடம் கொடுத்தேன், அவர்கள் அதைப் பிரித்து பகிர்ந்தனர். மனம் நெகிழ புது பேருந்து நிலையம் வந்தடைந்தேன்.
           அவர்களிடத்தில் இருந்த அறம் பெரிது,அதை எண்ணியவாரே சென்றேன் சட்டென்று துன்பங்கள் சில்லரையானது . ஓர் எதிர் பாரா பயணம் நமக்கு மனிதர்களையும் மனிதத்தையும் காட்டும் என்பது எவ்வளவு உண்மை, பேராசை கன்டக்டர், குடிகாரன் , டீ கடை அண்ணன், வழி போக்கர்கள், கழிவறை பொறுப்பாளன்,சந்தோஷ் , இம்ரான் மற்றும் முதிய அம்மா என நிறைய அனுபவத்தின் மூட்டையோடு சென்னை பேருந்திற்காக தேடுகையில் தெய்வம் போல   ஒருவர் வந்தார்
'தம்பி ... சென்னையா ?? 'என்றார் . நான் தலை அசைத்தேன்.
'ஏ.சி . பஸ் வாங்க . 'என்றார்.
'அண்ணே .. மணி இப்போ 4 ஆகுது 10.30 கெல்லாம் போகணும் அதுக்கேத்தாமாதிரி சொல்லுங்க'
'அட ... 9 மணிக்கு ரீச் ஆயிடும் பா .. புதுசா நீ ' என்றார்.
பெரிய பேருந்து நின்றது ஏறுவதற்கு முன்பு 350 ரூபாய் பயணத்திற்கு 20 ரூபாய் டிப்ஸ் என வாங்கிக்கொண்டனர், "வர மோது தான் பயங்கரமான சொதப்பல் இப்பயாவது சரியா போவோம்" என்ற மைண்ட் வாய்சுடன் உள்ளே சென்றால் நான் தான் முதல் ஆள், சரியாக 5.00 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது, எனக்குளே சிரித்துக் கொண்டு இந்த பயணத்தில் நடந்ததை அசைப் போட்டு சென்றேன் .

Sunday, April 5, 2015

மெரினா மகிழ்ச்சிகள் !!

மெரினா மகிழ்ச்சிகள் !!

     மெரினா என்ற வார்த்தை கேட்டவுடன் நம் மனதில் கடலின் காற்று வீச தொடங்கும், வாரம் ஒரு முறை மெரினாவிற்கு செல்வோம் ,நமது சிறு சிறு மன கசப்புகளை அந்த உப்புக் காற்று இனிப்பாக மாற்ற முயற்சிக்கும் !!
           
              ஒவ்வொரு முறை நான் மெரினாவிற்கு செல்லும் போது 'டிங்கிரி' நினைவுக்கு வருவான், அவனை 2005இல் சந்தித்தேன் மெரினா கிரிக்கெட் கிரவுண்டில், அவனுக்கு அப்பொழுது 9 வயது இருக்கும், வெள்ளை உடுப்புடன் கிரிகெட் பயிற்சிக்கு வருவான் மேலும் மேட்ச் நடக்கும் போது வருவான்.எங்கள் அணியின் 12 வது ஆள் 'டிங்கிரி'. அவனுடைய தந்தையை அப்படி தான் அங்குள்ளவர்கள் அழைப்பார்கள் அத நாள் அவனுடைய அழகான பெயர் மங்கி 'டிங்கிரி' ஆனது. சுனாமிக்கு அம்மா இல்லை என்று பல அம்மக்களை கொண்டு போனது அதில் அவனுடைய  அம்மாவும் ஒன்று. கடலுக்கு அவ்வளவு சோகமிருக்கும் எவ்வளவு உயிர்கள், சோகத்தையெல்லாம் தனக்குள்ளே ஆழ் சுழிக்குள் இழுத்து ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியின் அலையை கொடுக்கும் அதே போல தான் மெரினா நண்பர்களும்.

          நினைவின் கதவை டிங்கிரி மட்டும் அல்ல, 'சைப்பா' மணி , ஜெய்குமார் , அருண் , ராஜா குரு , சக்திவேல் , செந்தில் , நித்யா அண்ணா, முரளி ,சௌத்ரி, ரஞ்சித், டில்லி அண்ணா , 'முள்ளு மண்டை' அசோக், மோகன், உமாபதி, குட்டி, 'பாப்பா' செந்தில் இன்னும் பலர் நினைவின் கதவை உடைத்து வருவார்கள். கிரிக்கெட் எனும் சத்துக்கு பூதம் தான் என்னை இவர்களுடன் இணைத்தது, இதற்கு காரணம் ராஜா முகமத். லயோலா கல்லூரியில் ரோட்டரி கிரிக்கெட் டோர்னமென்ட் பைனல், என்னை ராஜா சார் " டேய் .. லயோலா கிரௌண்ட் க்கு வந்துரு ரோட்டரி பைனல்ஸ், லெவன் இல்ல டா , டோஸ் போட்டாச்சு சீக்கிரம் வா"  என்றார் அலைபேசியில், அடித்து பிடித்து முப்பது நிமிடங்களில் சென்றேன், அங்கே முதன் முறையாக ஜெயகுமார் , உமாபதியை சந்தித்தேன்.நாங்கள் ஜி. எப். எஸ் அணிக்கு ஆடினோம் அது ஸ்ரீனிவாசன் அண்ணன் தான் உரிமையாளர் அவரும் பதினொன்றில் ஒருவர். நான் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தேன், ஜெயகுமார் பேட்டிங் செய்ய போனான், அவன் அடித்த கவர் டிரைவ் , இன்னும் கண்களில் நிற்கிறது. என்னால் மிக உறுதியாக சொல்ல முடியும் ஜெய் ஒரு பெரிய வீரனாக வந்திருக்க வேண்டும் , அவனுடைய பில்டிங் சென்னையில் யாரும் நிகரில்லை. நாங்கள் 174 ரன்கள் எடுத்தோம் IOB இற்கு எதிராக, முதல் ஓவர் உமாபதி வீசினான் நான் மிட் ஆனில் நின்னேன், நான் ஓரளவிற்கு பந்து வீசுவேன் என்ற நினைப்பு அந்த ஓவரில் ஓவர் ஆனது, உம்பதி மிக நேர்த்தியாக மிக வேகமாக வீசினான். அந்த போட்டியில் நாங்கள் தோற்றோம் ஆனால் நான் ஜெய் , உமா நட்பை ஜெய்த்தேன். இன்று உமாபதி நம்மிடம் இல்லை ஆனால் அவன் பௌலிங் எங்கள் நினைவுகளில். பின்னர் என்னை நித்யா அண்ணா மாநில கல்லூரிக்கு கொண்ட வந்தார், என்னக்கு MCA அவர் தான் சேர்த்து விட்டார் அதற்கு காரணம் கிரிக்கெட் மற்றும் நட்பு. நாங்கள் பெரும்பாலும் எல்லா போட்டிகளிலும் தோர்ப்போம், ஒரு நிமிடம் யாராவது அமைதியாகவோ வருத்தத்தில் இருந்தால் உடனே சிரிப்பு சத்தமும் கிண்டலும் ஆரம்பிக்கும், வயிறு வலிக்கும் வரை சிரிப்போம் !!!

        கல்லூரி கிரிக்கெட் போட்டிக்காக பெங்களூர் சென்றோம், சென்னை சென்ட்ரலில் இருந்து ரவுசு ஆரம்பித்தது, 'மோட்டிவேஷன் ஸ்பீச்' ராஜ குரு கொடுக்க ஆரம்பித்தான், " நம்ப தான் கப் அடிக்கிறோம் எல்லாரையும் ஓடவிட்றோம்.. கம்மோன் பாய்ஸ்.." என்று உற்சாகத்தின் உச்சத்தில் பேசினான், அருண் கேப்டன் அவர் சார்பில் ஒரு சொற்ப்பொழிவு எல்லோரும் அவர் அவர்கள் சார்பில் ஒன்று சொல்ல, வீரவேல் சொன்ன வசனம் இன்றும் எதிரொலிக்கிறது " மச்சி நம்ப கைலையும் பால் இருக்கு பேட் உம் இருக்கு புரிதா !! " அதற்கு ராஜ குரு "என்ன டா இவன் பனியன் இருக்கு ஜட்டி இருக்கு ன்னு சொல்றான் " அருகிலிருக்கும் எல்லோரும் சிரித்தனர், சிரிப்பு வெடிகள் அனையவே இல்லை. மொத்தம் மூன்று  போட்டிகள், முதல் போட்டி "கம்மோன் பாய்ஸ் அந்த வெறி இருக்கணும் விட்றாதீங்க" என ராஜ குரு கர்ஜிக்க, பெங்களுர் சேவியர் கல்லேஜ் எதிரே தோற்றோம் அது ஒரு நல்ல தோல்வி தான் பின்னர் பச்சையப்பன் கல்லூரி எதிராக இதில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆகா வேண்டும் , போட்டியின் முன்னர் "கம்மோன் பாய்ஸ், அந்த வெறி இருக்கணும் விட்றாதீங்க .."  என திரும்பவும் ராஜ குரு. படு தோல்வி அடைந்தோம் , நான் மட்டுமே மூன்று கேட்ச்கள் விட்டேன், மூன்றாவது கேட்ச் விடும் போது வெளியே இருந்து "விக்கி .. கேட்ச் பிடிக்காத அது நம்ப காலேஜ்க்கு கௌரவதி கிடையாது..." விட்டவுடன் "மச்சான் காலேஜ் கௌரவத்த காப்பாத்திட்டான் டா" என்று திரும்பவும் ஒலித்தது, யாரா அது என பார்த்தால் ராஜ குரு !! வெளியே வந்து கேட்டேன் "மச்சா ராஜு, நீயும் கலாசிட்டுயே டா .." அதற்கு "இல்ல மச்சான் எப்படியும் நீ விற்றுவ சரி உன்ன காப்பாத்தலாமேன்னு தான் " என்றவுடன் தோற்ற சோகம் சிரிப்பால் அடித்து விரட்டப் பட்டது. மூன்றாவது மேட்ச் முன்னர் "கம்மோன் பாய்ஸ் அந்த வெறி இருக்கணும் விட்றாதீங்க லாஸ்ட் மேட்ச் ல நம்ப யாருன்னு காமிங்க" என்று குரு சூளுரைத்தான், நித்யா அண்ணா ஓபனிங் சென்றார் முதல் பாலிலே வெளியே வந்தார். "கம்மோன் நித்யா சீக்கிரம் வந்துட்டான் என் செல்லம் பேச்சி துணைக்கு ஆளில்லா வா.. வா"  என்றான் வீர வேல். அந்த போட்டியிலும் படு தோல்வி, அப்போதும் ராஜ குரு "கம்மோன் பாய்ஸ் அந்த வெறி இருக்கணும் நம்ப ட்ரைன  விட்ர கூடாது சீக்கிரம் வாங்க " என்றவுடன் எல்லோரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டோம், இதில் செந்திலும் நானும் தான் பாவம், செந்தில் அவ்வளவு ரன் அடித்தது கூட இல்லை ஆனால் பெளலிங்கில் விட்டான், அப்படி அந்த பெங்களுர் பயணம் முடிந்தது.

        வீர வேல் ஒரு சம்சா திருடன், ஒரு நாள் டீ கடையில் கண்ணாடி பெட்டிக்குள் மூன்றே மூன்று சம்சா தான் இருந்தது அதை திருடி சாபிட்டான், வீர வேல் " மாஸ்டர் , மொத்தம் அஞ்சு டீ.." என்றான் , "அப்போ சம்சா க்கு யாரு காசு தருவா" என மாஸ்டர் சொன்னார், அதற்கு வீர வேல் "நாங்க எங்க சம்சா சாப்டோம் ".

"டேய் திருடறது தான் திருடர பத்து சம்சால ஒன்னு திருடனா தெரியாது மூணு ஒன்னு திருடனா எப்படி டா" என சிரித்துக்கொண்டே கொண்டே சொன்னார் மாஸ்டர். இப்படி மெரினா நண்பர்கள் அருகில் இருந்தாலே நேரம் ராக்கெட்டில் ஏறும். நண்பனுக்காக என்ன வேணாலும் செய்வோம் நாங்கள் என்று சொல்லுவார்கள் ஆனால் அதை செய்தவர்கள் மெரினா நண்பர்கள், ப்ரெசிடெண்ட் கிருஷ்ணாவின் தந்தைக்கு திடீர் என உடம்பு செரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அடுத்து 20 நிமிடங்களில் நண்பர்கள் அங்கு இருந்தார்கள், இது காந்தி சிரிக்கும் நோட்டுகளுடன் இல்லை உறுதுணையின் பாட்டுடன். அன்று யாரோ ஒருவர் ஹார்ட் அட்டாக் வந்து ஆட்டோவில் இருந்தார் அவர் கூட அவரது மனைவி அழுது கொண்டே "டாக்டர் கூப்டுங்க ..." என்றார் , ராஜ குரு அவரை தூக்கியபோது அவன் கையில் அவரது மலம் , சிறுநீர். அதை பொருட் படுத்தாமல் ஓடினான். அந்த க்ஷணம் ராஜ குருவும் மெரினா நண்பர்கள் வேறு உயரத்திற்கு சென்றார்கள். நண்பனுக்காக மட்டும் இல்லை யாருக்காகவும் நாங்கள் இருப்போம், சிரித்துக்கொண்டே இருக்கும் மனதில் தான் கடவுள் இருப்பார் என்பது எவ்வளவு உண்மை.
முரளி பெரிய தமிழகத்தில் கிரிக்கெட்டர் அவன் தன் நண்பன் செந்திலின் பிரச்சனையில் சண்டைப் போட்டது," பிரிண்டு குடுப்பம் என் குடுப்பம் விக்கி ... என்னக்கு எவ்வளவு அடி ஊன்தாலும் பரவா ல நான் பாத்துடுவேன்" என்றான் முரளி. நட்பிற்கு எடுத்துக் காட்டு மெரினா நண்பர்கள். 'சைப்பா' மணி , செந்திலின் அண்ணன் எனது முதல் நண்பன் மாநில கல்லூரியில், பார்க்க நடிகர் சூர்யா போல இருப்பான். அவன் நேரத்தின் திருடன் அவனிடம் இருந்தால் நேரத்தை பிக் பாக்கெட் செய்வான், அறிந்தும் அறியாமலும் என்ற படத்திலும் நடித்தான். எங்கோ சென்றிருக்க வேண்டும் ஆனால் சிபாரிசும் வாரிசும் தான் இங்கு ஆதிக்கம், மணியும் ஒரு unsung மெரினா ஹீரோ. மெரினா நண்பர்கள் உணவு இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் கிரிக்கெட் இல்லாமல் இருக்க முடியாது. எல்லோரும் நிச்சயம் தெற்கு மண்டலத்திற்காக ஆட தகுதி பெற்றவர்கள் ஆனால் அங்கிருந்து யாரும் இடம் பெறவில்லை, முரளி, ஜெய் , அசோக் , 'சூலை' மணி  என பலர் பெரிய கிரிக்கெட் ஆட முடியாமல் போனது காலம் காரணமில்லை மேற்தட்டு மக்கள் அவர்களுக்குளே போட்டப் பாலம் தான் !!

      இப்படி பல இன்னல்கள், தடைகள் இருந்தாலும் மெரினா நண்பர்கள் சிரிப்பும் மகிழ்ச்சியும் விழி போல வழி முழவதும் சுற்றத்தினர்க்கு நம்பிக்கையாக இருக்கும், மெரினா விற்கு சென்றால் இவர்கள் நினைவுகள் என்னுள் அலை போல புன்னகையாக மோதும் ....
மெரினாவின் மகிழ்ச்சிகள் அலாதி !!!!
     

Saturday, March 28, 2015

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 7

இடுக்கண் களைவதாம் நட்பு ...

      நட்பில்லாமல் நாட்கள் இல்லை, நாட்களில்லாமல் நட்பில்லை. துன்பங்களில் ரத்த சொந்தங்கள் தள்ளி நின்றாலும் நம் துன்பங்களை அள்ளி வீசும் JCP இயந்திரம், வாழ்கையின் புரிதல் நட்பால் ஏற்படும் ஒவ்வொரு கட்டத்தில். நட்பெனும் வாசல் அன்பெனும் தோரணையில் நம்மை வரவேற்கும், நண்பனின் மனம் உழன்று அழும் போது நட்பிற்கு மட்டுமே அது கேட்கும், கடினமான சமையங்களில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகும் நட்பு. இது போல வெவ்வேறு உவமைகள் கூறிக் கொண்டே செல்லலாம், இந்த தொடர் உங்களின் நட்பின் சிறந்த நிகழ்வை கண்ணாடி பிம்பமாக காட்டும் என நம்புகிறேன்!

                     எனது வகுப்பு தோழர் ராயப்பன், ஆசிரியர் படிப்பு முடித்து இளங்கலை கணிதம் சேர்ந்திருந்தார், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்தார் ராயப்பன்.கல்லூரி படிப்பு செலவிற்காக பகுதி நேரமாக ஒரு கடையில் வேலைப் பார்த்தார். அவரால் ஒரு வேலை சாப்பிடும் அளவிற்கு தான் பணமிருக்கும் நான்கு இட்லிகள் வாங்கி , காலை இரண்டு இட்டிலிகளும் மீதம்  இவரைப் பார்த்து இறக்கப் பட்டு கெடாமல் இரவுவரை இருக்கும்.தண்ணீர் எனும் அடியாளை வைத்து இவர் பசியை தற்காலிகமாக அடிப்பார். எங்கள் கல்லூரியில் வருமையிலுள்ள மாணவர்களுக்கு என்று நிதி ஒதுக்கப்படும், அதில் ராயப்பன் தன் பெயர் கொடுத்தும் இல்லை யாராவது பரிந்துரை செய்தாலும் அவர் நிராகரித்து விடுவார், ஒரு நண்பன் கேட்டான் " ஏன் ராயப்பன் 'புவர் பாய்ஸ் பண்ட்'  வாங்கல" என்பதற்கு, "என்னைவிட யாராவது கஷ்டப்பட்ரவங்களுக்கு உதவியா இருக்கும் " என்றார். அந்த மனிதனின் குணத்திற்கு வறுமை அழுது அழியும்!. ராயப்பன் முதல் நான்கு செமஸ்டர்களில் முதன்மை பாடமான கணிதத்தில் 100/100, அன்று வரை எங்கள் துறையில் யாரும் இதை நிகழ்த்தியது கிடையாது. ஐந்தாவது  செமஸ்டர் வகுப்புகள் ஆரம்ப நிலையில் ராயப்பனை காணவில்லை அவர் எங்கே சென்றார் எப்படி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.இளம் பருவம் பெண்கள் மகிழ்ச்சி சிரிப்பு என்று கடந்த காலம் ராயப்பனை பற்றி பேசுவோம் பரிதாபப்படுவோம் அவ்வளவு தான், சிலர் மட்டும் தோழர் ராயப்பனை கண்டு பிடித்தார்கள், அவர் உடல் நலக் குறைவால் பாண்டிச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மாதமாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்தார். 20 வயது தான் இவர்களுக்கு அன்று ஆனால் நட்பின் முதுமையும் தெளிவும் மிகுந்தவர்கள். ஜான் அல்போன்ஸ் , திலிப் சந்தோஷ், ரவீந்திரன் , பெல்லார்மின் , ஹேமந்த் , கமல் , செல்வா, ஜாக் பிரதர், ஜூலியஸ், தேவா மற்றும் ஷங்கர் ராம், இவர்கள் ராயப்பனுக்காக பாண்டிச்சேரிக்கு விரைந்தார்கள், பண உதவி செய்தார்கள் அதைவிட நல்ல மன தெம்பு கொடுத்தார்கள். இது ஒரு நாளில் முடியவில்லை திலிப் அவ்வப்போது சென்று ராயப்பனை சந்திப்பான், பின்னர் உடல் நலனுடன் திரும்பியபின் அவரால் ஐந்தாவது செம் வரவும், எழுதவும் முடியவில்லை; நண்பர்கள் அனைவரும் கணித துறையின் முன்னணி பேராசிரியர் விக்டர் அவர்களிடம் நிலைமையை கூறி ராயப்பனை ஆறாவது  செம்மிற்கு அனுமதி கேட்டு அவரை வரவழைத்தனர். எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் நண்பனுக்காக எதையும் செய்யும் பலருடன் என் நாட்கள் கடந்தது. இன்று ராயயப்பன் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிகிறார், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் அவரைவிட இவர்களுக்கு (ஜான் அல்போன்ஸ் , திலிப் சந்தோஷ், ரவீந்திரன் , பெல்லார்மின் , ஹேமந்த் , கமல் , செல்வா, ஜாக் பிரதர், ஜூலியஸ், தேவா மற்றும் ஷங்கர் ராம்) தான் மகிழ்ச்சி அதிகம்...

       என்னை முற்றிலும் உலுக்கிய நிகழ்வு, ஒரு நண்பன் இருந்தான்,அவனாலும் கல்லூரி படிப்பிற்கு பணம் கட்ட முடியாத சூழ்நிலை அவன் யாரிடமும் கூறவில்லை, பாதர் ஒருவருக்கு மட்டும் தெரியும் அவர் பல தெரிந்தவர்களிடம் பண உதவி கேட்டார் இறுதியில் யாரோ ஒருவர் மூன்றாண்டுக்கும் அவரே மொத்த செலவையும் ஏற்கிறார் என்றானது. யாருக்கும் தெரியாது அந்த நண்பன் ச்பான்சரில் படிக்கிறான் என்று. அவன் நன்றாக படித்தான் தேர்ச்சியும் ஆனான், நாட்கள் சென்றது அந்த நண்பனுக்காக ஸ்பான்சர் செய்தது எங்கள் அருகிலிருக்கும் இன்னொரு நண்பன். இன்று வரை அவன் இதை யாரிடமும் சொன்னது கிடையாது எனக்கு இந்த செய்தி அன்றே பாதர் மூலம் தெரியும். எப்படி ஒருவன் தன் வகுப்பு நண்பன் ஒருவனுக்கு உதவி செய்து அதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று மூன்றாண்டுகள் இருந்திருக்க முடியும். இந்த சம்பவம் மூலம் அவனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். தன் சக தோழனுக்கு என்ற ரீதியில், செய்யும் உதவி நம் நினைவிலே இருக்கக்கூடாது. இந்த பண்பும் பெருந்தன்மையும் நண்பனிடம் மட்டும் காண முடியும், எல்லா உறவுகளும் ஒரு பிரதிபலன் எதிர் பார்த்து வரும் ஆனால் நட்பு மட்டும் எதுவும் எதிர் பார்க்காது. அந்த நண்பன் எங்கள்  வகுப்பை அலங்கரிக்கிறான் நட்பின் கோலமாக !!!!

        இன்னொரு  நிகழ்வு - ஜான் சபா, வேலை தேடும் முனைப்பில் இருந்தான் மூன்றாம் ஆண்டு முடிவில். காம்பஸ் இன்டர்வ்யு வில் அவன் சிரமப்பட்டு இருந்தான், நானும் அவனும் சதர்லாந்து கால் சென்டர் இன்டர்ய்வு விற்கு செல்ல ஆயுத்தம் ஆனோம், பெட்ராம் ஹால் என்று சொல்லகூடிய பெரிய அரங்கில் நடந்துக் கொண்டிருந்தது. வெளியே நின்றோம் உள்ளே செல்லவில்லை நான் சொன்னேன்
 " நம்பளால சதர்லாந்து பொழைக்கலாமா ? அது நம்ப அவங்களுக்கு பிச்ச போட்றா மாதிரி இருக்கும்"
 இதற்கு " சரியா சொன்னே மச்சி " என்றான் சபா.
"மச்சி டாஸ் போட்டு பாக்கலாம்" என்று சொல்லி முடிவெடுக்க, தலை விழுந்தால் இன்டர்வ்யுவிற்கு போகிறோம் பூ விழுந்தால் கான்டீன் இந்த நிலையில் சபா ஒரு ரூபாய் நாணயத்தை சுண்ட, அட என்ன தான் விழுந்திற்கு பாப்போம் என ஆர்வத்தில் புதைந்த மண்ணில் இருக்கும் நாணயத்தில் பார்த்தல் தலை ! ஒரே அதிர்ச்சி என் மைண்ட் வாய்ஸ் சொன்னது "உள்ள போனாலும் பைல் ஆகா போறோம் என்னடா ஒரு சாம்பார் ரைஸ் கூட சாப்ட விட மாற்றியே ஆண்டவா "  என புலம்ப.
 சபா சொன்னான் " மச்சி பெஸ்ட் அப் த்ரீ போடலாம் டா "
"மச்சி நீ தான் டா என் உயிர் ப்ரெண்ட்" என்றேன்.
பின்னரும் தலை தான் விழுந்தது நாங்கள் பூ விழும் வரை விடவில்லை அன்று காண்டீனில் சாம்பார் ரைஸ் சாபிடாமல் செல்லவில்லை.
இப்படி சபாவிற்கும் எனக்கும் இன்டர்வ்யு அலர்ஜி, பின்னர் தீவிரமாக தகவல் தொழில்நுட்பத்தில் வேலை தேடினான், ஆப்டிடுயூட் தேர்வில் மிகவும் சிரமப்பட்டான் . நண்பன் ஜான் அல்போன்ஸ் மற்றும் உதயா இருவரும் சபாவிற்கு சொல்லிக் கொடுத்தார்கள், அவர்கள் இருவரும் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து இருந்தது. ஆப் காம்பஸ் அண்ணா யூனிவர்சிட்டியில் நடந்தது, அப்போது உதயாவும் ஜானும் தேர்வை எடுத்துக்கொண்டனர் சபாவிற்காக.இருவரும் சபா அருகே அமர்ந்து ஆப்டிடுயூட் தேர்வு விடைகளை சொல்லிக் கொடுத்தனர். தனக்கு வேலைக் கிடைத்துவிட்டது கல்லூரியும் முடிவுற்றது இனி என்ன என்றில்லாமல் நண்பனும் நன்றாக வரவேண்டும் என்று நினைக்கும் எண்ணம் சொந்தங்களை விட நண்பனுக்கு அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று சபா , ஜான் , உதயா அவர்கள் மனதைப்போல நன்றாக இருக்கிறார்கள்.
    
         நம் துன்பங்களில் காலிங் பெல் அடிக்காமல் அதை கண்டறியும் துப்பறியும் சாம்பு நண்பர்கள், மேற் கூறிய நிகழ்வுகளைப் போல் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும் அதை அசை போடுவதற்கு இது சுவிங் கம் ஆகா இருக்கும் என்று நம்புகிறேன்.