இமையத்தின்
உச்சியில் அண்ணாமலை
ஏறக் குறைய மூன்று தசாப்த காலமாகத் தமிழ் இலக்கியவுலகின் தவிர்க்க முடியாத பெயர், "இமையம்". அவரது பதினான்கு படைப்புக்களும் , சிற்றிதழுக்கு
, தின
இதழ்களுக்கு அவர்
எழுதிய கட்டுரைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எழுத்திலும் பொது வாழ்விலும் எவ்வித சமரசங்களற்ற போக்கை மேற்கொள்ளும் பண்பு அவரை அப்பழுக்கில்லா எழுத்தாளரென உளப்பூர்வமாக சொல்லத் தோன்றுகிறது.
அகமொன்று வைத்து புறத்தே எழுதி, பேசி நகர்கிற சந்தையில் உண்மையினூடாக ஒரே நிறத்துடன் கடையைப் விரித்திருப்பது எளிதல்ல.
இமையம்
அவர்களின் கதை மாந்தர்கள் உண்மையின் எழுச்சிகளே ! ஆணாதிக்க
சமூகத்தின் கொடுங்கூற்றினை பகிரங்கமாக கண் முன்னிறுத்தி கூறும் கதைகளினூடாக பெண்ணின் அகச் சிக்கல்களைக் கட்டவிழுக்கும் இலாவகமே வாழ்வின் மீட்சி. கோவேறு கழுதைகள் முதல் இப்போது உயிரோடிருக்கிறேன் வரை பெண்களின் கதாப்பாத்திரங்கள் திண்ணமான உண்மையின் சாட்சியங்கள். சமூகத்தின்
பெரும் கிழிசலை மூன்று தசாப்த காலமாக தைத்தவருக்கு , "செல்லாத பணம்" வாயிலாக கிடைத்த சாகித்ய அகாடெமி விருது சொச்சமே !
உயிர்க்காக்கும் மருந்தா ? உயிரை எடுக்கும் மருந்தா ?? எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் கட்டுமானம் அளப்பரியது, இக்கட்டுரை 2019 ஆம் ஆண்டு, வெளியானது. அன்றைய அரசின் மருத்துவ ரீதியான ஆற்றாமையை கேள்வி கேட்கும் தைரியம் இமையத்திற்கு மட்டுமே உரித்தானது.தமிழகத்தில், ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பிரச்சனைகள் இருக்கின்றன என்கிறது புள்ளி விவரம். சிறுநீரகம் செயலிழந்து, மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளுக்கு மாதந்தோறும் இலவசமாக அன்றைய அரசு, ‘உயிர் காக்கும் மருந்துகள்’ என்று
வழங்குகிறது. குடும்ப
ஆண்டு வருமானம் ரூ.72,000 உள்ளவர்களால் மட்டுமே இலவச மருந்துகள் பெற முடியும். இவ்வழிவகைகள் யாவும் பலருக்கு முற்றிலும் எட்டாக்கூற்று. சிறுநீரக உபாதையினால் அவதிப்படும் மக்களுக்காகப் பல கட்டுரைகள் எழுதி
இருந்தாலும், "இப்போது உயிரோடிருக்கிறேன்" என்ற நாவல் தரும் வெப்பம் எளிதில் ஆறுவது அல்ல.
எளிமையான மொழிநடை மற்றும் நுட்பமான கூறுகளை இலாவகமாகச் சொல்லும் பாங்கினால் கதையின் நீரோட்டத்தில் ஒன்றி நகர்வோம். இன்றைய சூழலில் எல்லாவற்றிக்கும் சலிப்பு , பொறுமையின்மை, புலம்பல் என பல்வேறு அரூபங்களின்
நிழல் ஏந்தும் நிஜமாய் அலைகிறோம். தத்துவ வியாக்யானங்களை மருத்துவமனையிலோ அல்லது துக்க வீட்டிலோ பேசி அலுத்து அடுத்த நாள் அரூபங்களின் நிழலாக மாறும் மனநிலையே படர்ந்திருக்கும். வெள்ளந்தியான
பெற்றோர் தன் பதின் பருவ மகனின் சிறுநீரகங்கள் செயலிழந்து போக அதனால், அவர்கள் முன்னெடுக்கும் மருத்துவப் போராட்டம் அதனூடே நுண்ணியலான மருத்துவ புரிதல்களை மிக நேர்த்தியாக வாசகனிடம் கடத்திவிடுகிறார். அருணாச்சலம் ஒரு சிறிய மில் வைத்து ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளந்தியானவர். அவரது மனைவி வள்ளியம்மை. இவர்களுக்கு தமிழரசன், தமிழரசி எனும் மகன் மகள் இருக்கிறார்கள். தமிழரசன் பள்ளியை விட்டு வருகையில் காய்ச்சலும் மயக்கமும் வர அங்கிருந்து கதை
நகர்கிறது. தமிழரசன் உடல் நிலை நலிவடைய
, பெரிய மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிறகு தான் தெரிகிறது
, தமிழரசனுக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டதென்று. மாத்திரை
உட்கொண்டால் சரியாகிடுமா என்ற படிப்பினையே பெற்றோர்களுக்கு இருக்கிறது. பயமுறுத்தும் மருத்துவ சொற்களும் அணுகுமுறையும் எளிய மக்களை எப்படி சித்திரவதைச் செய்கிறது என்பதை மிக கனமாக பதிவு செய்திருக்கிறார்.
'டயாலிசிஸ்' செய்துகொள்ளும் நோயாளிகளின் சிரமங்கள் , பிஸ்டுலா என்றால் என்ன ?? கழுத்தில் ஐ.ஜே.வி
,தொடையில் துளைப் போட்டு மேற்கொள்ளும் டயாலிசிஸ் முறை; சிறுநீரக மாற்று அறுவை
சிகிச்சைக்கு கிராஸ் மேட்சிங் , ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வளவு கிரேட்டின் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு அடுக்குகளைக் கதையின் நீரோட்டத்தியில் சொல்லியிருப்பது பெரும் படிப்பினை. தமிழரசன் ஒரு நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவு அரை கிளாசுக்கும் குறைவாகவே இருக்கும், அவன் மன ரீதியான போராட்டம்,
அம்மா அப்பாவின் கவலை தோய்ந்த சொற்களைக் கேட்டு உடையும் தருணங்களில், இப்படியாக சிரமத்துக்குளிருப்போரை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஒரு கட்டத்தில் தனது அம்மாவின் சிறுநீரகம் பொருந்த அதன் பிறகு அறுவைசிகிச்சை நடக்கும் வரை நிகழும் போராட்டம் வர்ணனைக்குள் அடங்காதது.
நாவலிலிருந்து,
"நோயாளியாய் இருக்கிறத விட நோயாளி கூட இருக்கிறது தான் பெரிய கஷ்டம். ஒரு நிமிசத்தில போற உசுருக்கு தான் எம்மாம் போராட்டம்"
மகனின் துயரைப் போக்கும் பெற்றோரின் கையறு நிலையை மதிப்பதைவிட மிதிக்கவே செய்கிறது மருத்துவமும் அதிகாரமும். நாவலில் வரும் கிருஷ்ணனும் திலகவதியும் நிழலாடும் நிஜங்களே. ஒரு எழுத்தாளன் இச்சமூகத்திற்கு என்ன செய்துவிட முடியும் என்றால்
"இப்போது
உயிரோடிருக்கிறேன்"
என்ற நாவலை எழுத முடியும் . இருத்தலுக்கும் இருத்தலின்மைக்கும் நடுவே வாழ்க்கையின் அரிதாரங்ளைப் பூசவும் செய்யலாம், கலைக்கவும் செய்யலாம்.
அவசியம் வாசிக்க வேண்டிய நாவல், 'இப்போது உயிரோடிருக்கிறேன்'.
No comments:
Post a Comment