மாற்றம் இல்லா சிரிப்பு சிறப்பு தான் !
வாழ்கையெனும் தோட்டத்தில் வெவ்வேறு மலர்கள் பூத்திருக்கும், சில நேரங்களில் மகிழ்ச்சியும் சில சமயங்களில் இன்னல்களும் மாறி மாறி பூக்கும் காலத்திற்கேற்ப இதன் முரணாக எல்லா தருணங்களிலும் ஒரே சிரிப்பை வைத்து மகிழ்ச்சியையும் கொண்டாடி, ஒரே சிரிப்பை வைத்து இன்னல்களை சமாளிப்பது வெகு குறைவு என்றே கருதலாம்.இத்தகைய மாந்தர்கள் உங்கள் வாழ்வில் அவசியம் உலாவியிருப்பர்கள் அதை நினைவு கூற நான் பயணித்த சிலர் உங்களுக்கு உதவுவார்கள் என நினைக்கிறேன்.
மணிமாறன் எங்கள் கணிதத்துரையின் ஜே.எஸ் ( J S ) மூன்றாமாண்டின் போது தேர்வு செய்யப்பட்டான், எல்லோருடனும் ஒரே சிரிப்பு தான் அவன் கலக்கத்தில் இருந்தாலும் ஒரு குழந்தையின் புன்சிரிப்பு தொனித்து கொண்டிருக்கும். கணித துறையில் சுமார் 75 பேர் இருப்போம் அனைவருமே ஒரு கூட்டு பறவை போல வெளியே யாரிடமும் விட்டுக் கொள்ளாமல் இருப்போம், நான் சொன்னது போல மூன்றாமாண்டில் ஜே.எஸ் தேர்தல் வந்தது அந்த க்ஷணத்தில் இன்னொரு நெருங்கிய நண்பன் சபாஸ்டின் மணிக்கு எதிரே நின்றான், அது இருவருக்குமே நெருடலான நிகழ்வு. மணியும் சபாவும் நல்ல நண்பர்கள், இந்த தேர்தலில் கணித துறையின் அணைத்து மாணவர்களிடமும் வாக்கு திரட்ட வேண்டும். மணி கல்லூரி விடுதியில் தங்கியிருந்தான் அவன் ஊர் மதுரை, சபாவின் வீடு அருகில் தான், தேர்தலின் முடிவில் மணி வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றான். மணிக்கு தெரியும் விடுதி மாணாக்கர்களின் வாக்கு வந்துவிடும் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று, ஆனால் அவனுக்கு மனதில் பெரும் சோகம் பீடித்துக் கொண்டிருந்தது அதை என்னிடம் பகிர்ந்தான் "மச்சா நான் தோத்தா பரவாயில்ல ஆனா சபா தோத்துட்ட அவன நான் எப்படி பார்பேன் " என கவலையுடன் சிரித்தான் ;"டேய் நீ அவன இந்த எலக்ஷன் ல மட்டும் தோக்கடிக்க மாட்டே" என்று மனதுக்குள் நினைத்துள்ளேன்.
வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே சிரிப்பு தான் மணிக்கு அது வியப்புக்குரியது, அவன் யாரை சந்தித்தாலும் அந்த சிரிப்பு எல்லோரையும் கவரும், இன்று மணி அதே சிரிக்கும் நல்ல மனதோடு யாரையோ மகிழ்வித்து கொண்டிருப்பான். சன் டிவி யில் HR ஆகா பணிபுரிகிறான், அவன் மகனின் சிரிப்பு மணியின் மனதில் தெரிந்தது ஒரு நிழற்படத்தில்.
மணிமாறன் சிரிப்பின் ஆழம் போல் இன்னொரு நண்பன் காலின்ஸ் இவன் சிரிப்பு முற்றிலும் சிறப்பு, எந்த எதிர் பார்ப்பும் இல்லாத முறுவல். அவன் ஒரு குழந்தை போல தேவை இல்லாமல் சண்டைக்கு இழுப்பான், "என்னடா பிரச்சனை ?" என்று கேட்டால், "போன மாசம் கலாச்ச ல அதுக்கு" என்பான். இந்த வார்த்தை சொன்னவுடன் மச்சா சாரி டா என்று சிரிப்பான், களங்கமே இல்லாமல் இருக்கும் அந்த சிரிப்பு.
நம்மில் எத்துனை நபர்களுக்கு இந்த சிரிப்பு வாய்க்கும் உள்ளே ஒன்று வெய்த்து வெளியே தான் சிரிப்போம்.
ஒரு நாள் காலின்ஸ் கழுத்தில் நெக் பேண்ட் அணிந்து வந்தான், "என்னடா மச்சா இது" என்று ஆண்டோ கேட்டான். கழுத்து வலி என்று காலின்ஸ் கூற , அன்று வகுப்பு ஆரம்பிக்க அது எங்கள் கணித ஆசிரியர் விக்டர் தேவதாஸ் வகுப்பு, மிகவும் கண்டிப்பானவர். அந்த நேரத்தில் ஜீசஸ் , அல்லா , பிள்ளையார் என எல்லா கடவுளையும் துணைக்கு அழைப்போம் "சாமி இந்த ஆள் என்ன எதாவது கேள்வி கேட்டு பதில் தெரியலனா , என்னோட செத்துப்போன தாத்தாவோட தாத்தாவையும் தா ன்னு திட்டுவான், என்னை கேக்க கூடாது பா " வேண்டுவோம், அன்றைக்கு காலின்ஸ் க்கு அடிச்சுது ஜாக்பாட் விக்டர் சார் கல்லின்சை கேள்வி கேட்டார் அதற்கு அவன் தன் தலையை ஹை ஸ்பீட் காட்சிபோல (SLOW BY * 3X) திருப்பினான்.
" என்னடா காலின்ஸ், வேல செய்யாத டேபிள் பேன் மாதிரி திருப்புற, நல்லா நடிக்கிற " என்றார். காலின்ஸ் க்கு எங்கு இருந்து அந்த ஆவேசம் வந்தது என்று தெரியவில்லை "சார் ! என் வலி எனக்கு தான் தெரியும், உங்களுக்கு வந்தா தான் தெரியும்" என்று கூறினான். கழுத்து வலி கூட அமர்தாஞ்சன் போட்டால் இரண்டு நாளில் போய்விடும்,ஆனால் கல்லின்சின் இந்த ஆவேச வலி மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது. விக்டர் சார் பெரிய பிரச்சனையாக உருவாக்கினார், தினமும் தன் சொல் எனும் குண்டு ஊசியால் கல்லின்சின் கழுத்தை குத்தி குத்தி விளையாடுவார்.
இன்று காலின்ஸ் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறான், என்றாவது நட்பு வட்டாரம் கூடினால் அவன் சிரிப்பை எங்கள் மனதில் சிறை பிடிப்போம் !!! காலின்சின் சிரிப்பு இன்றும் ஒரு மலரின் புன்னைகை போல் ஒரே வண்ணம் தான், உங்கள் வட்டத்திலும் காலின்ஸ் , மணி போல கள்ளமில்லா சிரிக்கும் நண்பர்கள் இருப்பார்கள். இவர்களை நீங்கள் படிக்கும் போதே உங்கள் நட்பின் சிரிப்பு மனதிற்குள் பூக்கும் !!
காலின்சை சொல்லும்போது சிரில் சில்வஸ்டர் பிரவீன் என்ற நண்பனும் பிளாஷ் கட்டில் வந்து செல்கிறேன். சிறிலின் சிரிப்பு தனி அவனும் கணித பிரிவு தான் எல்லோரிடமும் கனிவான சிரிப்புடன் இருக்கும் சுபாவம் கொண்டவன். சிரிப்பு எனும் மத்தாப்பு என்றும் அவன் முகத்தில், சிரில் ஒரு புன்னகை போராளி என்று சொல்லலாம், எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும் சிரித்துக்கொண்டே முடித்துவிடுவான் , சிரிப்பு வித்வான்.அவனுக்கு இருக்கும் மன நெருக்கடியின் அடி மிக நீளம் அதன் வலியும் நீளம், இதுவரை சிரில் முகம் சோர்ந்தோ அல்ல ஒப்பாரி வைத்து தன் துன்பங்களை விளம்பரம் செய்ததில்லை இது மிகவும் அறிய குணாதிசயம், இன்றிய உலகில் எதாவது சோகமாக சொன்னால் சாதகமாக நடக்கும் என்கிற சூழலில் சிரில் ஒரு புத்துணர்ச்சியான லிரில் சோப்பு !!!
சிரில் சிரிப்பை வாசிக்கும் போது உங்களின் நண்பனின் சிரிப்பும் நினைவுக்கு வந்தால் சிரில் ,மணிமாறன் மற்றும் காலின்ஸ் க்கு மகிழ்ச்சி !!!
நெஞ்சம் எல்லாம் மகிழ்ச்சி , நன்றி டா நண்பா love you
ReplyDelete